நாளிதழ்களில் இன்று: தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி - 'தீவிரம் அடையும் போராட்டங்கள்`
பட மூலாதாரம், twitter
தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள்துறை இலாகாவின் அவசர அழைப்பை ஏற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று(2.4.18) திடீரென்று டெல்லி சென்றார் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். "நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் உச்சக்கட்ட நிகழ்வாக, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்து, அந்த படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
"இந்த பரபரப்பான சூழ் நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து அவர்களுடன் ஆலோசித்தார்.
பட மூலாதாரம், Selvam Ramaswamy
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை ஒன்றை அனுப்பிவைத்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் காஞ்சீபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு சென்றார். அங்கு தியானம் மேற்கொண்ட அவர், விஜயேந்திரரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து மதியம் 1.30 மணிக்கு அவசர அவசரமாக சென்னை திரும்பினார்.
இந்த சூழ்நிலையில், டெல்லி வருமாறு அவருக்கு உள்துறை இலாகா அவசர அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் பரவியது.
இதைத்தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்." என்கிறார் அந்நாளிதழ் செய்தி.
"நெய்வேலி அனல்மின் நிலையம் 10-ந் தேதி முற்றுகை"
பட மூலாதாரம், Facebook/kaveriurimai
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெய்வேலி அனல்மின் நிலையத்தை 10ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டமைப்பினர் தெரிவித்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மஹாராஷ்டிரா பாணி போராட்டம்'
பட மூலாதாரம், Getty Images
மஹாராஷ்டிராவில் அண்மையில் நடந்த மாபெரும் விவசாயிகள் பேரணி பாணியில், பெருந்திரளாக விவசாயிகளை திரட்டி சென்னை நோக்கி பேரணி செல்ல விவசாய சங்கங்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி. திருச்சியில் கூடிய விவசாய சங்க தலைவர்கள் கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், ஏப்ரல் 12 ஆம் தேதி விவசாயிகள் பட்டினி போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறுகிறது அந்த செய்தி.
தி இந்து (தமிழ்) - 'அதிகரிக்குமா வெப்பம்?'
இந்த ஆண்டு கோடையில் தமிழகத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்தது போன்று வாட்ஸ்-அப்பில் பரவும் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது என்கிறது ’தி இந்து’ (தமிழ்) நாளிதழ் செய்தி.
பட மூலாதாரம், Getty Images
இந்த கோடையில் தமிழக பகுதிகளில் இயல்பை விட 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று தான் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
டெல்லிக்குக் காவடியா?
பட மூலாதாரம், தி இந்து
தினமணி - 'தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்`
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
பட மூலாதாரம், Twitter/TN Youngsters Team
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, மனு ஒன்றை அந்த மக்கள் ஆட்சியரிடம் அளித்ததாகவும், அதில், ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகள் கொட்டப்படுவதால் எங்கள் கிராமமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அருகில் உள்ள அ.குமரெட்டியாபுரம், சங்கரப்பேரி, மீளவிட்டான், மடத்தூர், மாபிள்ளையூரணி, கோரம்பள்ளம், சில்வர்புரம், சிலுக்கன்பட்டி மற்றும் தூத்துக்குடி மாநகரம் என இப்பகுதியில் உள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறது தினமணி செய்தி.
ஸ்டெர்லைட் தொடர்புடைய செய்திகளை படிக்க:
- “கட்சி அடையாளம் வேண்டாம், தமிழனாக வாருங்கள்” - ஸ்டெர்லைட் போராட்ட குழு
- ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? - 5 முக்கிய கேள்விகள்
- தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம் உருவெடுத்தது ஏன்? #GroundReport
- ஸ்டெர்லைட்: ''போராட்டத்தின் பின்னணியில் உள்நோக்கங்கள் உள்ளன'' #GroundReport
- ஸ்டெர்லைட்: குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் - கமல்
தி இந்து - 'சவால்விடும் கமல்`
பட மூலாதாரம், Twitter/Maiamofficial
இதுகாறும் இங்கு நிலவி வரும் நிலைக்கு சவால்விடவே நான் இங்கு இருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது ’தி இந்து’ நாளிதழ். தி இந்துவுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், `ஒரு மதம், ஒரு மொழி' என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லையென்றும், எங்களது தத்துவம் என்பது மக்கள் நலன் மற்றும் நேர்மையான ஜனநாயக அரசுதான் என்றும் அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்