தெரு கிரிக்கெட் உருவாக்கிய உற்சாகமும் எதிர்பார்ப்பும் #BBCStreetCricket

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
தெரு கிரிக்கெட் உருவாக்கிய உற்சாகமும் எதிர்பார்ப்பும்
படக்குறிப்பு,

அரையிறுதியில் சென்னையையும், இறுதிப்போட்டியில் ஈரோட்டையும் வீழ்த்தி பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டி பட்டம் வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியினர்

சென்னையில் பிபிசி நடத்திய தெரு கிரிக்கெட் போட்டிகள், இளைஞர்களிடமும் நேயர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, ஆர்வத்தையும் உருவாக்கியிருக்கிறது.

இந்தியா விளையாட்டுத் துறையில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்துவருகிறது என்றாலும் கிரிக்கெட் என்ற ஆட்டத்தின் மீது இந்த தேசத்திற்கு உள்ள நேசமும் ஆர்வமும் அளப்பரியது. இந்தியாவில் தொழில்முறையாக இந்த ஆட்டத்தை ஆடுபவர்கள் மிகக் குறைவுதான். ஆனால், நாடு முழுவதுமே இந்த ஆட்டம், ஆடுபவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு ஆடப்பட்டுவருகிறது.

மைதானங்களில், நெரிசலான சந்துகளில், போக்குவரத்து மிகுந்த சாலைகளில், மொட்டை மாடிகளில் தங்களுக்கென விதிகளைவைத்துக்கொண்டு கிரிக்கெட் ஆடுபவர்களே. . இம்மாதிரி விளையாட ஆரம்பித்து, இந்திய அணியில் இடம் பெற்றவர்கள்கூட இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், சாதாரணமாக தமிழக மைதானங்களில் ஆடும் இளைஞர்களை வைத்து ஒரு கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து, அந்தப் போட்டியை நேரலையாக ஒளிபரப்புச் செய்ய பிபிசி தமிழ் முடிவெடுத்தது.

இதற்கென தமிழ்நாடு முழுவதும் இம்மாதிரி அணிகள் தேர்வுசெய்யப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் அரையிறுதிக்கென நான்கு அணிகள் தேர்வாயின.

இந்த நான்கு அணிகளுக்குமான அரையிறுதிப் போட்டிகள் சென்னை மந்தைவெளியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று நடைபெறுமென முடிவு செய்யப்பட்டது.

இதனால், அன்று காலையே மைதானம் களைகட்டியது. பிபிசியைச் சேர்ந்த செய்தியாளர்கள், களப் பணியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் களமிறங்கி போட்டியை நேரலை செய்வதற்கான வேலைகளைத் துவங்கினர்.

அந்த மைதானத்தில் காலை முதலே விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள், ஆர்வத்துடன் இந்த ஏற்பாடுகளை வேடிக்கைபார்க்க ஆரம்பித்தாலும் தாங்களும் அதே மைதானத்தில் தொடர்ந்து விளையாட முடியுமா என்ற பதைப்பும் அவர்களிடம் இருந்தது. ஆனால், இந்தப் போட்டிகள் நடக்கும் அதே மைதானத்தில் அவர்களும் அருகிலேயே விளையாடலாம் என்று தெரிவித்ததும் ஏற்பாடுகளை வேடிக்கை பார்த்தபடியே மகிழ்ச்சியுடன் அவர்களும் விளையாட ஆரம்பித்தனர்.

இந்தப் போட்டிகளை நேரலை செய்வதற்காக ஐந்து கேமராக்களும் கிரேன் வசதியுடன் ஒரு கேமராவும் பயன்படுத்தப்பட்டது. இந்தக் காட்சிகள் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு, அணிகளின் பெயர்கள், வீரர்களின் பெயர்களுடன் பிபிசியின் சமூக வலைதளங்களில் நேரலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இவை எல்லாம் தயாரானதும் காலை 11 மணியளவில் முதல் அரையிறுதிப் போட்டி துவங்கியது. இந்தப் போட்டியில் சென்னை அணியும் ராமநாதபுரம் அணியும் விளையாடியது. இதில் ராமநாதபுரம் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்த அரையிறுதிப் போட்டியில் திருச்சி அணியும் ஈரோடு அணியும் மோதின. இதில் ஈரோடு அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டிகள் நண்பகல் நேரத்தில் நடைபெற்றாலும் பெரும் உற்சாகத்துடன் வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளைப் பார்க்க மைதானத்திற்கு வெளியேயும் பலர் குவிந்திருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, இறுதிப்போட்டி துவங்கியபோது பொதுமக்கள் பலரும் பிபிசி வானொலியின் பழைய நேயர்களான மயிலை பட்டாபி, அருண், ராஜேஷ், ஜெய்சக்திவேல் உள்ளிட்டவர்களும் குவிந்திருந்தனர்.

படக்குறிப்பு,

இறுதிப்போட்டி துவங்குவதற்கு முன்பு அணிவகுத்து நின்ற ஈரோடு ஸ்டார்ஸ் மற்றும் ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணிகளின் வீரர்கள்

பிபிசியின் இந்த இறுதிப்போட்டியைப் பற்றி அவர்களும் பலருக்குத் தெரிவிக்க, மேலும் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர். மிக விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ராமநாதபுரம் அணி வெற்றிபெற, மைதானம் முழுவதும் எழுந்த கைதட்டல்கள், சாலைகளில் போவோர் வருவோரையும் ஈர்த்தது.

இதற்குப் பிறகு பிபிசியின் நேயர்கள் சூழ்ந்து நிற்க, ராமநாதபுரம் அணியினர் கோப்பையைப் பெற்றுக்கொண்டனர். இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி, சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இவர்களிடம் தனித்தனியே பேட்டிகளும் எடுக்கப்பட்டு, அவையும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

இந்தப் போட்டிகள் அனைத்தும் பிபிசி தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டதோடு, பிற மொழி பக்கங்களிலும் ஆங்கில வர்ணனையுடன் நேரலை செய்யப்பட்டன. அதாவது, ஒரே போட்டி, பிபிசி தமிழுக்காக தமிழ் வர்ணனையுடனும் பிற மொழிச் சேவைகளுக்கு ஆங்கில வர்ணனையுடனும் நேரலை செய்யப்பட்டது.

தெருவில் விளையாடும் ஆட்டம் என்றாலும் அதற்கும் ஒரு மதிப்பிருக்கிறது; அதில் விளையாடுபவர்களும் அங்கீகரிக்கப்படுவார்கள் என்பதே பிபிசி நடத்திய இந்தக் கிரிக்கெட் போட்டியின் அடிநாதமாக இருந்தது.

மாலை 6 மணியளவில் இந்த நிகழ்வுகள் முடிவுக்கு வந்தபோது, போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்களும் இது போன்ற போட்டிகள் மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்விகளை அங்கிருந்தவர்களிடம் எழுப்பினர்.

மெல்ல மெல்ல மாலை மயங்க, வீரர்கள் நாள் முழுவதும் விளையாடிய களைப்புடனும் உற்சாகத்துடன் மைதானத்தைவிட்டு மெதுவாக வெளியேறினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: