“போராட்டங்கள் தேவையற்றது என்று யோசித்திருந்தால் சுதந்திர போராட்டமே நடந்திருக்காது”

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

உச்ச நீதிமன்றம் 29ஆம் தேதி வரை கெடு விதித்துள்ள நிலையில் தற்போது இந்த போராட்டம் தேவையற்றதா?

இதுபோன்ற அழுத்தங்கள்தான் பலனளிக்குமா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

நேயர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.

பாலன் சக்தி என்பவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், செவிடன் காதில் ஊதிய சங்காகி விடுமோ என்ற கவலையால் அழுத்தம் கொடுத்து பெற்றாக வேண்டிய நிலை தான் உள்ளது என்கிறார்.

சக்தி சரவணன் என்ற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் நாம் நம் உரிமையைப் பெறுவதற்கான அனைத்து வழிகளிலும் போராடி அரசிற்கும், நீதிமன்றத்திற்கும் போராட்டத்தின் மூலம் நம்முடைய கருத்தை பதிவு செய்தாக வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இரா.திருநாவுக்கரசு டுவிட்டர் கருத்தில் அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும்.. அது போலதான் என்று பதிவிட்டுள்ளார்.

அருண் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், நீதிமன்ற தீர்ப்பை யாரும் மதிப்பதில்லை. இது ஜனநாயகதிற்கு ஆபத்தான ஒன்று என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

துரை முத்துசெல்வம் என்பவர், போராட்டங்கள் பலன் அளிக்காது. இவர்கள் எவ்வளவு பெரிய போராட்டம் நடத்தினாலும் திரும்பி கூட பார்க்காது மத்திய அரசு. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து வருகிறது என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர். அருண் குமாரின் டுவிட்டர் கருத்தில் “எல்லாம் அரசியல்” என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

காலங்கடந்த போராட்டங்கள், அழுத்தங்கள். மத்திய அரசும் கர்நாடக அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்ற முடிவில் உள்ளன என்ற கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் சரோஜா சுப்பிரமணியன்.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய அரசின் மீதான நம்பிக்கையின்மையை எடுத்து காட்டவே இந்த போராட்டம் என்கிறார் அகிலன்.

முரளி தேவி என்பவர் நல்லவர்கள் வந்தால் தவிர வேறு எதுவும் நடக்காது என்ற கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சன்முகசுந்தரம் பதிவிட்டுள்ள டுவிட்டர் கருத்தில், போராட்டங்கள் தேவையற்றதா என்று யோசித்திருந்தால் சுதந்திர போராட்டமே நடந்திருக்காது என்கிறார்.

சீனி சுப்பிரமணியன் என்கிற நேயர், மக்கள் பிரதிநிதிகள் பதவிவிலகினால் ஏதாவது நடக்கலாம் என்று ஆலோசனை அளித்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: