காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறதா மத்திய அரசு??

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், இதனை பின்பற்ற தவறிய மத்திய அரசு மீது, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி தீர்ப்பு குறித்து தெளிவு படுத்தக் கோரி மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

படத்தின் காப்புரிமை STRDEL

இது தொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஸ்கீம்' என்று தீர்ப்பில் உள்ள வார்த்தையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

ஸ்கீம் என்ற வார்த்தைக்கு கர்நாடகா ஒரு விளக்கம் வைத்துள்ளதாகவும், அதே சமயத்தில் ஸ்கீம் என்றால் அது காவிரி மேலாண்மை வாரியத்தைதான் குறிக்கிறது என தமிழக அரசு தரப்பில் கூறுவதால் குழப்பமான சூழல் நீடிக்கிறது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தற்போது காவிரி நதிநீர் தொடர்பாக குழு அமைக்கப்பட்டால் உணர்ச்சி சீற்றம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடும் என்று மத்திய அரசு அஞ்சுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன், "நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர் வேண்டுமென்றே அதை செய்யாமல் விட்டாமல்தான் அது நீதிமன்ற அவமதிப்பதாகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உண்டாகும். அதனால் தேர்தல் நடத்துவதில் சிக்கல் உண்டாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கால் பெரும் தாக்கம் இருக்காது," என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் பேசிய அவர் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், கர்நாடகாவில் காவிரி மீது கட்டப்பட்டுள்ள அணைகள் நான்கும் அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்து, கர்நாடக அரசின் அனுமதி இல்லாமலேயே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வழிவகை செய்யும் என்பதால் கர்நாடகா அதை எதிர்க்கிறது," என்றார்.

காவிரி தீர்ப்பை அமல்படுத்த மேலும் 3 வார காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு, மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய அரசு வேண்டும் என்றே தீர்ப்பை அமல்படுத்துவதில் காலதாமதம் செய்கிறது என தமிழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

எனவே, கேபினட் செயலாளர் மீதும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இரு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்