பகத் சிங்கை விரும்பும் பாகிஸ்தானியர்கள்

  • 23 மார்ச் 2018

"இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கத்தை முன்னெடுத்த பகத்சிங், இந்திய விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய "இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு" புரட்சி அமைப்பின் தலைவர்களுள் ஒருவர். பகத் சிங் பிறந்த கிராமம் பாகிஸ்தானில் உள்ளது. அவர் தூக்கிலடப்பட்ட அன்று அங்கு நடப்பட்ட மாமரம் இன்றும் நிலைத்திருக்கிறது.

Image caption புரட்சியாளர் பகத் சிங்

ஆங்கில அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங், தூக்கிலிடப்பட்டபோதும் சிரித்துக்கொண்டே மரணத்தை முத்தமிட்டவர்.

விடுதலைக்கு முன் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்த லாகூரின் சிறைச்சாலையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதியன்று பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

மூவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டது ஏன்?

லாகூர் கொலை வழக்கு

1928 ஆம் ஆண்டு, "சைமன் கமிஷனை" எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் லாலா லஜபதிராய் போலிசாரின் தடியடியால் இறந்தார். இதனால் சீற்றமடைந்த பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, இதற்கு காரணமான காவலதிகாரி சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்கள். அப்போது அவர்கள் கைது செய்யப்படவில்லை.

அந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிரமாகப் போராடினார்கள். தொழிலாளர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு "தொழில் தகராறு சட்ட வரைவு" என்ற மசோதாவை கொண்டுவந்தது.

இச்சட்ட வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பகத்சிங் "சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்" குண்டு வீச முடிவெடுத்தார். 1929ஆம் ஆண்டு, ஏப்ரல் எட்டாம் தேதியன்று, சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டபோது குண்டுகள் வீசப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

புரட்சியாளர், தேசபக்தர் என்ற சிறிய வட்டத்துக்குள் பகத்சிங்கை அடைத்துவிடமுடியாது. சுதந்திர மனப்பான்மை கொண்ட ஒரு பகத்சிங், காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அல்ல.

1928இல் பகத்சிங், 'கீர்த்தி' என்ற பத்திரிகையில் 'புதிய தலைவர்களின் மாறுபட்ட கருத்துக்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.

பகத் சிங்கின் நான்கு புகைப்படங்கள் மட்டுமே இருக்கிறது

ஒத்துழையாமை இயக்கம் மற்றும் இந்து-முஸ்லிம் மோதல்கள் அளித்த ஏமாற்றங்களுக்கு இடையே நவீன கருத்துக்களை பகத் சிங் எதிர்பார்த்தார். புதிய இயக்கத்தின் அடித்தளத்திற்கு அது அவசியமானது.

பகத் சிங்கின் புகைப்படங்கள் என்று பலரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப புகைப்படங்களை உருமாற்றம் செய்கின்றனர். ஆனால் உண்மையில், பகத் சிங்கின் எத்தனை புகைப்படங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சம்மன் லாலிடம் கேட்டறிந்தோம்.

பேராசிரியர் சம்மன் லால் சொல்கிறார், "உண்மையில், பகத் சிங்கின் புகைப்படங்கள் நான்கு மட்டுமே இருக்கின்றன. 10-11 வயது குழந்தையாக தலைப்பாகை அணிந்த புகைப்படம் ஒன்று. இரண்டாவது 17 வயதில் கல்லூரியில் எடுக்கப்பட்ட கொண்ட குழு புகைப்படம் ஒன்று".

Image caption லாகூர் தேசிய கல்லூரி புகைப்படத்தில் தலைப்பாகை கட்டி நிற்கும் பகத் சிங் (வலப்புறமிருந்து நான்காவதாக நிற்பவர்) (பேராசிரியர் சம்மன் லாலிடமிருந்து பெறப்பட்டது)

அரசியல் கட்சிகளின் பார்வையில் பகத் சிங்கின் புகைப்படங்கள்

"கட்டில் ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட மூன்றாவது புகைப்படம் பகத் சிங்கின் 20 வயதில் அதாவது 1927ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. நான்காவது புகைப்படம் டெல்லி காஷ்மீரி கேட் பகுதியில் ஒரு புகைப்படக்காரர் எடுத்தது. இதில்தான் பகத்சிங் தொப்பியுடன் இருப்பார்.

இந்த புகைப்படத்தை தானே எடுத்ததாக அந்த புகைப்படக் கலைஞர் நீதிமன்றத்தில் சாட்டியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகள் அனைத்துமே பகத் சிங்கின் புகைப்படங்களை தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டாலும், அவருடைய புரட்சிகர கருத்துக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒரு சிலர் அவருக்கு காவி நிற ஆடையை அணிவித்து இந்திய நாகரிகத்தின் பாதுகாவலர் பகத் சிங் என்று காட்ட முயற்சிக்கிறார்கள்.

Image caption பகத்சிங்

பகத் சிங்கின் நாத்தீகம் அல்லது சோசலிச கருத்துடன் தொடர்புடைய அவரது கட்டுரைகளின் அடிப்படையில் எந்தவொரு அரசியல் குழுவும் பகத் சிங்கை பார்க்க முயற்சிக்கவில்லை.

இதன் காரணம் என்ன?

பேராசிரியர் சமன்லாலின் கருத்துப்படி, "கடந்த 15-20 ஆண்டுகளில், பகத் சிங்கின் அறிவுபூர்வமான கருத்தியல், புரட்சிகர கோணத்தில் மக்கள் முன்வைக்கப்படவில்லை. மதக் கலவரங்கள், அவற்றை எப்படி சீர்செய்வது, தீண்டாமை என சமூக பிரச்சனைகள் தொடர்பான அவரது எழுத்துகள் 125 அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளாகவும் உள்ளன. பகத் சிங்கின் இதுபோன்ற சமூகம் தொடர்பான எழுத்துக்கள் இன்றும் முக்கியமானவை. மக்கள் முன் இதுபோன்ற கருத்துக்களை முன்வைக்காமல் இருப்பதற்கு அரசியல் கட்சிகளின் சுயநலமே காரணம்."

படத்தின் காப்புரிமை WWW.SUPREMECOURTOFINDIA.NIC.IN/BBC
Image caption "சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்" குண்டு வீசப்பட்டதற்காக பகத் சிங்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை

இந்திய எல்லையைத் தாண்டியும் பகத் சிங்கை விரும்புபவர்கள் இருக்கின்றனர்.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் மார்ச் 23ஆம் தேதியன்று பகத்சிங்கின் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. பகத்சிங் பிறந்த பங்கா கிராமம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது. அங்கு அவருக்கு சிறப்பான மரியாதை வழங்கப்படுகிறது.

பகத்சிங் நினைவு அறக்கட்டளை என்ற அமைப்பு பகத் சிங்கின் நினைவுகளை மங்காமல் மீட்டெடுக்கும் பணியில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டுவருகிறது.

பகத்சிங் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதில் அவரது முழக்கங்களும் வெளியிடப்பட்டன. நேஷனல் ஆர்ட் பிரஸ் அனார்கலி, லாகூர் இதனை அச்சிட்டது.

படத்தின் காப்புரிமை WWW.SUPREMECOURTOFINDIA.NIC.IN/BBC

இந்த அமைப்பின் தலைவர் இம்தியாஜ் குரைஷி இவ்வாறு கூறினார்,

"பாகிஸ்தானில் பகத்சிங் மிகவும் மதிக்கப்படுகிறார், இங்கு அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அவரது தாத்தா மற்றும் அப்பாவின் வீடு பாகிஸ்தானில் இருக்கிறது. பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் தூக்கிலடப்பட்டதை நினைவுகூரும் வகையில், பகத்சிங்கின் தாத்தா 120 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட மரம் இன்றும் இருக்கிறது".

"அந்த கிராமத்தின் பெயரும் 'பங்கா' என்பதில் இருந்து, பகத்புரா என்று மாற்றப்பட்டுவிட்டது. ஆண்டுதோறும் மார்ச் 23ஆம் தேதியன்று மூன்று வீரர்களின் நினைவாகவும் 'வீரமரண நாள்' கொண்டாடப்படுகிறது".

'பகத் சிங் கொல்லப்பட்டார்'

பகத் சிங் நினைவு அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாகூர் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பகத் சிங்கின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

தவறான தீர்ப்பின் அடிப்படையில் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தூக்கிலிடப்பட்டதாக இந்த அறக்கட்டளை நம்புகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக பிரிட்டன் ஆட்சியாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Image caption பகத்சிங்கின் தந்தை கிஷன் சிங் (பேராசிரியர் சம்மன்லாலிடம் இருந்து பெற்ற புகைப்படம்)

"பிரிட்டன் அரசு நீதிமன்றத்தின் மூலமாக பகத்சிங்கை கொன்றுவிட்டது. பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரை தேவையில்லாமல் கொன்றதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று இம்தியாஸ் கூறுகிறார்.

"பகத்சிங் தூக்கிலிடப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட, பகத்சிங்கின் உருவம் அனைவரின் இதயத்துக்கும் நெருக்கமானதாக இருக்கிறது. ஆனால், அவரவர் மனதில் பகத் சிங் எப்படி பதிந்திருக்கிறாரோ அதன்படியே அவரை வெளிப்படுத்துகிறார்கள் என்பது மட்டுமே இதில் உள்ள ஒரே முரண்பாடு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்