மாநிற தமிழ் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறதா? #BBCShe

கோவை நகரின் தெருக்களில் நான் சென்றபோது மாநிறம் உடைய பெண்கள் பலரையும் பார்த்தேன். ஆனால், வெள்ளை நிறத்தில் தோல் உடைய பெண்கள் விளம்பரப் பதாகைகளில் நின்றுகொண்டு என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

மாநிறத் தோற்றம் உடைய பெண்கள் அதிகம் வசிக்கும் தமிழகம் போன்றதொரு மாநிலத்தில் வெள்ளை நிறப் பெண்கள் இருக்கும் பதாகைகள் வேறு எங்கோ இருந்து கொண்டு வரப்பட்டது போல இருந்தது.

எனக்கு மட்டுமல்ல, #BBCShe திட்டத்துக்காக அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மாணவிகளை சந்தித்தபோது அவர்களும் இதே கருத்தை கூறினார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

'"விளம்பரங்களில் இருக்கும் பெண்களை போலவே சமூகத்தில் அனைத்துப் பெண்களும் இருப்பார்கள் என்று நினைக்க முடியாது. மெல்லிய உடலும், நீண்ட கூந்தலும் கொண்டே பெண்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது," என்ற கருத்தை அவர்கள் பிரதிபலித்தனர்.

இந்தப் பகுதியில் இருக்கும் பெண்களின் தோற்றம் ஒரு மாதிரி இருக்கும்போது, வேறு தோற்றம் உடைய பெண்களைக் கொண்டு பதாகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்படுவது எதனால்?

நகைக் கடை விளம்பரங்களிலும் வெள்ளைத் தோல் உடையே பெண்களே தென்படுகிறார்கள்.

தமிழ் திரையுலகிலும் இதே நிலை இருப்பதை ஒரு மாணவி சுட்டிக்காட்டினார்.

தமிழ் திரைப்பட நடிகைகள் குறித்து கூகுளில் தேடினால் வரும் முடிவுகளில் பெரும்பாலும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஹன்சிகா, தமன்னா, அனுஷ்கா, அசின் போன்ற நடிகைகளின் படங்களே வருகின்றன.

திரிஷா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்குமான ஒரு ஒற்றுமை, அவர்களுக்கு இருக்கும் வெள்ளை நிறத் தோல்.

ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற கறுப்பு நிறத் தோல் உடைய கதாநாயகர்களை ஏற்றுக்கொள்வதில் தமிழக ரசிகர்களுக்கு பிரச்சனை இல்லை.

விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் காட்டப்படும் பெண்களின் தோற்றங்கள் மிகைப்படுத்தப்பட்ட, 'உண்மையற்றவை' என்று நாம் அதை புறக்கணிக்க முடியாது.

அவை தங்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்து கல்லூரி மாணவிகள் கூறுகின்றனர். தங்களின் தோலின் நிறத்தால் தன்னம்பிக்கை குறைவது, குடும்பங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்டப்படுவது ஆகியவை குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

ஷாருக் கான் 2013இல் நடித்த ஒரு விளம்பரத்தை போல வெள்ளைத் தோல்தான் அழகு எனும் கருத்து மீண்டும் திணிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

சமீப காலங்களில் நந்திதா தாஸ் போன்று திரைத்துறைக்குள்ளேயே இருந்து அந்தக் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

2017 மிசர்ஸ் இந்தியா எர்த் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கோவையைச் சேர்ந்த காயத்ரி நடராஜன் உள்ளிட்டோரும் மாநிறத் தோலால் தாங்கள் பாகுபாட்டுக்கு ஆளானது குறித்து பேசியுள்ளனர்.

வெள்ளை நிறத்தோல் உடைய பெண்களை வெற்றிபெற்றவர்களாக காட்டக் காரணம் மக்களின் எதிர்பார்ப்பு என்று விளம்பர நிறுவனங்கள் கூறுகின்றன. அது உண்மையும்கூட.

எனினும், இந்த இளம் பெண்கள் கூறுவதற்கு செவிமடுப்பதன் மூலம், அவர்களின் தேவையை மட்டுமல்ல, இத்தகைய கருத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்வது மூலம் ஊடகம் உண்டாக்கும் தாக்கம் குறித்து ஒளிபரப்பு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அறிய முடியும் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்