ஜார்கண்ட்: முஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்து கொன்றது தொடர்பாக 11 பேருக்கு ஆயுள்

  • 22 மார்ச் 2018

கடந்த ஆண்டு முஸ்லிம் இறைச்சி வியாபாரி ஒருவரை அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஜார்கண்ட் மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

55 வயதான அலிமுதீன் அன்சாரி மாடுகளை லாரிகளில் ஏற்றி அனுப்பியதற்காக அடித்து கொல்லப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக 'பசு பாதுகாவலர்‘ என்ற பெயரில் முஸ்லிம் இறைச்சி வியாபாரிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் முதல்முறையாக 11 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் பசுவை புனித விலங்காக கருதுகிறார்கள். ஜார்கண்ட் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பசுக்களை கொல்வது குற்றமாகும்.

'பசு பாதுகாவலர்‘ என்ற பெயரில் பிறரை தாக்குவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆனால், காவல்துறையினர் நடத்திய பல விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்படுவோர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

Image caption கோப்புப்படம்

அன்சாரியின் கொலை தொடர்பாக 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. 12வது நபர் வயதுக்கு வராதவர் என்பதால், நீதிமன்றம் அவரை இந்த தீர்ப்பில் இருந்து விடுவித்துள்ளது.

"குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கேட்டுள்ளோம்" என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுசில் குமார் சுக்லா 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்திருக்கிறார்.

12வது சந்தேக நபர் 16 முதல் 18 வரையான வயதில் இருப்பதால், நீதிமன்றம் அவரை இந்த தீர்ப்பில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த தீர்ப்பால் தன்னுடைய குடும்பம் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்த அன்சாரியின் மகன் ஷாபான் அன்சாரி, மாநில அரசிடம் இருந்து எவ்வித இழப்பீடும் வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption "எனது கணவரின் இறப்பு சோகம் மிகுந்த இழப்பு" - அன்சாரியின் மனைவி மரியம் காட்டுன்

"தன்னுடைய கணவரின் இறப்பு சோகம் மிகுந்த இழப்பு" என்று நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அன்சாரியின் மனைவி மரியம் காட்டுன், "மேலதிகமாக ரத்தம் சிந்தப்படுவதை விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.

"தன்னுடைய குடும்பத்துடனும், சமூகத்துடனும் அமைதியாக வாழவே விரும்புகிறேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி இந்தியாவை ஆளத் தொடங்கியது முதல் பசு பாதுகாப்பு குழுக்கள் என்ற பெயரில், மாட்டிறைச்சியை முக்கிய உணவாக உட்கொள்ளும் முஸ்லிம்கள் மற்றும் தலித்துக்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பசு பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்தோர் என்று கூறப்படுவோரால் முஸ்லிம்கள் மற்றும் தலித்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கியதால் பல்வேறுபட்ட நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இதுவரை பத்துக்கு மேற்பட்டோர் இத்தகைய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். வதந்திகளின் அடிப்படையில் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். பாலுக்காக மாடுகளை அனுப்பி வைத்த முஸ்லிம்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: