நாளிதழ்களில் இன்று: “‘அமித் ஷா அழைப்பை நிராகரித்த மகாராஜா குடும்பம்`

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (தமிழ்) - 'அமித் ஷா அழைப்பை நிராகரித்த மகாராஜா குடும்பம்`

படத்தின் காப்புரிமை Getty Images

பாஜகவில் சேருமாறு அக்கட்சியின் தலைவர் அமித் ஷா விடுத்த அழைப்பை மைசூரு மகாராஜா குடும்பம் நிராகரித்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து (தமிழ்) நாளிதழ்.

மைசூரு பாஜக நிர்வாகிகள் கூறியபடி அட்டூர்மடம், கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஆகியவற்றுக்கு அமித் ஷா நேரில் சென்று ஆசி பெற்றார். இதையடுத்து மைசூரு அரண்மனைக்குச் சென்ற அமித் ஷா ம‌றைந்த மகாராஜா ஸ்ரீகண்ட நரசிம்ம தத்த உடையாரின் மனைவியும் மகாராணியுமான பிரமோத தேவியையும், இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாரையும் சந்தித்தார்.

அப்போது அமித் ஷா தரப்பில், "பழைய மைசூரு மாகாணத்தில் பாஜகவுக்கு சற்று செல்வாக்கு குறைவாக இருக்கிறது. பலமாக உள்ள காங்கிரஸை வீழ்த்த மைசூரு மகாராஜா குடும்பத்தின் ஆதரவு தேவை. மகாராஜா குடும்பம் பாஜகவில் சேர்ந்தால் உரிய மரியாதையும் பதவியும் வழங்கத் தயாராக இருக்கிறோம். எங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பாஜகவில் இணைந்தால் மகாராஜா குடும்பத்தின் உறுப்பினருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கத் தயாராக இருக்கிறோம். ம‌றைந்த மகாராஜா ஸ்ரீகண்ட நரசிம்ம தத்த உடையார் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்ததைப் போல அவரது மனைவியான மகாராணியும் ராஜ்ய சபா எம்.பி.யாக இருக்கலாம். இந்த தேர்தலில் எங்களை ஆதரிக்க வேண்டும்" என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதற்கு மகாராணி பிரமோத தேவி, "எனது கணவர் காங்கிரஸில் நீண்ட காலம் இருந்தார். அதனால் பாஜகவில் சேருவது குறித்து உடனடியாக சொல்ல முடியாது. உங்களது கோரிக்கையை பரிசீலிக்கிறேன்" என கூறியதாக தெரிகிறது. இதனிடையே இளவரசர் யதுவீர் கிருஷ்ண தத்தா சாம்ராஜ உடையாரும் எந்த கட்சியிலும் நிச்சயம் சேர மாட்டேன் என கூறியுள்ளார்.

மைசூரு மகாராஜா குடும்பம் பாஜகவின் அழைப்பை நிராகரித்துள்ளதால் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை தி இந்து

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ஆபத்தில் 100 ஹெக்டேர் காடுகள்'

படத்தின் காப்புரிமை Getty Images

பத்தாயிரம் கோடி செலவில் திட்டமிடப்பட்டிருக்கும் சென்னை - சேலம் இடையிலான பசுமை விரைவுச் சாலை திட்டத்துக்காக, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் 100 ஹெக்டார் பரப்பிலான காப்பு காடுகள் அளிக்கப்படலாம் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி - 'தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ 10 - ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை'

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது என்கிறது தினத்தந்தி செய்தி.

மேலும் அந்த நாளிதழ் செய்தி, "சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 12-ம் வகுப்புக்கான பொருளாதார தேர்வு கடந்த 26-ந்தேதி நடந்தது. இதைப்போல 10-ம் வகுப்பு கணித தேர்வு 28-ஆம் தேதி நடந்தது. இந்த 2 தேர்வுகளுக்கான வினாத்தாளும், தேர்வு தொடங்குவதற்கு முன்னரே வெளியானது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதை உறுதி செய்த சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம், 2 தேர்வுகளையும் ரத்து செய்தது. இந்த 2 பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. அதன்படி ரத்துசெய்யப்பட்ட 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி நடைபெறுவதாக மத்திய இடைநிலை கல்வி செயலாளர் அனில் ஸ்வரூப் நேற்று கூறினார்.

அதேநேரம் 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான மறுதேர்வு குறித்து அவர் கூறுகையில், '10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான மறுதேர்வை பொறுத்தவரை, அந்த வினாத்தாள் கசிவானது டெல்லி மற்றும் அரியானாவுடனேயே மட்டுப்படுத்தப்பட்டது. எனவே மறுதேர்வு நடத்துவதாக இருந்தால் இந்த 2 மாநிலங்களில் மட்டுமே நடத்தப்படும். அது குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். அப்படி மறுதேர்வு நடத்துவதாக இருந்தால், அது ஜூலை மாதத்தில் நடத்தப்படும்' என்றார்.

இதைப்போல இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படும் தேர்வுக்கான வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்று கூறிய அனில் ஸ்வரூப், எனவே அங்கும் மறுதேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் தெரிவித்தார். உள்நாடு மற்றும் வெளிநாடு வினாத்தாள்களுக்கு இடையே வேறுபாடுகள் உண்டு எனவும் அவர் கூறினார். இதற்கிடையே தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நேற்று ஒரு சுற்றறிக்கை வந்தது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், 'தமிழகத்தில் 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை' என கூறப்பட்டு இருந்தது" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து - 'பேரணி செல்லவிருக்கும் திரை துறையினர்'

படத்தின் காப்புரிமை Getty Images

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரை துறையினர் ஏப்ரல் 4 ஆம் தேதி பேரணி செல்ல இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்தார். இப்பேரணிக்கு கமல், ரஜினி உள்ளிட்டோரையும் அழைக்க இருப்பதாக அவர் தெரிவித்தார் என்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி - 'மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு`

படத்தின் காப்புரிமை Getty Images

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நிறைவடைதுள்ள சூழலில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை காலை தாக்கல் செய்ய உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: