இந்தியாவின் இருண்ட காலம்: பிரிட்டிஷ் இந்தியாவைக் கொள்ளையடித்த வரலாறு

2015ஆம் வருடத்தின் மே மாத இறுதியில் 'பிரிட்டன் தனது முன்னாள் குடியேற்றங்களுக்கு  இழப்பீடுகள் வழங்க கடமைப்பட்டிருக்கிறது' என்ற பொருளில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் யூனியன் சசி தரூரை ஒரு விவாதத்திற்கு அழைத்திருந்தது.

இந்த விவாதத்தில் சசி தரூர் தரப்பு வெற்றிபெற்றது. ஜூலை மாதத் துவக்கத்தில் இந்த விவாதம் காணொளிக் காட்சியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில மணி நேரத்திற்குள் அந்தக் காணொளி லட்சக் கணக்கானவர்களால் பார்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டது.

இதையடுத்து அவரது உரையை விரிவாக்கி ஒரு புத்தகமாக எழுதும்படி, பதிப்பாளர் ஒருவர் சசி தரூரிடம் கேட்டுக்கொண்டார். "பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தொடர்பான இந்தியாவின் அனுபவம் பற்றிய அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு அரிய வரலாற்று ஆதாரமாக இருக்கக்கூடிய புத்தகம் ஒன்றை எழுதும்படி கேட்டுக்கொள்ளவே, An Era of Darkness புத்தகத்தை எழுதினேன்" என்கிறார் சசி தரூர். அந்தப் புத்தகத்தின் தமிழாக்கம்தான் ’இந்தியாவின் இருண்ட காலம்’. 

இந்தியா காலனி ஆதிக்கக் காலத்தில் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டது  என்பதிலிருந்து புத்தகம் துவங்குகிறது. 

`வாசகர்களை ஈர்க்கிறது`

கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகம் செழிப்பதற்காக  இந்தியாவின் சுதேசி வர்த்தகம் எப்படியெல்லாம் முடக்கப்பட்டது, வரி வசூல், வளங்களைச் சுரண்டுவது உள்ளிட்ட பல செயல்பாடுகளின் மூலம் பிரிட்டன் எப்படி பணக்கார தேசமாக உருவெடுத்தது என்பதை பல்வேறு உதாரணங்களின் மூலமாக சுவாரஸ்யமாக விவரிக்கத் துவங்குவதன் மூலம் வாசகரை வெகு சீக்கிரத்திலேயே புத்தகத்திற்குள் ஈர்க்கிறார் சசி தரூர். 

ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்து இருந்ததற்கு, கிழக்கிந்தியக் கம்பனி, ஸ்காட்லாந்துக்காரர்களுக்கு இந்தியாவில் அளித்த வேலை வாய்ப்புகள் மிக முக்கியமான காரணம் என்கிறார் சசி தரூர்.  

`இந்தியா அரசியல் ஒருமைப்பாடு`

இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம், பிரிட்டிஷ் ஆட்சி என்று நம்பப்படும் நிலையில், பிரிட்டிஷ் ஆட்சி வந்திருக்காவிட்டால்கூட இந்தியா அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் என்கிறார் சசி தரூர். மௌரியர் காலத்தில், குப்தர் காலத்தில், முகலாயர் காலத்தில் இந்தியா ஓரளவுக்கு இவ்வாறாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.  திருவிதாங்கூர் அரசாங்கம் சிறுவர் - சிறுமியருக்குக் கட்டாயக் கல்வியை வழங்க 1819ல் வழங்கிய ஆணையைச் சுட்டிக்காட்டி, பிரிட்டிஷ் ஆட்சி வருவதற்கு முன்பாகவே கல்வியை வழங்குவதில் பல சமஸ்தானங்கள் முன்னிலையில் இருந்ததை விளக்குகிறார் சசி தரூர்.

பிரிட்டன் தனது காலனி ஆதிக்கக் காலத்தில் இந்தியாவில் செய்ததாகச் சொல்லப்படும் பல சாதனைகள் உண்மையில் எவ்வாறு சாதனைகள் அல்ல, ஏற்கனவே இருந்த சிறப்பான கட்டமைப்பைக் குலைத்து நிலைமையை மோசமாக்கியதுதான் அவர்களது சாதனை என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிநாதம். 

பிரிட்டிஷ் ஆட்சியின் அடையாளமாக, சாதனைகளாக நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ அவற்றுக்குப் பின்னால் இருந்த ஆட்சியாளர்களின் நோக்கம், தந்திரம் ஆகியவற்றை புள்ளிவிவரங்களுடன் முன்வைக்கிறது இந்தப் புத்தகம். இந்திய ரயில்வேயை தனது சாதனைகளில் ஒன்றாக பிரிட்டன் கருதும் நிலையில், இம்மாதிரி குடியேற்ற நாடாக இல்லாத நாடுகளில்கூட ரயில்வே அமைப்பு சிறப்பாக செயல்படுவதையும் தங்கள் நலனுக்காகவே கிழக்கிந்தியக் கம்பெனி ரயில் பாதைகளை நிர்ணயித்தது என்பதையும் விரிவாக விளக்குகிறார் ஆசிரியர். 

இந்தப் புத்தகத்தின் மிக சுவாரஸ்யமான அம்சம், பல புதிய தகவல்கள், புதிய நிகழ்ச்சிகள் போகிறபோக்கில் சொல்லப்படுவதுதான். 

உதாரணமாக, மெட்ராஸ் ஆளுனராக இருந்த தாமஸ் பிட் 1702ல்  உன்னதமான வைரம் ஒன்றை வாங்குகிறார்.  15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வைரத்தை ஃபிரான்ஸின் ரீஜண்டான ஆர்லியன்ஸ் பிரபுவிற்கு 1,35,000 பவுண்டுகளுக்கு விற்கிறார். இந்தப் பணம் அவரது குடும்பத்திற்கே பெரிய அந்தஸ்தை அளிக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் அந்தக் குடும்பத்திலிருந்து வில்லியம் பிட், வில்லியம் பிட் த யங்கர் என இரு பிரதமர்கள் வருகிறார்கள். 

`தற்கொலை`

மற்றொரு கதையில், ஐ.சி.எஸ். அதிகாரியாகப் பணிபுரியும் இந்தியரான செட்டி என்பவர், அந்த நிலை அதிகாரிகளுக்கான மனமகிழ் மன்றத்தில் சேர்க்கப்படாததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்கிறார். 

இன்னொரு கதை இன்னும் சுவாரஸ்யமானது. 1891ல் அமிர்த பஜார் பத்ரிகாவின் நிருபர் ஒருவர் இந்தியாவின் வைசிராய் லேன்ட்ஸ்டவுனின் குப்பைக்கூடையை யதேச்சையாக ஆராய்ந்தார். அதில் சுக்குநூறாகக் கிழிக்கப்பட்ட கடிதம் ஒன்று கிடைக்கிறது. அதை, கஷ்டப்பட்டு ஒட்டிப் படித்துப் பார்க்கிறார். அதில், சுதந்திர சமஸ்தானமான ஜம்மு - காஷ்மீரை பிரிட்டிஷ் அரசுடன் இணைக்கும் திட்டம் இருப்பது தெரிகிறது. இந்த விவகாரம் அமிர்தபஜார் பத்ரிகாவில் முதல் பக்கத்தில் வெளியாகிறது. கோபமடைந்த மகாராஜா, பிரிட்டனில் இந்த விவகாரத்தை எழுப்புகிறார். பிறகு, அது சுதந்திர சமஸ்தானமாகவே நீடிக்கிறது. இப்படி பல சம்பவங்கள் புத்தகத்தின் குறுக்கும் நெடுக்குமாக தென்படுகின்றன.

கொள்ளையடித்த கதை

புத்தகத்தின் முகப்பில், 1600ல் இருந்து 1947 வரையிலான முக்கியச் சம்பவங்களின் பட்டியல் இருக்கிறது. ஆனால், புத்தகம் அப்படி காலவரிசைப்படி அமையாதது இந்த நூலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. பதிலாக, இந்தியாவைக் கொள்ளையடித்த கதை, ஆங்கிலேயர் இந்தியாவுக்கு அரசியல் ஒருமைப்பாட்டை அளித்தார்களா, பிரித்தாளும் சூழ்ச்சி, பேரரசின் எச்சங்கள்  என பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்த முன்னூற்று ஐம்பது ஆண்டுகால வரலாறு பிரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டிருக்கிறது. 

இந்தப் புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் ஏற்கனவே பல வரலாற்று ஆசிரியர்களால் தனித் தனி புத்தகங்களாகவும் வேறு புத்தகங்களின் பகுதிகளாகவும் வெளிவந்தவைதான். ஆனால், ஒட்டுமொத்தமாகத் தொகுக்கப்பட்டு, அதற்கு ஒரு கோணமும் பார்வையும் கொடுக்கப்பட்டிருப்பதில்தான் மற்றவற்றிலிருந்து இந்நூல் தனித்து நிற்கிறது.

தமிழாக்கத்தைப் பொறுத்தவரை, சசி தரூரின் கடினமான வார்த்தைப் பிரயோகங்களையும் வாக்கியங்களையும் ஜே.கே. ராஜசேகரன் சிறப்பாகவே மொழிபெயர்த்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இன்னும் சற்று செம்மையாக 'எடிட்' செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், இதையெல்லாம் மீறி மிக சுவாரஸ்யமான வாசிப்பைத் தருகிறது இந்தப் புத்தகம்.

சமீபகாலத்தில் தமிழில் (மொழிபெயர்ப்பு என்றாலும்) வெளிவந்த மிக முக்கியமான புனைவல்லாத புத்தகம் இது. 

ஆசிரியர்: சசி தரூர்; தமிழில்: ஜே.கே. ராஜசேகரன்; பக்கங்கள்: 383; விலை: ரூ. 350/-

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: