காசநோயை கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

காசநோய் படத்தின் காப்புரிமை Thinkstock

உலக காச நோய் தினத்தில், பொது சுகாதார நிபுணராண சபல் மெஹ்ரா மற்றும் புகைப்பட கலைஞர் ஷம்பா கபி இருவரும் மருத்துவர் சரீர் உத்வாதியாவை தொடர்ந்தனர். சிகிச்சை அளிக்க முடியாத காசநோயின் சில வடிவங்களை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வருகிறார் சரீர்.

சிகிச்சை அளிக்க முடியாத காசநோயின் வடிவங்கள் குறித்து, 2012ஆம் ஆண்டு மருத்துவ இதழ் ஒன்றை வெளியிட்டார் நுரையீரல்நோய் சிகிச்சையில் பிரசித்தி பெற்ற சரீர் உத்வாதியா.

இதன் மூலம், இந்தியாவில் வளர்ந்து வரும் தொற்று நோயான காசநோய் குறித்தும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத காசநோயின் வடிவங்கள் குறித்தும் மருத்துவ சமூகத்துக்கு சரீர் நினைவு படுத்தினார்.

படத்தின் காப்புரிமை SHAMPA KABI

உலகளவில் காசநோய் அதிகம் இருக்கும் நாடு இந்தியா. ஆண்டுக்கு 2.8 மில்லியன் பேருக்கு இந்த நோய் வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்துக்கும் மேல் மருந்துகளால் குணப்படுத்த முடியாத காசநோய் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

காசநோயால் ஆண்டுக்கு 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர். மேலும், இதனால், ஓராண்டுக்கு அரசுக்கு ஆகும் செலவு 24 பில்லியன் டாலர்கள் ஆகும்.

காசநோயை கண்டறிவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

"காலாவதியான பரிசோதனை தொழில்நுட்பங்களையே இன்னும் இந்தியா நம்பி இருக்கிறது. காசநோயை கண்டறிவதில் 50 சதவீதம் தோல்வியில் முடிகிறது" என்கிறார் மும்பையை அடிப்படையாக கொண்ட சரீர்.

காசநோய் பாக்டீரியாவின் இருப்பை கண்டறியும் மூலக்கூறு சோதனை செய்யக்கூடிய GeneXpert போன்ற புதிய தொழில்நுட்ப முறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை SHAMPA KABI

"காசநோயால் நிகழும் ஒவ்வொரு மரணமும் தவிர்க்க முடியாத ஒரு சோகமாக இருக்கிறது. இதனை மாற்றுவது நம் கடமை"

காசநோய்க்கு சிகிச்சை உள்ளது என்றாலும், வறுமை, கடன் தொல்லை காரணமாக, நொடிக்கு ஒரு இந்தியர் இதனால் கொல்லப்படுகிறார். அவசர நடவடிக்கைகள் தேவைப்படும் இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக உள்ளது இது.

உடனடி சிகிச்சை அவசியம்

"சில சாதாரண காசநோய்களுக்கு எளிமையான சிகிச்சை உண்டு. சுமார் 300 ரூபாய் செலவில், ஆறு மாதங்களுக்கு 4 மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் குணப்படுத்தி விடலாம்" என்கிறார் சரீர்.

ஆனால், தவறான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலோ, சரியான அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலோ அல்லது மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தினாலோ, காசநோய் பேக்டீரியா அம்மருந்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேரிடும்.

படத்தின் காப்புரிமை SHAMPA KABI

மருந்துகளை ஏற்றுக்கொள்ளாமல் போகும் இந்த பாக்டீரியாக்கள் கொண்ட காசநோயை குணப்படுத்த நீண்டகாலம் ஆகும். இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். அதிக பணம் மற்றும் மருந்து மாத்திரைகள் தேவைப்படும். சரியாக சொல்லப் போனால் 250 ஊசிகள் மற்றும் 15,000 மாத்திரைகள்.

கிட்டத்தட்ட குணப்படுத்த முடியாத காசநோயுடன் பல நோயாளிகளை தாம் அவ்வப்போது சந்தித்து வருவதாக கூறுகிறார் சரீர்.

தன்னிடம் சிகிச்சை பெற வந்த தாராவியை சேர்ந்த சல்மாவை நினைவு கூர்ந்தார் அவர்.

மும்பையில் இருக்கும் குடிசைப்பகுதியான தாராவியில், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திறந்த கழிவுநீர் மற்றும் சிறிய வீடுகளில் வாழ்கின்றனர்.

படத்தின் காப்புரிமை SHAMPA KABI

"வறுமையினாலும், அதிக மக்கள் கூட்டம் கொண்டிருப்பதாலும் காசநோயின் பிறப்பிடமாக அது திகழ்கிறது" என்று சரீர் தெரிவித்தார்.

காசநோய் தொற்றில் இருந்து வெளிவர 5 ஆண்டுகளாக போராடியதாக சல்மா குறிப்பிடுகிறார். 1,500 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, குறைந்தது நான்கு அரசு சுகாதார காசநோய் மருத்துவமனைகள், 12 தனியார் மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து பல்வேறு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

ஐந்து வருடங்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டு, நோய் சரியாகாமல், நீங்கள் இன்னும் மோசமான நிலைமைக்கு ஆளானால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்கிறார் சரீர்.

படத்தின் காப்புரிமை SHAMPA KABI

பின், எந்த மருந்தும் அவரை குணப்படுத்த முடியாமல் போக, ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 ஆண்டுகளுக்கு பின் சல்மா இறந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மட்டும், உலகில் 10 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,50,000 பேர் மருந்து எதிர்ப்பு தெரிவிக்கும் காசநோய் கொண்டு அதனை குணப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

செப்டம்பர் 2017ல் புல்லட் ரயில் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியதை சுட்டிக்காட்டி பேசும் மருத்துவர் சரீர், "பிரதமர் மோதி அவர்களே.. புல்லட் ரயில் திட்டத்தை மறந்து விடுங்கள். சிகிச்சைக்கு தேவையான மருந்துகளையும், நோய்களை விரைவில் கண்டறியும் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்களையும், சமூக மாற்றத்தையும் கொடுங்கள். ஏனெனில், சரியில்லாத சமூகத்தின் சரியான வெளிப்பாடாக இந்த காசநோய் அமைந்திருக்கிறது" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்