ஒரே மாதத்தில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும்: ஸ்டாலின்

ஒரே மாதத்தில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் : ஸ்டாலின்
படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

தமிழகத்தில் நடைபெற்றுவரும் அதிமுக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் முடிவுக்கு வரும் என்றும், அதிமுக எம்எல்ஏகள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் ஆறு மாத காலத்திற்கு ஆளுநர் ஆட்சி நடைபெறும் வாய்ப்பு உள்ளது என்றும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆட்சியை பிடித்து திமுக தலைவர் கருணாநிதிக்கு பரிசாக தரவேண்டும் என்பதை உறுதியாக நம்புவதாக தெரிவித்த ஸ்டாலின், விரைவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக கட்சித்தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையத்தை அமைக்கப்போவதாக மத்திய அரசு கூறியுள்ளதை ஏற்கமுடியாது என்று கூறிய அவர், ''மேற்பார்வை ஆணையம் அமைப்பது தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதற்கான பகிரங்கமான எதிர்மறைச் செயல். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காத முதல் மண்டல மாநாடாக நடைபெற்ற இந்த மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

''கலைஞரின் கட்டளையை கண்போல் காப்போம், அதிகாரக் குறை அடித்துநொறுக்குவோம், தமிழரை வளர்த்து தமிழை போற்றுவோம், மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தைக் காப்போம் மற்றும் வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்,'' என அந்த ஐந்து முழக்கங்களை ஸ்டாலின் வாசித்தபோது, கட்சி உறுப்பினர்கள் தன்னோடு வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மாநில உரிமைக்கு பிரச்சனை வரும்போது கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் கட்சி வித்தியாசங்கள் இல்லாமல் அனைத்து கட்சியினரும் இணைந்து மாநில உரிமைகளுக்காகப் பேசுகிறார்கள் என்று கூறிய அவர், அதிமுக அரசும் இதுபோன்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருக்கும் தாமதத்தை கருதி, தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தபோது, அரசு செவிசாய்க்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நாங்களே கூட்டமுடிவுசெய்து, 22ம்தேதி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தோம்.

உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை 22ம் தேதி அரசே நடத்துகிறது என்று கூறினார்கள். காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு உதவவேண்டும், அதை அரசியல் செய்யக்கூடாது என்பது எங்களின் கொள்கை என்பதால், நாங்கள் முடிவுசெய்த கூட்டத்தை ரத்துசெய்துவிட்டு, அரசு சார்பில் நடத்திய கூட்டத்திற்கு சென்றோம்,'' என்று கூறினார்.

சமீபத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஒரு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ததற்காக வெளியான அரசு விளம்பரங்கள் குறித்து பேசிய ஸ்டாலின், ''எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற ஓராண்டு சாதனை என்ற பெயரில் பல செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசு மூன்று லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில், இத்தனை விளம்பரம் அரசு நிதியில் அவசியமா என்று யோசிக்கவேண்டும்,'' என்று தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் தொண்டர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டதாக கூறிய ஸ்டாலின், மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கழிவறைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படவுள்ளது என்று கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: