குதிரை வளர்த்ததால் தலித் இளைஞர் கொலை - சட்டத்தைவிட வலிய சாதி

  • மார்டின் மக்வான்
  • தலித் உரிமைகள் செயல்பாட்டாளர்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் ரத்தோட் தற்போது உயிருடன் இல்லை. அவரது தவறு சொந்தமாக ஒரு குதிரையை வைத்திருந்தது. 21 வயதே ஆகியிருந்த பிரதீப் 10ஆம் வகுப்புடன் பள்ளியில் இருந்து நின்றுவிட்டார்.

படக்குறிப்பு,

தனது குதிரையுடன் பிரதீப்

தலித் இளைஞரான அவருக்கு குதிரை ஒன்றை வளர்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. தனது ஊரில் இருந்த 'சத்திரிய' குலத்தினரிடம் தலித்தான நானும் ஒரு குதிரை வளர்க்கிறேன் என்று பெருமைப்பட அவர் அந்த விலங்கை வளர்க்கவில்லை.

குதிரை மீது பேரன்பு கொண்டிருந்த பிரதீப், ஒரு சிறந்த குதிரை பயிற்றுநராக இருந்தார். தனது இளைய மகனுக்காக பிரதீப்பின் தந்தை 30,000 ரூபாய்க்கு அந்தக் குதிரையை வாங்கிக் கொடுத்தார்.

திம்பி கிராமத்தைச் சேர்ந்த சத்திரிய குலத்தவர்கள் கடந்த வாரம் பிரதீப்பின் தந்தையை அழைத்து குதிரையை விற்று விடுவதே நல்லது என்று மிரட்டியுள்ளனர்.

குதிரை வளர்ப்பதை தங்கள் இனத்தின் பெருமையாகக் கருதும் அவர்களுக்கு ஒரு தலித் குடும்பம் குதிரை வளர்ப்பது பிடிக்கவில்லை.

அவர்களுக்கு பிடிக்காத, மீசை வைத்திருந்தவரான பிரதீப் கொல்லப்பட்ட விதத்திலேயே, அவரைக் கொன்றவர்களுக்கு பிரதீப் மீது இருந்த வன்மம் புரியும். தாக்குதலைத் தடுக்க முயன்ற பிரதீப்பின் கைகளில் பல வெட்டுக்காயங்கள் இருந்தன.

படக்குறிப்பு,

பிரதீப்பின் தந்தை

கடந்த வியாழனன்று அவரது உடல் ரத்த வெள்ளத்துக்கு நடுவில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலையின் பின்பக்கம் வெட்டப்பட்டு, கழுத்தில் அது தொங்கிக்கொண்டிருந்தது.

இந்த அளவுக்கு கொடூரம் ஏன்? இந்த நாட்டில் சட்டத்தைவிட சாதி வலிமையானது. பிரதீப்பின் தந்தையுடன் மருத்துவமனையின் வெளியில் அமர்ந்திருந்தபோது எனக்கு உச்ச நீதிமன்றத்தின் நினைப்பே வந்தது.

சுதந்திரத்துக்கு பிறகு இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் நீதி பெறுவதற்கான கடைசி புகலிடமாக நீதித் துறையே இருந்துள்ளது.

தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சமீபத்தில் இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மெல்லிய சந்தேகத்தை எழுப்பி இருந்தனர். இந்த வழக்கையும் அவர்கள் பொய் என்று சொல்லப்போகிறார்களா?

படக்குறிப்பு,

இந்தியாவின் பல பகுதிகளில் குதிரை வளர்ப்பது செல்வம் மற்றும் ஆதிக்கத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது

பாவ்நகர் பொது மருத்துவமனைக்கு பிரதீப்பின் குடும்பத்தினருக்கு ஆதரவு மற்றும் ஆறுதல் தெரிவிக்க வந்திருந்த மக்கள் மூலம் எனக்கு ஒன்று தெரிய வந்தது. அங்கு தலித்துகளுக்கு எதிராக எவ்வளவு வன்கொடுமைகள் நடந்தாலும் புகார் கொடுக்க யாரும் முன்வருவதில்லை.

இந்த மாவட்டத்தில் 'நவ்சர்ஜன்' அமைப்பு தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை நடந்த 40 வழக்குகளில் தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளது. எனினும், அது மிகச் சிறிய அளவுதான்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால்தான் உடலை பெற்றுக்கொள்வேன் என்று பிரதீப்பின் தந்தை காவல் துறையிடம் கூறியுள்ளார். முதலில் உடலைப் பெற்றுக்கொண்டு பின்பு அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம் என்று அவரை வலியுறுத்தும் தலைவர்கள் இருந்தனர்.

ஆனால், அவர் மனம் மாறவில்லை. சமூக நலத் துறை அதிகாரிகள், 4,15,000 ரூபாய் இழப்பீட்டு தொகைக்கான காசோலையைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர். அவர் அதையும் வாங்க மறுத்துவிட்டார்.

ஆறு மணி நேரம் உடலை வாங்காமல் இருந்தபின் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். உடல் வாங்கப்பட்டது. பிரதீப்பின் உடலை புதைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்தனர்.

பிரதீப்பின் இறுதி ஊர்வலத்தில் அவரது குதிரையும் பங்கேற்பதை யாராலும் தடுக்க முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: