நாளிதழ்களில் இன்று: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மூன்றாவது திருமணமா?

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர் - மல்லையாவுக்கு மூன்றாவது திருமணமா?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, மூன்றாவதாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிங்கி லால்வானி என்பவர் அவரது விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார் என்று கூறப்படுகிறது. இவரைத்தான் விஜய் மல்லையா மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ளார் என அவரது வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்தியாவில் மோசடி செய்த மல்லையா, பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற போது, பிங்கியும் அவருடன் சென்றதாகவும், மேலும் மல்லையாவின் நெருக்கடி காலத்திலும் அவருடன் இருந்ததாகவும் விவரிக்கிறது இச்செய்தி.

தினத் தந்தி - காவிரி வழக்கில் விளக்கம் கேட்டு மனு?

படத்தின் காப்புரிமை Getty Images

காவிரி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கீம் என்பதன் பொருள் என்ன என்பது குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தினத் தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்துக்கு கர்நாடகா வழங்கிய வேண்டிய நீரின் அளவை குறைத்து, நடுவர் மன்ற தீர்ப்பை நிறைவேற்ற 'ஸ்கீம்' ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இதுகுறித்து விளக்கம் கேட்டு, சனிக்கிழமையன்று மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அச்செய்தி விவரிக்கிறது.

தினமணி - இருபாடங்களுக்கு மறுதேர்வு

படத்தின் காப்புரிமை Getty Images

வினாத்தாள் கசிந்து விட்டதாக வெளியான தகவலையடுத்து 10ஆம் வகுப்பு கணித பாடம் மற்றும் 12ஆம் வகுப்பு பொருளியல் பாடம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தேர்வுகளின் புனிதத் தன்மையை காக்கவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், இருபாடங்களுக்கு மறுதேர்வு வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மறுதேர்வுகளுக்கான தேதி இன்னும் ஒரு வாரத்தில் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) - கனிஷ்க் - தனிஷ்க் : ஒரோ மாதிரியான பெயரால் குழப்பம்

படத்தின் காப்புரிமை Getty Images

கனிஷ்க் மற்றும் அதன் போட்டி நிறுவனமான தனிஷ்க் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதினால், குழப்பம் ஏற்பட்டதாக ’தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், கனிஷ்க் நகை நிறுவனம் 824.15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக எஸ் பி ஐ வங்கி சிபிஐ-ல் புகார் அளித்திருந்தது.

ஆனால், தொடக்கத்தில் இது தனிஷ்க் நிறுவனம் என்று சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டு இருந்ததால் பல வாடிக்கையாளர்கள் தங்களிடம் இதுகுறித்து விசாரித்ததாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. தங்களுடையது முற்றிலும் மாறுபட்ட நிறுவனம் என தனிஷ்க் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்