நாளிதழல்களில் இன்று: தமிழகத்தில் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: `அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி`

படத்தின் காப்புரிமை facebook

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பல மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுங்க வரி செலுத்த மறுக்கும் போராட்டம் நடத்தினர். இதில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடினர். வேல் முருகன் உள்பட ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Twitter

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சுங்கச் சாவடிகளில் வரிசெலுத்த மறுக்கும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி நேற்று நடத்தியது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம் அருகே காலை 11 மணிக்கு அக்கட்சியினர் 300 பேர் திரண்டனர். கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஆதரவாளர்களுடன் 20-க்கும் மேற்பட்ட கார்களில் அங்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் வரி வசூல் செய்துகொண்டிருந்தனர்.இதனை பார்த்த வேல்முருகனுடன் வந்த ஆதரவாளர்கள் திடீரென காரில் இருந்து இறங்கி சுங்கச்சாவடி மையத்தை அடித்து நொறுக்கினர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

மேலும் தினத்தந்தி நாளிதழ், சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து தலையங்கம் எழுதி உள்ளது.

சுங்க கட்டணம்:

படத்தின் காப்புரிமை Getty Images

"நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 461 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 42 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளுக்கு அதாவது பரனூர்-விழுப்புரம், சென்னசமுத்திரம்-காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சீபுரம் மண்டலம், சூரப்பேட்டை-திருவள்ளூர், பட்டறை பெரும்புதூர்-திருவள்ளூர், திருத்தணி-திருவள்ளூர், வானகரம்-திருவள்ளூர், கணியூர்-கோயம்புத்தூர், ஆத்தூர்-சேலம், சாலைபுதூர்-தூத்துக்குடி, பள்ளிக்கொண்டா-வேலூர், வாணியம்பாடி-வேலூர், எட்டுவட்டம்-திருநெல்வேலி, கப்பலூர்-திருநெல்வேலி, நாங்குநேரி-திருநெல்வேலி, புதுக்கோட்டை-திருச்சி-மதுரை பிரதானசாலையில் உள்ள சிட்டம்பட்டி, பூதக்குடி-மதுரை, வெம்பாலக்குடி-சிவகங்கை, லட்சுமணப்பட்டி-சிவகங்கை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு 10 சதவீத கட்டணமும், மற்ற கனரக வாகனங்களுக்கு 4 முதல் 6 சதவீத கட்டண உயர்வும் நேற்று முதல் வசூலிக்கப்படுகிறது.

இதுதவிர தமிழ்நாடு சாலைமேம்பாட்டு நிறுவனம் பராமரிப்பில் சென்னை-புதுச்சேரி கிழக்குகடற்கரை சாலையில் அக்கரை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் நேற்று அமலுக்கு வந்தது.

இந்தக்கட்டண உயர்வு மூலம் பல அத்தியாவசிய பண்டங்களை எடுத்துச்செல்லும் கனரக வாகனங்களுக்கும் கட்டண உயர்வு விதிக்கப்படுவதால் அந்த பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருக்கிறது. ஆம்னி பஸ்களின் கட்டணம் உயரும்." என்கிறது அந்த தலையங்கம்.

தி இந்து (ஆங்கிலம்): 'மெரினாவில் நீக்கமற நிறைந்த போலீஸ்`

மெரினாவில் பெரும் மக்கள் திரள் போராட்டம் முடிந்து ஓராண்டாகிவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிராக தமிழகமெங்கும் மக்கள் போராடி வரும் சூழ்நிலையில், மீண்டும் அத்தகைய மக்கள் திரள் போராட்டம் மெரினா கடற்கரையில் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஆயிரகணக்கான போலீஸார் ஞாயிற்றுகிழமை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் குவிக்கப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சனிக்கிழமை இரவு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உட்பட காவல் துறை உயர் அதிகாரிகள் மெரினாவை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி : 'காஷ்மீரில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை`

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 3 இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை சம்பவங்களில், 13 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில், இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.

படத்தின் காப்புரிமை Getty Images

சோபியான் மாவட்டம், திராகட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். இந்தச் சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், அவர்களில் சிலர் பயங்கரவாத அமைப்புகளின் தளபதிகளாக செயல்பட்டு வந்தவர்கள் என்று விவரிக்கிறது அந்த செய்தி.

'இஸ்ரோவுடன் ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோள் தகவல் துண்டிப்பு'

விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோளுக்கும் இஸ்ரோ கட்டுபாட்டு மையத்துக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என்கிறது தினமணி நாளிதழ்.

மின்சக்தி அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வத் தகவல் எதையும் இஸ்ரோ தெரிவிக்கவில்லை என்கிறது அந்நாளிதழ்.

தி இந்து (தமிழ்): 'சென்னையில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது'

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட முயன்ற மு.க.ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கானோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை twitter/mkstalin

மேலும், "காவிரி விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதற்கிடையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த உடன் மதியம் 12.30 மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.க தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் வள்ளுவர் கோட்டம் விரைந்தனர். அவர்களும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட அரசியல் கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னோக்கி சென்றனர். அங்கு தயாராக நின்றிருந்த போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தி 100 பெண்கள் உள்பட சுமார் ஆயிரம் பேரை கைது செய்தனர்." என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ்.

ஸ்டெர்லைட் ஆலை:

படத்தின் காப்புரிமை தி இந்து

ஸ்டெர்லைட் தொடர்புடைய செய்திகளை படிக்க:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'சரண் அடைந்த மத்திய அமைச்சரின் மகன்'

பீகார் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மத்திய அமைச்சர் அஸ்வினி செளபேவின் மகன் அர்ஜித் சஷ்வத் நேற்று போலீஸார் முன்பு சரண் அடைந்தார் என்கிறது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி. அர்ஜித் சஷ்வத் தலைமையில் கடந்த 17-ந்தேதி பாகல்பூரில் ராம நவமி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் போது சில இடங்களில் வகுப்பு கலவரம் ஏற்பட்டது. இதில் ஆறு போலீஸார் உட்பட 20 பேர் கயமடைந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அர்ஜித் நேற்று ஹனுமன் கோயில் முன்பு சரணடைந்தார் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்