புதுச்சேரியில் பா.ஜ.கவினர் எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லும்: உயர்நீதிமன்றம்

  • 22 மார்ச் 2018

புதுச்சேரி மாநிலத்தில் நியமன எம்.எல்.ஏக்களாக பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மூவரை மத்திய அரசு நியமித்தது செல்லுமென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை KIRAN BEDI

புதுச்சேரி மாநிலத்தில் நியமன எம்.எல்.ஏக்களாக மூன்று பேரை நியமிக்க முடியும் என்ற நிலையில், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏக்களாக கடந்த ஜூலை மாதத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார்.

இந்த நியமனங்களை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.

சபாநாயகர் வைத்தியலிங்கம் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க மறுத்தார். அதனால், ஆளுநர் கிரண்பேடியே பதவிப்பிரமாணமும் செய்துவைத்தார்.

ஏற்கனவே முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் இந்த விவகாரம் மேலும் புயலைக் கிளப்பியிருந்தது.

இந்த நியமனங்களை ஏற்க முடியாது எனக் கூறி, இது தொடர்பான ஆவணங்களை சபாநாயகர் வைத்தியலிங்கம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.

அவர்கள் சட்டப்பேரவைக்குள் நுழையவும் பேரவைச் செயலர் தடை விதித்திருந்தார்.

Image caption நியமனங்களை ஏற்க முடியாது என சபாநாயகர் கூறியதால் புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர்.

இந்த நியமனங்களை எதிர்த்து புதுவை ராஜ்பவன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடுத்தார்.

அதேபோல, தங்களை சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டுமெனக்கோரி இந்த மூன்று பேரும் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்த மத்திய அரசு, புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களை நியமிக்க தங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறியது. புதுவை அரசின் ஆலோசனை தேவைப்பட்டால் கேட்கலாம் என்றுதான் விதி இருக்கிறது; இந்த விவகாரத்தில் மாநில அரசின் ஆலோசனை தேவைப்படவில்லை என்று கூறியது.

மாநில அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் இந்த நியமனம் நடந்திருப்பதால், இது செல்லாது என லட்சுமி நாராயணன் தரப்பு வாதிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்திரா பேனர்ஜி, சுந்தர் அடங்கிய அமர்வு, இவர்கள் நியமனம் செல்லும் என்றும் தங்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 15 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்