நாளிதழ்களில் இன்று: ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு இது- கமல் ஹாசன்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி - 'ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு - கமல் ஹாசன்'

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கேட்பது அரசியல் விளையாட்டு என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

"மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது அடக்குமுறை. எதிர்ப்பு குரலே வரக்கூடாது என்று அடக்குமுறை செய்ததால் தீயாக பரவிவிடும். மாணவர்களின் எழுச்சி என்பது அவர்களுடைய கோபம் மட்டுமல்ல.

மக்களின் கோபத்தை அவர்கள் பிரதிபலிக்கின்றனர். நானும் அப்படித்தான். இதை அடக்க அடக்க அதிகரிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கேட்பது ஒரு அரசியல் விளையாட்டு. ஓட்டு வேட்டைக்கான விளையாட்டு. இப்படி திசை திருப்பப்படும் என்று ஏற்கனவே தெரிவித்தேன்.

அப்படித்தான் நடந்து இருக்கிறது. என்னுடைய முறையீடு இனி இங்கே கேட்டு பிரயஜோனம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்காக நாளை (இன்று) தூத்துக்குடி செல்கிறேன். அங்குள்ள பிரச்சினைகள் எனக்கு தெரியும். இவருக்கு என்ன தெரியும் என்று கிண்டல் அடித்து பேசுகின்றனர்.

மக்களுக்கு என்னை விட அதிகம் தெரியும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நித்திரையில் இருந்து எழவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ஸ்டெர்லைட்: மக்கள் குறைகள் கணக்கில் கொள்ளப்படும் - தமிழக அரசு'

ஸ்டெர்லைட் ஆலை அருகில் வசிக்கும் மக்களின் குறைகள் கணக்கில் கொள்ளப்படும் என்று தமிழக அரசு கூறி உள்ளது. முன்னதாக, ரஜினி மக்கள் மன்றத்தின் நிறுவனர் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டர்லைட் விவகாரத்தில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார் என்று செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பண்ணன் சட்டப்படி ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டு இருப்பதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து (தமிழ்) - 'மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தடை செய்ய முடிவு'

மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்வதற்கான காரணங்களை கண்டறிந்து கூறுமாறு உளவுப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ்.

படக்குறிப்பு,

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம்

கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்க திட்டம், மீத்தேன், நியூட்ரினோ என தமிழக மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை, தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு முன்பு சிறிய போராட்டத்துடன் அமைதியாக இருந்த மக்கள், இப்போது ஒவ்வொரு திட்டத்தையும் கடுமையாக எதிர்த்து தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் திடீர் மாற்றத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யுமாறு உளவுப்பிரிவு போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அதன்பேரில் உளவுப்பிரிவு போலீஸார் ஆய்வு நடத்தி, ஒரு அறிக்கையையும் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர். அதில், "பூவுலகின் நண்பர்கள், மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சி, மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் உட்பட 11 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மக்களை தூண்டி விடுகின்றனர். மத்திய அரசு திட்டங்களில் உள்ள அபாயங்களை மக்களிடம் அறிவியல் விளக்கத்துடன் கூறுகின்றனர். இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே சில ஐடி ஊழியர்களும் உள்ளனர். இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கட்டுப்படுத்தினால் மக்கள் போராட்டங்கள் நடத்துவது 90 சதவீதம் குறைந்து விடும் என்று தெரிவித்துள்ளனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கோரியது மத்திய அரசு!

தினமணி - 'சீன எல்லையில் இந்திய படைகள் குவிப்பு'

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சீன எல்லையையொட்டிய பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்துள்ளது என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ். சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாமில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே சுமார் 3 மாதம் நீடித்த முற்றுகைச் சம்பவத்தின் எதிரொலியாக இந்நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) - 'நகர்மயமாக்கலால் மரணித்த நீர் நிலைகள்'

சென்னை நகரத்தில் நகர்மயமாக்கலால் 1893 - இல் 12.6 சதுர கிலோமீட்டர் அளவுக்கு இருந்த நீர் நிலைகளின் பரப்பு, 2017 ஆம் ஆண்டில் 3.2 சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது என்று கூறுகிறது தி இந்து (ஆங்கிலம்) செய்தி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: