ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள்: காரணம் என்ன? தீர்வு என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாணவன், கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தியதை அடுத்து அந்த ஆசிரியருக்கு தலை பகுதியில் தையல் போடப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN

கடந்த மாதம் வேலூரில் நடந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் ஒருவரை இரண்டு மாணவர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின.

கடந்த 2012ல் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் இன்னும் பல ஆசிரியர்கள் நினைவில் இருந்து நீங்கவில்லை.

குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக இடைவெளி

குழந்தைகளுக்கு கற்பிப்பதிலும், குழந்தைகளுடன் பழகுவதிலும் உள்ள குறைபாடு காரணமாக, மாணவர்களால் ஆசிரியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது தெரியவந்தாலும், குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும், வாழ்க்கைக் கல்விக்கும் இடைவெளி அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதை உணர்த்தும் அபாய சமிக்கையாகவே இதைப் பார்க்கவேண்டும் என்கிறார் தமிழக அரசின் மாநில குழந்தைகள் நல ஆணையர் எம்.பி.நிர்மலா.

திருவள்ளூரில் ஆசிரியரை தாக்கிய மாணவனுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என்றும் நடந்த சம்பவத்திற்கான காரணம் என்றும் விசாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்.

''திடீரென ஒரு நாளில் ஒரு மாணவனுக்கு ஆசிரியரை தாக்கவேண்டும் என்று எண்ணம் வர வாய்ப்பில்லை. மாணவனுக்கு பள்ளியில், வீட்டில், நண்பர்கள் வட்டத்தில் என்ன பிரச்சனைகள் இருந்தன என்று ஆராயவேண்டும்,'' என்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

''திருவள்ளூரில் நேற்று நடந்தது, முந்தைய ஆண்டு வேறு ஊரில் நடந்தது என தனிப்பட்ட சம்பவங்களாகவும், ஒரு சில மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குகிறார்கள் எனவும் இந்த சம்பவங்களை தட்டையாகப் பார்க்கக்கூடாது. குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற நாம் அனைவரும் தவறிவிட்டோம் என்பதையே இந்த வன்மமான செயல்கள் நமக்கு உணர்த்துகின்றன. குழந்தைகளிடம் உரையாடவும், அவர்களின் அச்சங்களைப் போக்கவும் நமக்குத் தெரியவில்லை. குழந்தைகளிடம் வெற்றிகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். படிக்கவேண்டும், சம்பாரிக்கவேண்டும் என்று மட்டுமே சொல்லி வளர்க்கிறோம்,'' என்று கூறினார்.

வகுப்பறையில் ஆசிரியரை கொலைசெய்த மாணவன்

குற்றம் இழைத்த சிறுவர்கள் சிறார் சீர்திருத்த மையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பல கட்ட ஆலோசனைக்குப் பிறகே குற்றம் புரிந்ததற்கான காரணங்களை அவர்கள் சொல்வதாகக் கூறுகிறார் கிரிஜா குமார் பாபு.

சிறார் சீர்திருத்த மையத்தின் உறுப்பினரான கிரிஜா கடந்த 2012ல் சென்னையில் ஒரு தனியார் பள்ளிஆசிரியரை வகுப்பறையில் கொலைசெய்த மாணவனிடம் நடத்தப்பட்ட ஆலோசனை சந்திப்புகளை நினைவுகூர்ந்தார்.

''சுந்தருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹிந்தி மொழிப்பாடத்தில் நாட்டம் இல்லை. தினமும் குறிப்புபுத்தகத்தில், படிப்பதில் முன்னேற்றம் இல்லை என்று எழுதப்பட்டதால், வீட்டில் அவனுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்தது. தினமும் ரூ.500 வரை செலவுக்கு பணம் கொடுத்த அப்பா, அதை நிறுத்திவிட்டார். நண்பர்களிடம் மரியாதை இழப்பு என கோபத்தின் உச்சத்தில் ஆசிரியரை தாக்க திட்டமிட்டு கொலைசெய்ததாக கூறினான். தண்டனைக் காலத்தில் மனம் வருந்தினாலும், அவனது ஆரம்பகட்ட மனஉளைச்சல்களை அறிந்து, அவனுக்கு குடும்பம், பள்ளிக்கூடம் என அவனை வழிநடத்த யாரும் கிடைக்கவில்லை என்பதை நாம் ஒப்புகொள்ளவேண்டும்'' என்று விவரித்தார்.

குழந்தைதனத்தை தொலைத்த பிள்ளைகள்

படத்தின் காப்புரிமை Getty Images

பெயர் குறிப்பிட விரும்பாத அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் குழந்தைகளின் வீட்டுச்சுழலில் அவர்கள் நடத்தப்படும்விதம், அவர்களின் நண்பர்கள் வட்டத்தில் கற்பிக்கப்படும் நியாயங்கள் போன்றவையும் வன்முறை செயல்களில் ஈடுபட ஒரு காரணம் என்கிறார்.

''அதிகமாக புறக்கணிக்கப்படுகிற குழந்தைகள், அவர்களின் குழந்தைதன்மையை இழந்து, தன்னைச் சுற்றியுள்ள பெரியவர்களின் நடத்தையை தானும் பின்பற்றுகின்ற நிலை ஏற்படுகிறது. ஒரு வளர் இளம்பருவக் குழந்தை, வன்முறையில் ஈடுபட துணிச்சல், சம்பவத்தின் விளைவைச் சிந்திக்காமல் செயல்பட தூண்டும் நபர் யார் அல்லது செயல்கள் எவை என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டியுள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல, குழந்தையைக் குழந்தையாக வளர பெற்றோர்கள், சுற்றுப்புறம் அனுமதிக்கவேண்டும்,'' என்றார்.

தன்னுடைய பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த வளர் இளம்குழந்தைகள் பலரும் குழந்தைதன்மையை இழந்து, பெரியவர்களாக நடந்துகொள்வதைப் பார்க்கமுடிகிறது என்கிறார்.

''குழந்தைதன்மையை இழந்த பிஞ்சுகளாகவே இவர்களை பார்க்கிறேன். அவர்களை படிக்கவைத்து மதிப்பெண் எடுக்கவைக்கவேண்டிய வேலைகளை மட்டுமே செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பள்ளிக்கூடங்களில் அழுத்தம் என்பத்தைத்தாண்டி, தற்போது பெற்றோர்கள் ஏன் தன்னுடைய குழந்தையால் மார்க் வாங்க முடியவில்லை என்று சண்டை போடுகிற காட்சிகள் பள்ளிகளில் அரங்கேறுகின்றன,'' என்றும் அந்த ஆசிரியர் தெரிவித்தார்.

தனியார்,அரசு பள்ளி என்ற வித்தியாசம் இல்லை

தனியார் பள்ளி, அரசுப்பள்ளி என்ற வித்தியாசமின்றி எல்லா பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வுக்கு மட்டுமே தயார் செய்யப்படுகிறார்கள் என்றும் அன்றாட பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறியாமல் வளர்க்கப்படுகிறார்கள் என்பதால் ஆசிரியர்களை தாக்கும் அளவுக்கு அவர்கள் முடிவு எடுக்கிறார்கள் என்கிறார் சுடர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நடராஜன்.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

''வாழ்க்கை கல்வி, தன்னுடைய சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடம் எவ்வாறு பழகுவது, தனக்கு பிரச்சனை வந்தால் யாரிடம் உதவி கேட்கலாம், தன்னுடைய எல்லா பிரச்சனைக்கும் யார் காதுகொடுப்பார்கள் என மாணவர்கள் தேடாமல், அவர்களுக்கு ஆசிரியர்கள் தென்படவேண்டும். ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். சமூகத்தில் மாணவர்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லை, பள்ளிக்கூடத்தில் தனக்கு பிடித்தமான சூழல் இல்லாதபோது, பதின்பருவ குழந்தைகள் வன்முறை செயல்களில் ஈடுபடுகிறார்கள்'' என்கிறார் நடராஜ்.

ஆசிரியர்களுக்கும் பயிற்சி வேண்டும்

ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதற்கான திறன் மட்டுமல்லாமல், மாணவர்களின் பிரச்சனைகளை அறிந்துகொள்ள உதவும் பயிற்சியை ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அளிக்கப்படவேண்டும் என்று இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கண்ணன் திருவாய்மொழி கூறினார்.

''சில மாணவர்கள் வன்செயல்களைச் செய்வதற்கான எண்ணம் துளிர்விடும்போதே அவற்றை ஆசிரியர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அடிப்படை. ஆசிரியர்களுக்கு அளிக்கவேண்டிய பயிற்சி பெரும்பாலும் ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுபோன்ற பயிற்சிகளை அளித்தால், ஆசிரியர்களுக்கு உதவும். ஒரு நிபுணரின் ஆலோசனையில் செயல்படும், உடல் மற்றும் மனநலத்திற்காக மன்றம் பள்ளிகளில் நிறுவப்படவேண்டும்,'' என்றார் கண்ணன்.

தனது முப்பது ஆண்டு கால ஆசிரியர் பணியில் தினமும் கற்கும் பாடமாக மாணவர்கள் இருக்கிறார்கள் என்று கூறும் கண்ணன், ''காலத்துக்கு ஏற்றவாறு மாணவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆசிரியர்களுக்கு தேவை. இன்றைய மாணவர்களிடம் எப்படி பழகுவது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது,'' என்று கூறுகிறார் கண்ணன்.

மாணவர்களுக்கான உதவிஎண்

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசியபோது மாணவர்களின் நலன் கருதி மார்ச் (2018) மாதத்தின் தொடக்கத்தில் 24 மணிநேரம் செயல்படும் உதவிஎண் (14417)தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

''மாணவர்களுக்கு ஏற்படும் அச்ச உணர்வை போக்கவும், மனஉளச்சலை தவிர்க்கவும், அனுபவம் மிக்க ஆசிரியர்கள் தொலைபேசிவழியாக தனது பிரச்சனைகளை பேச வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளவும், மற்ற நாட்களில் பள்ளியில் அசௌகரியம் ஏற்பட்டால் மாணவர்கள் நம்பிக்கையாக தொடர்புகொண்டு பேசும் விதமாக இந்த உதவிஎண் செயல்படும். தற்போது ஒரு நாளில் சுமார் நானூறு அழைப்புகள் பதிவாகின்றன,'' என்று தெரிவித்தனர்.

டிஜிட்டல் கல்வியில் கலக்கும் அரசு பள்ளிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டிஜிட்டல் கல்வியில் கலக்கும் அரசு பள்ளிகள். ஆனால், அது போதுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்