'உயிருக்கு நிச்சயமில்லை' - பின் ஏன் இந்தியர்கள் இராக் செல்கிறார்கள்? #GroundReport

குண்டுவெடிப்பு, ஐ.எஸ் அமைப்பு, உயிருக்கு நிச்சயமில்லை என்பது எல்லாம் தெரிந்திருக்கிறது. பின் ஏன் இந்தியர்கள் இராக் செல்கிறார்கள்? இந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இராக் சென்றவர்களின் வாழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆம். இராக் செல்வது. அங்கு வசிப்பது ஆபாத்தானது தான். ஆனால், அதே அளவு கொடுமையானது எங்கள் வாழ்வில் நிலவும் வறுமை என்கிறார் 47 வயதான மஞ்சித் கெளர்.

இவர் இராக் மொசூலில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களில் ஒருவரான தாவீந்தர் சிங்-கின் மனைவி.

தாவீந்தரின் கதை

"தாவீந்தர் இங்கிருந்து புறப்பட்ட போது, அவரது சகோதரி அவரை தடுத்து நிறுத்த முயன்றார், 'அங்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அங்கு செல்லாதீர்கள்' என்றார். ஆனால், அவர், `அஞ்சாதீர்கள். எனக்கு ஒன்றும் ஆகாது` என்று எங்களுக்கு நம்பிக்கை அளித்தார்" என்கிறார் மஞ்சித் கெளர்.

"வெடிகுண்டு தாக்குதல்கள் எல்லாம் தொலைவில்தான் நடக்கிறது. நான் வசிக்கும் இடம் பாதுகாப்பாக உள்ளது என்று எப்போதும் சொல்வார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேசிய போது, அவர் கடத்தப்பட்டு இருந்திருக்கிறார். ஆனால், அதை அவர் எங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் பதற்றமடைவதை அவர் விரும்பவில்லை. ஆனால் இப்போது ஏதேதோ நடந்துவிட்டது." என்று பிபிசியிடம் சொல்லும் போதே வெடித்து அழ தொடங்கிவிட்டார்.

தாவீந்தர் ஜலந்தரில் உள்ள ருர்கா கலானில் தான் தினக்கூலியாக பணியாற்றி இருந்திருக்கிறார். ஒரு நாள் வேலைக்கு சென்றால் அவருக்கு ரூபாய் 200 முதல் 250 வரை கிடைக்கும். ஆனால், அவருக்கு தினமும் வேலை கிடைக்காது. இதனால், ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தையாக, வாழ்க்கை வறுமையுடன் சுழன்று இருக்கிறது.

மஞ்சித் ஒரு அறை கொண்ட மோசமான நிலையில் இருக்கும் ஒரு வீட்டில் மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். அவர்களின் வறுமை நிலைக்கு அந்த வீடே ஒரு சாட்சியாக இருக்கிறது.

"மூன்று, நான்கு ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தால் போதும், நாம் சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிடலாம் என்றார்.ஒரு முகவர் மூலமாகதான் அவர் இராக் சென்றார். இதற்காக, அவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கடன் பெற்று அளித்தோம். அந்த முகவரும், இராக்கில் அமெரிக்க படைகள் இருக்கின்றன. அங்கு நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என்றார். ஆனால்... " - என்று சொல்லி முடிக்கும் போதே உடைந்து அழுகிறார்.

மஞ்சித் கெளர் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 2,500 மாத ஊதியத்தில் தையற் கலை பயிற்சி அளிக்கிறார்.

அவருடைய மூன்று மகன்களில், இருவர் இரட்டையர்கள். தாவீந்தர் இராக் சென்ற போது, மூத்த மகனுக்கு 6 வயது. இரட்டையர்கள் எட்டு மாத குழந்தைகளாக இருந்தனர்.

அவர் கடத்தப்படும் வரை, ஊதியத்தின் பெரும்பங்கான 25,000 ரூபாயை எங்களுக்கு அனுப்பி விடுவார் என்கிறார் கெளர்.

நம்பிக்கை

தாவீந்தர் கடத்தப்பட்டப் பின், நான்கு ஆண்டுகள் அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல்தான் அவர் குடும்பம் இருந்திருக்கிறது. ஆனால், தாவீந்தர் என்றாவது ஒருநாள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருந்திருக்கிறது.

"நாங்கள் ஒவ்வொரு முறை சுஷ்மா சுவராஜை சந்திக்கும் போதும், அவர் எங்களிடம் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் என்பார்." என்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இவர்களிடமிருந்து மரபணு மாதிரிகளை அரசு எடுத்திருக்கிறது. ஆனால், அதற்கான காரணத்தை அவர்களிடம் சொல்லவில்லை. "எங்களிடம் எந்த காரணத்தையும் அவர்கள் சொல்லவில்லை. ஆனால், கிராமமக்கள் தாவீந்தருக்கு ஏதாவது ஆகி இருக்கலாம் என்று அனுமானித்தனர்." என்கிறார் கெளர்.

செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் கெளரிடம் தாவீந்தர் குறித்த செய்தியை கூறி இருக்கிறார்கள். "நான் தகவல் கேள்விபட்டதும் உடனே என் அம்மா வீட்டிற்கு சென்றேன். அவர் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்."

தனது குழந்தைகளை பார்த்தவாரே கெளர், "இவர்கள் அப்பா எங்கே என்று கேட்கும் போதெல்லாம், அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்று சொல்லிவந்தோம். வரும் போது உங்களுக்கு மிதிவண்டி வாங்கி வருவார் என்போம். இனி, அவர்களிடம் என்ன சொல்வோம்?" என்கிறார் விரக்தியான குரலில்.

வறுமை... வறுமை... எங்கும் வறுமை

இராக் மொசூலில் இறந்தவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாபிகள் எப்போதும் புதிய வாய்ப்புகளை தேடி வெளிநாடு பயணிப்பவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து ஆபத்தான வாய்ப்புகளை தேர்தெடுத்து இருக்கிறார்கள். இதற்கு இரே காரணம், 'வறுமை`.

இறந்தவர்களில் 32 வயதான சந்தீப் குமாரும் ஒருவர். அவரும் பஞ்சாபை சேர்ந்தவர். தினக்கூலி. கடுமையான வறுமையை அவர் குடும்பம் எதிர்கொண்டு இருந்தது.

நாம் அவரின் கிராமத்திற்கு சென்ற போது, கதவுகளற்ற அவருடைய வீடு நம்மை வரவேற்றது.

"சந்தீப் 2012 ஆம் ஆண்டு இராக் சென்றார். கடுமையாக உழைத்து பணம் ஈட்டி தமது நான்கு சகோதரிகளுக்கும் உதவலாம் என்று பெரும்நம்பிக்கை கொண்டிருந்தார் ." என்கிறார் சந்தீப் குமாரின் சகோதரர் குல்தீப் குமார் சொல்கிறார்,

ஒவ்வொரு மாதமும் அவர் அனுப்பும் தொகையை எதிர்பார்த்துதான் குடும்பம் இருந்தது," என்கிறார்.

இது போல இராக் சென்ற ஒவ்வொருவரும் வறுமையின் காரணமாகவே அங்கு சென்றிருக்கிறார்கள்.

பிரிட்பால் சர்மாவும் இராக்கில் மரணமடைந்தவர்களில் ஒருவர்.

அவரது மனைவி ராஜ் ராணி, "இராக் சென்றால் அதிகம் பணம் ஈட்டலாம் என்றார்கள். ஆனால். அங்கு சென்ற பிறகும் எங்கள் வாழ்வில் எந்த வெளிச்சமும் வரவில்லை. அங்கும் அவர் கடத்தப்படும் வரை பணத்திற்கு சிரமப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: