ஸ்டெர்லைட்: ''போராட்டத்தின் பின்னணியில் உள்நோக்கங்கள் உள்ளன'' #GroundReport

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

தூத்துக்குடி மாவட்ட சிப்காட்டில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்துவரும் நிலையில், அந்த ஆலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிபிசியிடம் பிரத்யேகமாகப் பதிலளித்தார் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் அசோசியேட் வைஸ் - பிரெசிடெண்ட் அ. சுமதி. அந்தப் பேட்டியிலிருந்து:

கே. ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் குறித்த அச்சம் மக்களிடம் வெகுவாக இருக்கிறது. எவ்விதமான கழிவுகள் இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகின்றன?

ப. ஆபத்தில்லாத ஜிப்சமும் ஃபெரோ ஸ்லாக் எனப்படும் இரும்பு கலந்த சிலிக்காவும் இந்தத் தொழிற்சாலையில் துணைப் பொருளாகக் கிடைக்கின்றன. இந்தப் பொருட்களையெல்லாம் எங்காவது பயன்படுத்த முடியுமா, அவை பாதுகாப்பானவையா என்று தெரிந்துகொள்ள பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

நேஷனல் கவுன்சில் ஃபார் சிமிண்ட் அண்ட் பில்டிங் மெட்டீரியல், இந்தியன் டாக்ஸிகாலஜி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் போன்ற நிறுவனங்களில் இந்த ஆய்வுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஜிப்சம், சிமிண்ட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. ஃபெரோ ஸ்லாக், சிமிண்ட்டை பயன்படுத்தி கட்டப்படும் பொருட்களுக்குப் பயன்படுகிறது. 'சாண்ட் பிளாஸ்டிங்கில்' பயன்படுகிறது. சாலை போடுவதில் பயன்படுத்தப்படுகிறது.

கே. இந்த கழிவுகளால் புற்றுநோய் வரக்கூடும் என்ற அச்சம் இருக்கிறதே..

ப. எந்த ஒரு விஷயத்தை நாம் விவாதித்தாலும் அதற்கு அறிவியல் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் தேவை. அப்படி புள்ளிவிவரங்கள் இல்லை. 2017 மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளின் அடிப்படையில், புற்று நோய் அதிகம் உள்ள 6 மாவட்டங்களில் தூத்துக்குடி இல்லை. இந்தத் தொழிற்சாலைக்கு எதிரிலேயே ஒரு குடியிருப்புப் பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்குதான் நாங்கள் வசிக்கிறோம். எங்களில் யாருக்கும் அவர்கள் சொல்வதுபோல பாதிப்பு தொழிற்சாலையினால் வரவில்லை. தூத்துக்குடி நகரிலும் எங்கள் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். அவர்களிடமும் இம்மாதிரி பாதிப்பு இல்லை.

கே. இந்தத் தொழிற்சாலை தொடர்பாக சில குறிப்பான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. முதலாவதாக, Red Catagory பிரிவில் உள்ள இந்தத் தொழிற்சாலை, உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 25 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்படக்கூடாது என்பது உங்களுக்கு விதிக்கப்பட்ட முதல் நிபந்தனை. ஆனால், இந்தத் தொழிற்சாலை 15 கி.மீ. தூரத்திற்குள் உள்ளது. இரண்டாவதாக தொழிற்சாலையைச் சுற்றிலும் 250 மீ அளவுக்கு மரம் வளர்க்க வேண்டும் என்பது. இந்த இரண்டையுமே நீங்கள் பின்பற்றவில்லை.

ப. இந்த விவகாரங்கள் எல்லாமே உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவிட்டன. 1990களின் பிற்பகுதியில் இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட சிலர் இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்தனர். அதன் தீர்ப்பு 2013ல் வெளியானது. அதில் எல்லா விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.

முதலாவதாக, மன்னார் வளைகுடா விவகாரம். இந்த தொழிற்சாலையை, அறிவிக்கப்பட்ட கடல்சார் சூழல் பூங்காவிலிருந்து 25 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மாநில அரசு இதுவரை இதனை கடற்பூங்காவாக அறிவிக்கவில்லை. அப்படி ஒரு நோக்கம் இருப்பதாக மட்டும்தான் சொல்லியிருக்கிறது.

நாங்கள் தொழிற்சாலையை ஆரம்பித்த காலகட்டத்தில், பல தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை கடலில் கொட்டிவந்தன. அம்மாதிரியான தொழிற்சாலைகளுக்குத்தான் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். எங்கள் தொழிற்சாலையில் அப்படி கழிவுகள் ஏதும் இல்லை.

தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டர் தொலைவுக்கு மரம் வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனையைப் பூர்த்திசெய்தால், தொழிற்சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் சுமார் 75 சதவீத நிலத்தை மரம் வளர்க்கத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால், நாங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகி, நிலைமையைச் சொன்னோம். இதையடுத்து அவர்கள் 250 மீட்டர் என்பதை 25 மீட்டராக மாற்றிக்கொடுத்தார்கள்.

அனுமதிக்கப்பட்டதைவிட நாங்கள் அதிக உற்பத்தி செய்கிறோம் என்பது தவறு. துவக்கத்தில் ஒரு நாளைக்கு 391 மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 44 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யலாம். ஆனால், நாங்கள் உற்பத்தி செய்தது ஒரு லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன். ஆக, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்தான் உற்பத்தி செய்கிறோம்.

கே. பிறகு ஏன் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உங்களுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது?

ப. ஒவ்வொரு தொழிற்சாலையும் இயங்க வேண்டுமென்றால், Consent to Operate என்ற உரிமத்தை தமிழ்நாடு மாசுக்காட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெற வேண்டும். உரிமம் காலாவதியாவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக இந்த உரிமத்தைப் பெற வேண்டும். நாங்கள் வருடாவருடம் இதனைப் புதுப்பித்துவந்தோம். ஆனால், நடுவில் ஒரு மூன்று - நான்கு வருடங்கள் இந்த உரிமம் இல்லாமல், deemed consent provision என்ற அடிப்படையில் இயங்கிவந்தோம்.

இதனை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இவ்வளவு பெரிய நிறுவனம் உரிமம் இல்லாமல் இயங்கக்கூடாது என்று சொன்னார்கள். அதேபோல, வாரியமும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இம்மாதிரி விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. இருந்தபோதும், சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகள் எழுப்பப்பட்டுக் கொண்டேயிருப்பதால், 100 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அதிலிருந்து இதுவரை செலவு ஏதும் செய்யப்படவில்லை.

கே. 2013ல் இங்கிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதில் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதா இல்லையா?

ப. 2013ல் வாயுக் கசிவு ஏற்பட்டதாக சொல்லப்படும் விவகாரம்தான் இந்த நிறுவனம் மீது சொல்லப்பட்டதிலேயே மிகப் பெரிய குற்றச்சாட்டு. இங்கிருந்து புகை வெளியேறியதாக சொல்லப்பட்டது. உடனடியாக நாங்கள் உற்பத்தியை நிறுத்தினோம். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இது குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை நியமித்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஐஐடி பேராசிரியர்கள் அந்தக் கமிட்டியில் இடம்பெற்றிருந்தார்கள். அந்தப் புகை எங்கள் தொழிற்சாலையிலிருந்து வரவில்லையென்பது எங்களுடைய வாதம். இந்தக் கமிட்டி நான்கு மாத ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த புகை ஸ்டெர்லைட்டிலிருந்து வரவில்லையென்று கூறியது. இதற்குப் பிறகு மீண்டும் உற்பத்தியைத் துவக்கினோம்.

கே. தொழிற்சாலை துவங்கப்பட்டதிலிருந்து அடிக்கடி நடந்த விபத்துகளில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்..

ப. இந்தியச் சூழலில் தொழிற்சாலையில் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது மிகக் கடினமான காரியமாக இருக்கிறது. இருந்தபோதும் முடிந்த அளவு பணியாளர்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிசெய்கிறோம். வேதாந்தா நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்திய தரத்திற்கு பாதுகாப்பை நாங்கள் உறுதிசெய்வதில்லை. பதிலாக, சர்வதேசத் தரத்திற்கு இதனை உறுதிசெய்கிறோம். உலகின் மிகச் சிறந்த தாமிர உருக்கும் தொழிற்சாலையாக அதனால்தான் நாங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் ஆரம்ப காலத்தில் நடந்த விபத்துகள். இப்போது அப்படி நடப்பதில்லை.

கே. இந்தத் தொழிற்சாலை நடத்தப்பட்டுவரும் கடந்த இருபது ஆண்டுகளாகவே இந்தப் பகுதி மக்கள் இதனை எதிர்த்துவருகிறார்கள். அவர்களுக்கு பயம் இருக்கிறது. உங்கள் தொழிற்சாலையிலிருந்து ஆபத்தான கழிவுகளோ, வாயுவோ வெளியேறவில்லை என்பதை நீங்கள் ஏதாவது ஆய்வின் மூலமாக உறுதிசெய்திருக்கிறீர்களா?

ப. இங்குள்ள மாசின் அளவு குறித்த புள்ளிவிவரங்கள் உடனடியாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் சொல்கின்றன. அவர்கள் அதைத் தொடர்ச்சியாக கண்காணிக்கிறார்கள். இந்தப் பகுதி மக்களுக்கு தொழிற்சாலை குறித்த அச்சத்தைப் போக்குவதற்காகவே, ஒவ்வொரு சனிக்கிழமையும் உள்ளூர் மக்களை எங்கள் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்க அழைக்கிறோம். யார் வேண்டுமானாலும் முன் பதிவுசெய்து வந்து பார்க்கலாம். உள்ளூர் மக்கள் நேரடியாக எங்களை அணுகி அவர்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்கிக்கொள்ளலாம்.

கே. இவ்வளவு பாதுகாப்பான தொழிற்சாலையாக இருந்தால், ஏன் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும்?

ப. இதற்குப் பின்னணியில் உள்நோக்கங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மூன்று தாமிர தொழிற்சாலைகள் இருக்கின்றன. இருந்தபோதும் இந்தியாவின் தாமிரத் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. அதனால், இறக்குமதிதான் செய்துகொண்டிருக்கிறோம். இது தவிர, தேவை வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. வருடம்தோறும் 8-9 சதவீதம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடைவெளி இருக்கிறது. இதனால், எங்களுடைய தொழிற்போட்டியாளர்கள், பல என்ஜிஓக்களுக்குப் பணம் கொடுத்து போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: