தென்னிந்திய ஆசிரியையின் மராட்டியக் காதல் திருமணமாக கனிந்தது எப்படி? #BBCShe

  • திவ்யா ஆர்யா
  • பிபிசி

மராத்தி திரைப்படமான 'சைரத்' இறுதிக் காட்சி எனது நினைவுக்கு வந்தது. ஒடுக்கப்பட்ட சாதி ஆணை கலப்பு திருமணம் செய்துக் கொண்ட ஆதிக்க சாதி பெண்ணின் குடும்பம், தம்பதிகளை கொன்று விடும் காட்சி அது.

கொலை செய்யப்படும் காட்சி நேரடியாக காட்டப்படவில்லை என்றாலும், அந்தத் தம்பதிகளின் சிறு குழந்தை அழும்போது, வன்முறையின் உச்சம் மனதில் ஆழ்ந்த வலியை உருவாக்கியது.

வலி மற்றும் திகில்

#BBCShe திட்டத்துக்காக நாக்பூரில் ஒரு இளம் பெண்ணிடம் பேசியபோது, அவர் அச்சத்துடனும், வேதனையுடன் காணப்பட்டதை பார்க்க முடிந்தது.

அந்த பெண் சொல்கிறார், "வேற்று சாதி அல்லது மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் அவர்களுக்கு எதிராக செய்யப்படும் வன்முறைகளையும், செய்திகளையும் ஊடகங்கள் பெரிய அளவில் வெளியிடுகின்றன. இது கலப்புத் திருமணம் செய்துக் கொள்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே அச்சத்தை, அழுத்தத்தை ஏற்படுத்துகிறது."

"குடும்பங்கள் ஆதரித்த தம்பதிகள் அல்லது காதலர்களை பெற்றோர் புரிந்துகொண்ட சம்பவங்களைப் பற்றி ஊடகங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று அவர் எதிர்க்கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு உதாரணமாக அந்த இளம் பெண், தனது ஆசிரியையை நமக்கு அறிமுகப்படுத்தினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த அந்த ஆசிரியையின் கணவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள்.

ஆசிரியையின் குடும்பம் திருமணத்திற்கு எதிராக இருந்தாலும், அவருடைய கணவரின் குடும்பம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்னால் தனது கணவரின் சகோதரர் ஒருவர் கலப்புத் திருமணம் செய்துக் கொண்டதுதான் அதற்கு காரணம் என்று ஆசிரியை கூறுகிறார்.

சகோதரரின் திருமணத்திற்கு கணவரின் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதால், வேறுவழியில்லாமல் காதலர்கள் இருவரும் நீதிமன்றத்தில் திருமணம் செய்துக் கொண்டு வேறு ஊருக்கு ஓடிப்போக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

ஆனால் இரு குடும்பத்தினரும் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, இருவரையும் பிரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

ஆனால் தம்பதிகள் பிடிவாதமாக இருந்த்தால் வேறுவழியில்லாமல் இரு குடும்பத்தினரும் மணமக்களை ஏற்றுக்கொண்டார்கள்.

இதுதான் ஆசிரியையின் காதல் திருமணமாக கனிந்ததற்கு காரணம். கணவர் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டபோதிலும், தனது குடும்பத்தினரின் சம்மதத்திற்காக ஆசிரியை ஒரு வருடம் காத்துக்கொண்டிருந்தார்.

"பெற்றோர் ஒரு வருடம் வரை வேறு வரனை தேடிக் கொண்டிருந்தார்கள். எனது உறுதியால் பெற்றோரின் மனம் மாறியது" என்கிறார் ஆசிரியை.

இத்தகைய அனுபவங்கள் ஊடகங்களில் வெளியானால் பல இளைஞர்களின் போராட்டம் எளிதாகுமே!

பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் வெவ்வேறு சாதி அல்லது மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொண்டால் கெளரவக் கொலைகள் நடைபெறுகின்றன.

'சைரத்' திரைப்படத்தின் கதைக்களம் மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியில் இருக்கும் அமைதியான நாக்பூர் நகரில் நடைபெற்றதாக அமைக்கப்பட்டிருக்கும். உண்மையில் சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் குடும்ப வன்முறை கொடுமைகள் நடைபெறுவது அங்கு அதிகம், ஆனால் அவை வெளியே தெரியாது. இதற்கான வரலாற்று சான்றுகளும் நம் கண்முன்னே இருக்கின்றன.

இங்கு 1956ஆம் ஆண்டு பாபா சாஹேப் அம்பேத்கர் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து மதத்தை துறந்து புத்தமதத்திற்கு மாறினார்.

அந்த சரித்திரப் புகழ்பெற்ற முன்முயற்சியின் விளைவை இன்னமும் மகாராஷ்டிராவில் காணமுடிகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள புத்தமதத்தினரில் 75% மகாராஷ்டிராவில் வசிக்கின்றனர்.

படக்குறிப்பு,

ரூபா குல்கர்னி

ரூபா குல்கர்னி போதி 1945இல் நாக்பூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவர், 1956இல் இல்லையென்றாலும் 1992ஆம் ஆண்டு தனது 47 வயதில் இந்து மதத்தை கைவிட்டு புத்தமதத்தை தழுவினார்.

மத மாற்றத்துக்கு காரணம் என்ன?

நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய அவருக்கு சாதி ரீதியான பாகுபாடு நடந்திருக்க அவருக்கு வாய்ப்பு இருக்கிறதா? பிறகு ஏன் அவர் மதம் மாறினார்?

காரணத்தை அவர் சொல்கிறார், "வீட்டில் வேலை செய்பவர்களுடன் சேர்ந்து நானும் வேலை செய்யத் தொடங்கினேன். அவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்களுடைய சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதை உணரத் தொடங்கியவுடன் எனது சாதி சுமையாக அழுத்துவதைப்போல உணர்ந்தேன். அது களங்கமாக தோன்றியது, எனவே எனது களங்கத்தை போக்கிக்கொள்ள, மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதே சரி என்று எனக்கு தோன்றியது."

ரூபா குல்கர்னி போதியின் கருத்துப்படி, செய்தி சேனல்கள், பத்திரிகைகள், திரைப்படத் துறை, தொலைகாட்சித் தொடர்கள் என ஊடகங்கள் அனைத்தும் சாதி அடிப்படையில் தனித்துவமான வாழ்க்கை கலாசாரத்தை ஊக்குவிக்கின்றன.

தொலைகாட்சித் தொடர்களில், ஆதிக்க சாதியினரின் வீடுகளில் பெண்களும், வேலைக்காரர்களுமாக வேலை செய்பவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்று காட்டப்படுவது இயல்பானதாகவே இருக்கிறது.

திருமணம், உணவு மற்றும் கலாசாரத்தில் வெவ்வேறு சாதிகளை சார்ந்தவர்களுக்கு இடையிலான தொடர்புதான் சாதிய இடைவெளிக்கு பாலம் அமைக்கும் முக்கிய அம்சம் என்று பாபா சாஹேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

திறந்த மனப்பான்மையுடன் இதுபோன்ற பாலங்களைப் பற்றி வெளிப்படையாக பேசவேண்டும் என்பதே நாக்பூர் கல்லூரி மாணவி சொல்வதன் அடிப்படை என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஆசிரியை தனக்கு சிறந்த உதாரணம் என்று மாணவி கூறுகிறார். ஆனால் மாணவியின் பெற்றோரின் சிந்தனை என்னவாக இருக்கும்? ஊடகங்கள் இதுபோன்ற சம்பவங்களைப் பற்றி வெளிப்படையாக பேசாமல் இருந்தால்... நிலைமை மாறுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: