கணவரின் உயிர் பறித்த ‘திருமண பரிசு வெடிகுண்டு‘: துலங்காத மர்மம்

புதியதாக திருமணம் செய்துகொண்ட ஒரு மென்பொறியாளர் உயிரிழக்கவும், அவரது மனைவி படுகாயமடைவதற்கும் காரணமான "திருமண குண்டு" ஒன்றுஒடிசாவிலுள்ள ஒரு சிறிய நகரத்தின் அமைதியை குலைத்துவிட்டது.

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், இது குறித்த எவ்வித துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

இந்தியாவையே அதிர வைத்த இந்த நிகழ்வை பதிவு செய்வதற்காக நாட்டின் கிழக்கு மாநிலங்களுள் ஒன்றான ஒடிசாவுக்கு சென்றார் பிபிசி செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸ்.

திருமணமான ஐந்து நாட்களுக்கு பிறகு, அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி, 26 வயதான மென்பொறியாளரான சௌம்யா சேகர் சாஹு மற்றும் அவரது மனைவியான 22 வயதாகும் ரீமா ஆகியோர் பட்னாகர் என்னும் இடத்திலுள்ள தங்களது புதிய வீட்டின் சமயலறையில் சமைத்து கொண்டிருந்தபோது யாரோ அவர்களின் வீடு கதவை தட்டும் சத்தம் கேட்டது.

சௌம்யா வெளியே சென்று பார்த்தபோது அவரது பெயரில் யாரோ ஒருவர் அனுப்பிய பார்சல் வந்திருந்தது.

அந்த பார்சலின் மேற்பகுதியில் கிழிந்த நிலையிலிருந்த ஸ்டிக்கரில் அது ராய்ப்பூரில் இருக்கும் ஷர்மா என்பவரால் அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பார்சலை பெற்றுக்கொண்ட சௌம்யா அதை சமயலறைக்கு கொண்டுவந்ததும், அருகில் அவரது 85 வயதான பாட்டியும் நின்றுகொண்டு, பச்சை தாளினால் சுற்றப்பட்டு, வெள்ளை நிற நூலினால் கட்டப்பட்டிருந்த பார்சலை பிரித்தது தனக்கு நினைவில் இருப்பதாக ரீமா கூறுகிறார்.

"ஆச்சர்ய பரிசு"

"இது திருமணத்திற்கான பரிசு போன்று தெரிகிறது" என்றும் "ஆனால், இதை அனுப்பியவர் யார் என்று எனக்கு தெரியாது என்றும் சௌம்யா தனது மனைவியிடம் கூறினார்.

பின்பு, அந்த பார்சலின் மீதிருந்த கயிற்றை அவிழ்த்தவுடன், அதிலிருந்து ஒளி வெளிப்பட்டவுடன் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்தது.

மூவரும் தீவிர இரத்தக்காயங்களுடன் நிலைகுலைந்து தரையில் விழுந்தனர். மேலும், இந்த வெடிப்பினால் சமையலறை முழுவதுமே கடுமையாக சேதமடைந்தது.

"என்னை காப்பாற்றுங்கள். நான் செத்துக்கொண்டிருக்கேன் என்று நினைக்கிறன்" என்று தனது நினைவை இழப்பதற்கு முன்பு சௌம்யா முனங்கினார். அதுதான் ரீமா தனது கணவர் பேசுவதை கேட்ட கடைசி வார்த்தைகள்.

தீக்காயங்கள் அவரது முகத்தையும் கைகளையும் தாக்கியது. புகை அவரது நுரையீரலில் நிரம்பியதால் அவரால் மூச்சுவிட முடியவில்லை.

சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து மக்கள் இவர்களது வீட்டில் கேஸ் வெடித்துவிட்டதா என்று கேட்டார்கள்.

மோசமான நிலையிலிருந்த ரீமா, எப்படியோ நகர்ந்து படுக்கையறைக்கு சென்று கல்லூரி ஒன்றின் முதல்வராக இருக்கும் தனது மாமியாரை தொலைபேசி மூலம் அழைப்பதற்குள் அவர் அங்கிருந்து கிளம்பியிருந்தார்.

வெடிப்பு நடைபெற்ற சில நிமிடங்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட காணொளியில், சோகம் நிரம்பிய அண்டை வீட்டுக்காரர்கள் படுகாயமடைந்த மூவரையும் வெளியே காத்திருக்கும் ஆம்புலன்சிற்கு படுக்கை விரிப்புகளில் வைத்து கொண்டுசெல்வதை காட்டுகிறது.

உடலில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட சௌம்யா மற்றும் அவரது அத்தை ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டனர். அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ரீமாவின் உடல்நிலை மெதுவாக தேறி வருகிறது.

இந்த சம்பவம் நடைபெற்று ஒருமாத காலத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், இந்த செயலை யார் செய்திருக்கக் கூடும் என்ற கேள்விக்குறிய வலுவான பதிலையோ அல்லது கருத்தையோ இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை.

"நாங்கள் மிகவும் சாதாரணமான மனிதர்கள். எங்களுக்கு எதிரிகள் யாருமில்லை. எனது மகளுக்கோ அல்லது மருமகனுக்கோ எதிரிகள் யாருமில்லை. இதை யார் செய்திருப்பார்கள் என்று என்னால் சந்தேகிக்க முடியவில்லை" என்று ரீமாவின் தந்தை கூறுகிறார்.

"அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் சில முறை சந்தித்திருக்கிறாரகள். அவர்களிருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாரோ ஒருவர் என் மகனை ஏன் கொலைசெய்ய வேண்டும்?" சௌம்யாவின் தந்தை கேள்வியெழுப்புகிறார்.

சௌம்யா பெங்களுருவில் இருக்கும்போது அவருக்கு வந்த மிரட்டல் அழைப்பு மட்டும்தான் இதுவரை மர்மமாக இருப்பதாக தெரிகிறது.

"அந்த அழைப்பு சென்ற வருடம் வந்தது" என்று ரீமா கூறுகிறார். "நாங்க இருவரும் அப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டிரும்போது, அழைப்பொன்று வருவதாக அவர் கூறியதும், எங்களது அழைப்பை நிறுத்தி வைத்துவிட்டு பேசிய பின், 'எனக்கு ஒரு மிரட்டல் அழைப்பு வந்ததாகவும், அதில் பேசிய நபரொருவர் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டாமென்று கூறினார்'" என்றும் சௌம்யா தன்னிடம் கூறியதாக ரீமா கூறுகிறார்.

அதன் பிறகு எங்களுக்கு அதுபோன்ற அழைப்புகள் வரவில்லை மற்றும் சிறிது காலத்தில் எங்களுக்கு திருமணமும் நடந்துவிட்டதால், "அது குறித்து நாங்கள் முழுமையாக மறந்துவிட்டோம்" என்று ரீமா கூறுகிறார்.

கொலையுடன் தொடர்புடைய நான்கு நகரங்களில் நூறுக்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் டஜன்கணக்கான புலன்விசாரணை அதிகாரிகள் கேள்விகளை எழுப்பிவிட்டார்கள்.

மேலும், இந்த தம்பதியினரின் கைபேசிகள், மடிக்கணினிகள் போன்றவற்றையும் ஆய்வு செய்துவிட்டனர். ஆனால், இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.

க்ருடு குண்டு (Crude bomb)?

இந்த வழக்கில் போலீசாருக்கு தெரிந்த ஒரே விடயம் அது ராய்ப்பூரிலிருந்து போலி பெயர் மற்றும் முகவரியுடன் 400 ரூபாய் கட்டணத்துடன் அனுப்பட்ட பார்சல் என்பதே ஆகும். கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத கூரியர் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ள அந்த நபரின் பார்சல் ஸ்கேன் செய்யப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்ட குண்டு எவ்வளவு நுட்பமானது என்பதை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

க்ருடு குண்டாக கருதப்படும் இது சணலினால் சுற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதுதான் வெடிப்பிற்கு பிறகு வெள்ளை நிற புகையை வெளியேற்றியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

முன்னாள் காதலர்கள் எவராவது இதை செய்திருப்பார்களா? சொத்து பிரச்சனையின் காரணமாக இது நடந்திருக்குமா?

ஆறு வருடத்திற்கு முன்பு ரீமா பள்ளியில் படித்துக்கொண்டிருபோது தொந்தரவு செய்த சக மாணவருக்கு இதில் தொடர்பிருக்குமா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்று மூன்று வாரங்களுக்கு பிறகு, ரீமா தனது மருத்துவமனை அறையிலிருந்த செய்தித்தாளை பார்த்தபோதுதான் சௌம்யா இறந்தது குறித்து தெரியவந்தது. அப்போது துக்கம் தாங்க முடியாமல் ரீமா கதறி அழுதார்.

"நீங்கள் என்னிடம் உண்மையை கூறாமல் மறைந்துவிட்டீர்கள்" என்று தனது தந்தையை நோக்கி ரீமா கூறினார்.

ரீமா தனது துக்கத்தை வெளிக்காட்டும் காணொளி ஒன்று உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

"இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து விசாரணையை துரிதப்படுத்துவதற்கும், குற்றவாளியை விரைவில் கைது செய்வதற்கும் வழிகோலும் என நினைத்தோம். அதுதான் எங்களுக்கு தேவையும்கூட" என்று ரீமாவின் தந்தை கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்