காவிரி: இணையத்தில் ஓங்கி ஒலிக்கும் இந்திய எதிர்ப்புக் குரல்

இணையத்தில் ஓங்கி ஒலிக்கும் தனித் தமிழ்நாடு கோரிக்கை #IndiaBetraysTamilnadu

மத்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் 'தமிழகத்தை வஞ்சிக்கும் இந்தியா' என்ற பொருள் தரும் 'IndiaBetraysTamilNadu' என்ற ஹேஷ்டேக் பரவி வருகிறது. சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் பலரும் மத்திய அரசு எதிர்ப்பு கருத்துகளை இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா தமிழர்களை புறக்கணித்தால் தமிழர்கள் இந்தியாவை ஒதுக்கி வைப்பார்கள் என்றும், டெல்லிக்கு தமிழகத்தின் மின்சாரம் வேண்டும் ஆனால் காவிரியை அவர்களால் தரமுடியாது என்றும் சமூக செயற்பாட்டாளரான ஆழி செந்தில்நாதன் இதுதொடர்பாக தொடர் ட்வீட்களை பதிந்துள்ளார்.

அதேசமயம், இந்த குறிப்பிட்ட ஹேஷ்டேக் பலரால் ட்விட்டர் தளத்தில் பயன்படுத்தப்பட்ட போதும் ட்ரெண்டிங் பட்டியலிலிருந்து அதை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருப்பதாகவும், சமூகத்தின் மனநிலையை அறிய மோடி அரசு அஞ்சுகிறது என்றும் ஆழி செந்தில்நாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

''உங்களுக்கு என்னுடைய வரி வேண்டும், எங்களது மலைகளிலிருந்து நியூட்ரினோ வேண்டும், எங்களது டெல்டா பகுதிகளிலிருந்து ஹைட்ரோகார்பன் வேண்டும். ஆனால், எங்களுடைய அடிப்படை உரிமையை உங்களால் கொடுக்க முடியாது.'' என்று மத்திய அரசை சாடி ஹரி ஹரன் என்ற பயன்பாட்டாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம், கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம் இவை அனைத்தும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பொதுவானவை ஆனால் காவிரியை மட்டும் தமிழகம் சொந்தம் கொண்டாட முடியாது என்று கார்த்தி பதிவிட்டுள்ளார்.

சிவசுப்ரமணியன் என்ற பயன்பாட்டாளர், தங்கள் தாகத்தை தீர்காத அரசுக்கு எதற்காக நாங்கள் வரி கட்ட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்கள் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் பதிலுக்கு நீங்கள் 40 பைசா தருகிறீர்கள் என்று பொன்.மாரியப்பன் என்ற பயன்பாட்டாளர் கருத்து கூறியுள்ளார்.

'தண்ணீரை கொடு அல்லது தனியா விடு' என்ற பதிவையும் பலர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தனர்.

இதுதவிர, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முறைப்படி வெளியேறும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தொடர்புபடுத்திய இணைய பயன்பாட்டாளர்கள் இந்தியாவிலிருந்து தமிழகம் வெளியேற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து #TNExit என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கினார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: