இராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சுணக்கத்துடன் செயல்பட்டதா இந்திய அரசு?

  • 24 மார்ச் 2018
படத்தின் காப்புரிமை Getty Images

அரசாங்கங்கள் உணர்ச்சிமிக்கதாகவோ அல்லது குறிப்பிட்ட விவகாரத்தை வெற்றிகரமா முடித்துவைத்ததாகவோ முன்மாதிரிகள் இல்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு மொசூல் நகரம் ஐஎஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் வந்தபோது அங்கிருந்த 40 இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரத்திலும் இதே செயற்பாட்டை கடைபிடித்தது இந்திய அரசு. ஜூன் 18, 2004ல் இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் 40 இந்தியர்கள் ஐஎஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில்தான் முதல் முறையாக தெரிவித்தார்.

அதன் பிறகு, கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கமானது அதன் சொந்த ஆதாரங்களை பயன்படுத்தி கடத்தப்பட்ட நபர்கள் உயிருடன் இருப்பதாக கூறிவந்தது. ஆனால், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் டிஎன்ஏவை ஆய்வு செய்ததில் கொல்லப்பட்டது கடத்தப்பட்ட இந்தியர்கள் என்பது தெரியவந்தது. இருப்பினும், இந்த அரசாங்கமோ அமைதி நிலையை கையாண்டது. கண்டெடுக்கப்பட்ட உடல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை இராக் அரசாங்கம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருத்தமளிக்கும் வகையில் தற்போதுதான் இந்திய அரசாங்கம் இந்தியர்களின் இறப்பை உறுதி செய்வதாக அறிவித்துள்ளது.

கடத்தப்பட்ட இந்தியர்கள் இறந்துவிட்டதாக அவர்களின் உறவினர்களுக்கு கூட தெரியப்படுத்தாமல், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரடியாக நாடாளுமன்றத்தில் அறிவித்தது இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் அரசாங்கம் செய்த சொதப்பலில் மோசமானதாக அமைந்தது. இது நாடாளுமன்றத்தின் வரைமுறைக்குட்பட்ட ஒரு விடயம் என்பதால், நாடாளுமன்றத்தில் முதலாவதாக தெரிவிப்பதாக சுஷ்மா கூறினார். இது அசாதாரணமான கூற்றாகும். ஏனெனில், உலகம் முழுவதுமே இந்த நாகரீக சமுதாயத்தில் ஒருவரின் இறப்பு குறித்த தகவலை பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்னர், அவரது உறவினர்களுக்கு தெரிவிப்பதென்பது நடைமுறையாக இருந்து வருகிறது. இது முழுவதும் மனிதாபிமானத்தை அடிப்படையாக கொண்டது. இந்த எளிதான விடயத்தை கூட சுஷ்மாவினால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கம் இன்னும் எதையும் செய்து முடிக்க முடியாது என்று எவரும் கூற முடியாது. பணி நிமித்தமாக இராக் சென்று, மொசூல் நகரில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்களாவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இராக் இராணுவம் செயலற்று போயிருந்த சூழ்நிலையில், இந்திய தொழிலாளர்கள் ஐஎஸ் அமைப்பினரிடம் சிக்கிக் கொண்டனர். ஆனால், பல நாடுகள் இணைந்து அவர்களை கண்டுபிடிப்பதற்கும், இறந்த உடல்களை மீட்பதற்கும் நான்கு ஆண்டுகளானது.

நாடாளுமன்றத்தில் பேசிய சுஷ்மா, தொழிலாளர்களின் இறப்பை முற்றிலும் உறுதிப்படுத்துவதற்கு முன்பு வெளியிடுவதை தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். மொசூல் நகரம் அரசாங்க படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முற்பகுதியில் வந்தவுடன், உடனடியாக அப்போதும், பிறகு 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமும் வெளியுறவுத்துறை இணை அமைச்சரான வி.கே. சிங்கை இந்தியர்களின் தேடுதல் வேட்டையை நடத்துவதற்காக இராக்கிற்கு சுஷ்மா அனுப்பி வைத்தார். இராக் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் பிண குவியலின் மணல்மேட்டை கண்டறிந்து, அந்த உடல்களின் டிஎன்ஏக்களை இந்தியாவிலுள்ள உறவினர்களின் டிஎன்ஏக்களோடு ஒப்பிட்டு இறந்தது இந்திய தொழிலாளர்கள்தான் என்பது கண்டறியப்பட்டது.

டிஎன்ஏ மாதிரி பரிசோதனை செய்வதற்கு முன்னதாகவே கண்டெடுக்கப்பட்ட உடல்கள் இருந்த இடத்தில் இந்திய தொழிலாளர்களில் சிலரின் அடையாள அட்டைகளும், ஆபரணங்களும் மற்றும் நீண்ட முடியும் இருந்ததென சுஷ்மாவின் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டது. உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதே இறந்தது இந்தியர்கள்தான் என்பதை அரசாங்கம் அறிந்தவுடனேயே அவர்களின் உறவினர்களிடம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

இதுதான், நிலைமையை பகுத்தறியுடன் கையாளும் வழியாக இருக்கும்போது, சுஷ்மா செய்தது அதை அழிவிற்குட்படுத்தும் வகையில் இருந்தது.

இராக்கிலிருந்து 2015 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு தப்பித்து வந்த ஹர்ஜீத் மாஸிஹ் என்பவர், 53 வங்கதேச முஸ்லிம்கள் மற்றும் பல இந்தியர்களை ஐஎஸ் அமைப்பினர் கடத்தியுள்ளதகவும், குறிப்பாக அதிலுள்ள இந்தியர்களை மட்டும் தனியே பிரித்ததாகவும் கூறினார். கடத்தப்பட்ட வங்கதேசத்தவர்கள் விடுவிக்கப்பட்டபோது ஹர்ஜீத்தும் அவர்களுடன் சேர்ந்து அங்கிருந்து தப்பித்து வந்தார். ஆனால், பிடித்துவைக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை BBC PUNJABI

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் மிருகத் தன்மையால், அந்த தொழிலாளர்கள் கொல்லபட்டிருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக சுஷ்மாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாறாக, தொலைபேசி மூலம் மாசியிடம் பேசிய சுஷ்மா, அவரது கணக்கு குறித்து தனிப்பட்ட முறையில் கேலி செய்ததோடு, தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதாகவும் அவர்களை தேடும் பணியை அரசு தொடரும் என்றும் வலியுறுத்தினார்.

மற்றொரு அறிவுக்கு ஒவ்வாத செயலில், மாசி இந்திய அதிகாரிகளின் பிடியில் ஒன்பது மாதங்கள் வைக்கப்படிருந்தார், ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

மோதி அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், தி வயர்ஸ் இன்ட்ரீபிட்டின் நிருபர் தேவிரூபா மித்ரா, குர்திஸ்தானில் உள்ள எர்பில், சில நாட்களுக்கு முன்பு மொசுலில் பிடித்துவைக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று தமது அறிக்கையில் கூறியிருந்தார்.

அவரது அறிக்கை, தப்பிச்சென்ற வங்கதேச தொழிலாளர்களையும் மற்ற தொழிலாளர்களையும் பணியமர்த்திய நிறுவனத்துடனான உரையாடலின் அடிப்படையில் அமைந்திருந்தது. இந்த அறிக்கை, ஹர்ஜீத் மாசி தப்பித்த செய்தியையும் உறுதிபடுத்தியிருக்கிறது. குர்திஷ் அரசு அளித்த தகவலின் அடிப்படையில், இந்திய பணியாளர்கள் கொல்லபட்டிருக்கலாம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியன் எக்ஸ்ப்ரஸில் பிரவீன் சுவாமி தனது கட்டுரையில் கூறியிருந்தார்.

ஆனால், தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் உறுதியுடன் கூறியது. கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்கள் இறந்துவிட்டதாகக் கூறும் தகவல்களை மறுத்த அரசாங்கம், அவர்கள் உயிருடன் இருப்பதாகக் கூறிய பல தனிநபர்களின் தகவல்களை நம்பியிருந்தது. ஆனால், அவர்கள் உயிருடன் இருப்பதாக சுஷ்மா தொடர்ந்து கூறி வந்தார். தான் அளிக்கும் தகவலானது பல மூன்றாம் தரப்பு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார். இதே கருத்தை பல்வேறு விதங்களில் கடந்தாண்டு வரை சுஷ்மா வலியுறுத்தி வந்தார்.

இந்த முழு விவகாரமானது, வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த இந்திய தொழிலாளர்களை எப்படி நடத்துகிறோம் என்பதற்கு ஒரு மோசமான சாட்சியாகும். உத்தியோகபூர்வமாக குடியேறுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சகம் அலுவலர்களை நியமித்து இருந்தாலும், உண்மையில் அவர்கள் வெளிநாடுகளில் வேலைகளை வாங்கித் தருவதாக வாக்குறுதியளிப்பவர்கள் மற்றும் முகவர்கள் மூலம் சுரண்டப்படுகிறார்கள். மேலும், அவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது காவல்துறையினர் மற்றும் சுங்கத்துறையினரிடம் சிக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது. அதிகளவிலான சலுகை அளிக்கும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களைவிட வெளிநாடுகளில் பணிபுரியும் இதுபோன்ற தொழிலாளர்கள்தான் வருடத்திற்கு நாட்டின் அந்நிய செலாவணிக்கு 45 பில்லியன் டாலர்களை அளிக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: