'உடல்பருமன், தாமதமாகும் திருமணம்': இந்திய பெண்களை புற்றுநோய் தாக்கும் காரணங்கள்

இந்தியாவில் புற்றுநோய் ஏற்படும் விதம் உலகெங்கும் உள்ள புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு இங்கு புற்றுநோய் பாதிப்பு வந்தாலும், பல முன்னேறிய நாடுகளைவிட இந்தியாவில் புற்றுநோய் ஏற்படும் விகிதம் குறைவாகவே உள்ளது.

அமெரிக்காவில் லட்சத்தில் 300 பேருக்கு உண்டாகும் இந்த நோய், இந்தியாவில் 100 பேருக்கே உண்டாகிறது.

இந்தியர்களில் வயதில் இளையவர்களில் எண்ணிக்கை அதிகம் என்பதால் பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இந்த நோய் பாதிப்பு அதிகம் வருவதில்லை. எனினும், இங்கு மீண்டு வருபவர்களின் விகிதம் குறைவு. புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல், ஐந்து ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்கள் மூன்றில் ஒருபங்கு நோயாளிகள் மட்டுமே.

உலகம் முழுதும் பெண்களைவிடவும் ஆண்களுக்கே 25% அதிகமாக புற்றுநோய் பாதிப்பு வந்தாலும், இந்தியாவில் பெண்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக 'தி லான்செட் ஆன்காலஜி' சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பெண்களுக்கு அதிகமான புற்றுநோய் பாதிப்பு வந்தாலும், இறப்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களே அதிகம். இதன் காரணம், பெண்களுக்கு 70% உண்டாகும் கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் ஆகியன சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைப்பதாற்கான வாய்ப்புகளை அதிகமாகக் கொண்டுள்ளன.

பெரும்பாலும் புகையிலைப் பழக்கத்தால் வரும் நுரையீரல் மற்றும் வாயில் உண்டாகும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

படத்தின் காப்புரிமை AFP

புற்றுநோய் உண்டாகும் இந்திய பெண்களில் அதிகபட்சமாக 27% பேர் மார்பகப் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய் உண்டாவது அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியப் பெண்களுக்கு 45-50 வயதில் வரும் மார்பக மற்றும் சினைப்பை புற்றுநோய்கள் வளர்ந்த நாடுகளில் வாழும் பெண்களுக்கு 10 ஆண்டுகள் தாமதமாகவே வரும். இதற்கு மரபணு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணங்கள் உள்ளன.

புற்றுநோய் மரபுவழியாகவும் வரும். பி.ஆர்.சி.ஏ-1 மற்றும் பி.ஆர்.சி.ஏ-2 ஆகிய மரபணுக்கள் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை எட்டு மடங்கு அதிகரிக்கின்றன. ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் இந்தப் புற்றுநோய் வருவதற்கான காரணம் இதுதான்.

இந்தியாவில் உண்டாகும் மார்பகப் புற்றுநோய் பாதிப்புகளில் 10% மட்டுமே மரபுவழியாக வருகின்றன. இந்த விகிதம் பிராந்தியத்துக்கு பிராந்தியம் வேறுபடுகிறது.

உதாரணமாக தலைநகர் டெல்லியில் மார்பகப் புற்றுநோய் அதிகம். எனினும், இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

"அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பது, உடல் பருமன், தாமதமாக திருமணம் செய்தல், குழந்தைகளுக்கு பாலூட்டாமல் இருப்பது ஆகியவையே வேகமாக நகரமயமாகி வரும் இந்தியாவில், அதற்கான காரணமாக இருக்கலாம்," என்று தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரவி மல்ஹோத்ரா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை AFP

விழிப்புணர்வு போதாமையால் தாமதமாக நோய் பாதிப்பை கண்டறிதல், மருத்துவர்களிடம் தாமதமாக செல்வது ஆகிய காரணங்களையும் அவர் பட்டியலிடுகிறார்.

அமெரிக்காவில் 80% மார்பக புற்றுநோய்கள் முதல் மற்றும் இராண்டாம் நிலையிலேயே கண்டறியயப்படுகின்றன. இந்தியாவிலோ பெரும்பாலும் மூன்றாவது அல்லது நான்காவது நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.

இந்திய பெண்களுக்கு வரும் புற்றுநோயில் 23% வரும் கருப்பைவாய் புற்றுநோயை எளிதில் கண்டறிந்துவிடலாம். 2008 முதல் கருப்பைவாய் புற்றுநோயை உண்டாகும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்க்கு (HPV) எதிராக 11-13 வயதாகும் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் இவ்வகைப் புற்றுநோய் கணிசமாக குறைந்து வருகிறது.

இந்தியாவில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டுமே இந்த தடுப்பூசி வழங்கப்படும் திட்டம் உள்ளது.

எனினும் கருப்பை வாய் புற்றுநோய் இந்தியாவில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்றுநோயில் இரண்டாம் இடம் வகிக்கிறது. புற்றுநோயால் இறக்கும் பெண்களில் 25% பேர் இதனால்தான் இறக்கின்றனர்.

நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை மற்றும் 4,000க்கும் அதிகமான சமூக இனக்குழுக்களை கொண்டுள்ள இந்தியாவில் மரபணு குறித்த ஆய்வுகள் மூலம் மரபுவழி நோய்க்கான காரணங்களை கண்டறிய முடியும்.

படத்தின் காப்புரிமை AFP

உதாரணமாக, இந்தியாவில் வசிக்கும் பஞ்சாபி பெண்கள் மற்றும் பிரிட்டனில் வசிக்கும் பஞ்சாபி பெண்களுக்கு உண்டாகும் புற்றுநோய் குறித்து ஒன்றாக ஆய்வு செய்தால் மரபணு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் மூலம் எந்த அளவுக்கு புற்றுநோய் உண்டாகிறது என்பதை அறிய முடியும் என்று லான்செட் சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புற்றுநோய் தடுப்புக்காக 1976ஆம் ஆண்டிலேயே திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. எனினும், இந்திய அரசு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிடுகிறது.

இந்தியாவிலுள்ள 700 மாவட்டங்களில் 165 மாவட்டங்களில் வாய், மார்பகம் மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றில் உண்டாகும் புற்றுநோயை கண்டறிவதறகாக இலவச பரிசோதனை செய்யும் திட்டத்தை இந்த ஆண்டு அரசு இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம்.

"நாம் முன்னேறி வருகிறோம். எனினும், பிரச்சனையைத் தீர்க்க நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறையவுள்ளது," என்கிறார் மல்ஹோத்ரா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :