'ஸ்கீம்' என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல - உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், STRDEL

`ஸ்கீம்` என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை அமல்படுத்த தவறியது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு மீது தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக எடுத்து கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் உமாபதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று கோரிக்கை வைத்தார்.

அப்போது தலைமை நீதிபதி, தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ’ஸ்கீம்’ என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று வழக்கறிஞர் உமாபதியிடம் கேட்டார்.

அதற்கு பதலிளித்த உமாபதி நாங்கள் அவ்வாறுதான் கருதுகிறோம் என்று தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி `ஸ்கீம்` என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல என்று தெளிப்படுத்தினார். இதன்மூலம் `ஸ்கீம்` என்ற வார்த்தையில் காவிரி மேலாண்மை வாரியமும் அடங்கும் என்று தெளிவாகிறது.

பட மூலாதாரம், Getty Images

மேலும் தலைமை நீதிபதி குறிப்பிடுகையில் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைக்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் தீர்ப்பு வழங்கினோம். இந்த பிரச்சனையின் தீவிரத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறோம். தமிழக நலனை நாங்கள் கவனத்தில் கொள்வோம் என்று தெரிவித்தார்.

தமிழகத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பிரச்சனையில் மேலும் பல அம்சங்களை ஆராய வேண்டியிருப்பதால் உங்களுடைய கோரிக்கை தொடர்பான விசாரணை ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: