ஒரிசா: குழந்தையை பறித்து சென்று கொன்ற குரங்கை தேடும் போலீசார்

ஒரிசா: குழந்தையை பறித்து சென்று கொன்ற குரங்கை தேடும் போலீசார்
படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

ஒரிசாவில் தாயிடமிருந்து குழந்தையை பறித்து சென்றதாக குற்றஞ்சாட்டப்படும் குரங்கை போலீசார் தேடி வருகின்றனர். குரங்கினால் பறித்துச்செல்லப்பட்ட குழந்தையின் சடலம், நேற்று ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

தனது குழந்தையை குரங்கு பறித்துச்செல்வதை தாய் நேரில் கண்டாலும், அவரால் குரங்கிடமிருந்து குழந்தையை காப்பாற்ற இயலவில்லை.

கடந்த சனிக்கிழமையன்று வீட்டிற்குள் புகுந்து குழந்தையை குரங்கு தூக்கி சென்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமையன்று) தனது வீட்டின் பின்னிருக்கும் கிணற்றில் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பொதுவாகவே குரங்குகள் பொதுச்சொத்துக்களை சேதம் செய்வது வழக்கமானதாக இருந்தாலும், இதுபோன்ற சூழ்நிலை "மிகவும் அரிதான ஒன்று" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய உள்ளூர் அதிகாரி ஒருவர், "ஒரு வார காலத்தில் குரங்கை பிடித்துவிடுவோம் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

"குரங்குகள் மனிதர்களை தாக்குவது அல்லது உணவை தேடி வீடுகளுக்குள் நுழைவது போன்றவை வழக்கமான நிகழ்வுகளாக இருந்துவரும் நிலையில், முதல்முறையாக குரங்கு ஒன்று குழந்தையை பறித்துக்கொண்டு ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

குரங்குகளை பிடிப்பதில் தேர்ந்தவர்களாக விளங்கும் உள்ளூர் பழங்குடியினரை கொண்டு குரங்கை பிடிப்பதற்கு வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.

சனிக்கிழமையன்று காலை நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த குரங்கு, குழந்தையை பறித்து சென்றதாக பிபிசியிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தையின் உடலை ஆய்வு செய்த மருத்துவர், தீவிரமான காயங்கள் ஏற்பட்டதற்கான தயடங்கள் ஏதுமில்லை என்று கூறியுள்ளார். "குழந்தை நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்திருக்கலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

குரங்கு குழந்தையை தூக்கிச் சென்றபோது அதை கிணற்றில் போட்டிருக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: