நாளிதழ்களில் இன்று: காவல்துறை விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியர்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (ஆங்கிலம்) - "விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியார்"

படத்தின் காப்புரிமை The Hindu

வதோதரா மாநகர காவல் துறை, பிரியா பிரகாஷ் படத்தை போக்குவரத்து ஒழுங்கு விளம்பரத்திற்காக பயன்படுத்தி உள்ளது என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது."கண் இமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; எந்த சிதறலும் இல்லாமல் கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள்' என்கிறது அந்த விளம்பரம். இந்த விளம்பரம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்கு நல்ல எதிர்வினைகள் வருவதாகவும் வதோதரா காவல் துறை ஆணையர் மனோஜ் சஷிதர் கூறியதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தினமணி: `குரங்கணி தீ விபத்து: மேலும் இரு பெண்கள் உயிரிழப்பு'

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி, மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு பெண்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர் என்கிறது தினமணி செய்தி."மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூர் எம்.கே.சாலையைச் சேர்ந்த சாய் வசுமதி (26), மதுரை கே.கே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நிவ்ய நிக்ருதி (24) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து(தமிழ்) - 'ரஜினி மன்ற நிர்வாகிகள் ராஜிநாமா`

மாவட்ட செயலாளர் நீக்கத்தை கண்டித்து திண்டுக்கல் ரஜினி மன்ற நிர்வாகிகள் 146 பேரும் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மாவட்ட செயலாளர் தம்புராஜை நீக்கியதன் காரணம் தெரிவிக்கப்படவில்லை. எங்கள் மாவட்டச் செயலாளர் நீக்கப்பட்டதால் பொறுப்பில் இருக்க நாங்கள் விரும்பவில்லை என்று நிர்வாகிகள் கூறியதாக விவரிக்கிறது அந்ந நாளிதழ் செய்தி.

அந்நாளிதழில் `பஞ்ச்`சோந்தி பராக்! பகுதி ரஜினி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை நையாண்டி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை தி இந்து (தமிழ்)

தினத்தந்தி - 'தமிழக தலைமை கணக்காயர் கைது`

பணி நியமனத்துக்கு ரூபாய் 5 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரில் தமிழ்நாடு மாநில தலைமை கணக்காயரை சி.பி.ஐ போலீஸார் நேற்று கைது செய்த செய்தி தினத்தந்தி நாளிதழின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது.

"ராஜஸ்தானை சேர்ந்த அருண் கோயல் மாநில கணக்காயராக பதவி வகித்து வருகிறார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை திட்டங்களுக்குக்கான தொகுப்பு நிதி முறையாக செலவிடப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வட்டங்கள் அளவில் கணக்கு தணிக்கை அதிகாரிகளை இவர் நியமனம் செய்துள்ளார்.

இப்படி சுமார் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்வதில் முறைகேடு நடந்ததாகவும், ஒவ்வொருவரிடமும் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணையை வழங்கியதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

மாநில கணக்காயர் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்த கூட்டுறவு சங்கங்கள், மனமகிழ் மன்றங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அருண் கோயல் முயற்சித்து உள்ளார். 62 ஆண்டுகளாக இயங்கி வரும் மாநில கணக்காயர் அலுவலர்களுக்கான கூட்டுறவு சேமிப்பு சங்கத்தில் தற்போது ரூ.68 கோடி நிதி உள்ளது.

இந்த கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு, 68 கோடி ரூபாய் நிதியை சுருட்ட அவர் திட்டமிட்டு இருந்ததாக புகார் கூறப்படுகிறது. அதற்கான முயற்சியில் நேற்று மாலை 4 மணி அளவில், அருண் கோயல் ஈடுபட்டதாகவும், இதற்காக தனி அதிகாரிகள் சிலரை அனுப்பி கூட்டுறவு சங்கத்தில் உள்ள நிதியை அதிகார துஷ்பிரயோகம் செய்து கைப்பற்ற முயன்றதாகவும் தகவல் வெளியானது என்று விவரிக்கிறது அந்த செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "ஆசிரியர்கள் இல்லை"

படத்தின் காப்புரிமை Getty Images

சமக்கல்வி இயக்கம் என்னும் அரசு சாரா அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் மாநில அரசு நடத்தும் 22 சதவீத பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: