‘உப்புகாற்று, கடற்கரை,`பிபிசி சாம்பியன் கோப்பையை வென்ற எளிய இளைஞர்களின் பெருங்கனவு!

பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் #BBCStreetCricket போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஈரோடு அணியை வீழ்த்திய ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐ

பிபிசி சாம்பியன் கோப்பையை வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் #BBCStreetCricket

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த ராமநாதபுரம் அணி 99 ரன்கள் எடுத்தது. 100 ரன்களை இலக்காக வைத்து ஆடத்தொடங்கிய ஈரோடு அணி, முதலில் அதிக சிக்சர்கள் அடித்து, அதிக ரன்களை குவிக்கத் தொடங்கியது.

ஆனால், இக்கட்டான நேரத்தில், ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் , அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நான்காவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்களில் சுருண்டது.

'உப்புகாற்றும், கடற்கரையும்`

ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணிக்காக ஆடிய ஐந்து இளைஞர்களும் எளிய மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

கடற்புரமும் உப்புக்காற்றும்தான், கிரிக்கெட் குறித்த எங்களது கனவை வளர்த்தெடுத்தது என்கிறார் இந்த இளைஞர்கள்.

கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் போது, போகும் வழியில் ஏதோவொரு மின்சாதன கடையில் கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்பப்பட்டால், அதுவும் அந்த மேட்ச்சில் இந்தியா விளையாடினால், அனைத்தையும் மெய்மறந்து மேட்ச்சை பார்க்கும் லட்சகணக்கான இளைஞர்களின் கூட்டத்தை பார்த்தால் அதில் நிச்சயம் நாங்களும் இருப்போம். என்றாவது ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாடிவிடமாட்டோமா என்ற ஏக்கம் எங்களுக்கும் இருக்கிறது. அதை இந்த உப்புகாற்று தினம் தினம் வளர்த்தெடுத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள் இந்த ராமநாதபுரத்து இளைஞர்கள்.

ஏதோ விட்டேத்தியாக திரிந்துக் கொண்டு இருக்கிறோம் என்று அனைவரும் கூட்டத்தில் ஒருவராக எங்களை நினைத்து கடந்து செல்ல, பிபிசியின் கோப்பை எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்கிறார்கள் இவர்கள்.

ஐந்து இளைஞர்களும், அவர்கள் பின்னணியும்!

இந்த கோப்பைக்காக ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியில் ஐந்து இளைஞர்களின் பின்னணி.

முதலில் அணியின் கேப்டன் நம்புகுமார் (20). இரண்டாம் ஆண்டு Bsc I.T படிக்கிறார்.

இவர் இராமேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.

இவரது அப்பா மீனவர் மீன்பிடித்தொழிலில் வரும் வருமானம் மட்டும்தான் இவர்கள் வாழ்வாதாராம்.

ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மற்றொருவர் முரளிதரன் (22).சொந்த ஊர் ராமேஸ்வரம். இவரது சிறு வயதில் அவரது தந்தையை இழந்த இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

அடுத்ததாக ஜோதி ராமலிங்கம் (19). கல்லூரி மாணவரான இவர் B.Com முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும் வாழ்வாதரத்திற்காக மின்பிடி தொழில் செய்துவருகிறார்.

நான்காவதாக ஜெய்கணேஷ் (22 ) வயதுடைய இவர். இளம் வயதில் தன் தந்தையை இழந்தவர். அண்ணன் மீன்பிடி தொழில் செய்து ஜெய்கணேஷை படிக்க வைத்தார்.

படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்காததால் குடும்ப சூழ்நிலை கருதி ஜெய் கணேஷ் தற்போது அவரது அண்ணனுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகிறார்.

கடைசியாக அணி இளம் வீரர் சரண் (19) இவர் தங்கச்சிமடம் மீனவ கிராமத்தில் அமைந்துள்ள மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது அண்ணன் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவில் யாத்திரை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நீல நிற ஜெர்ஸி கனவு

தமிழகத்தின் தென்கோடியில் இருந்து புறப்பட்டு வந்து, பிபிசி கோப்பையை கைப்பற்றிய இந்த எளிய இளைஞர்களுக்கு ஒரு பெரிய கனவு இருக்கிறது. அது என்றாவது ஒரு நாள் அந்த நீல நிற ஜெர்ஸியை அணிந்து கொண்டு இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பதுதான் அது.

சென்னையிலிருந்து கோப்பையுடன் ராமநாதபுரம் சென்ற இளைஞர்களுக்கு இன்று ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: