காவிரி: தமிழகம் முழுதும் போராட்டம், முதல்வர் 'திடீர்' உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

காவிரி விவகாரம்: தமிழகம் முழுவதும் போராட்டம், முதலமைச்சர் உண்ணாவிரதம்

பட மூலாதாரம், O Panneerselvam

சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமெனக் கோரி அனைத்துக் கட்சியினரும் நான்காவது நாளாக தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 3ஆம் தேதி இது தொடர்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க. அறிவித்திருந்த நிலையில், போராட்டத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களே கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், O Panneerselvam

ஆனால், இன்று காலையில் உண்ணாவிரதத்தைத் துவக்கிவைக்க வந்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, அப்படியே உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்துவந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் முதல்வருடன் அமர்ந்துகொண்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் விருந்தினர் மாளிகைக்கு முன்பாக நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்களோடு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் கோகுல இந்திரா போன்ற நிர்வாகிகளும் அமர்ந்துள்ளனர். மாலை 5 மணிவரை இந்தப் போராட்டம் நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் அ.தி.மு.க. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் சில வணிகர் சங்கங்கள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்திருந்தன.

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ரங்கநாதன் தெருவில் கடைகள் வழக்கம்போல திறந்திருந்தன. மருந்துக் கடைகள் மூடப்படும் என அந்தக் கடைகளுக்கான சங்கம் அறிவித்திருந்ததால், அவை மூடப்பட்டிருந்தன.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆங்காங்கே கடைகள் மூடப்பட்டிருந்தன.

இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதே விவகாரத்திற்காக சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூரில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர், அந்த அலுவலக பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கினர். இதனைத் தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.

சென்னை எழும்பூரில் விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்திலிருந்து எழும்பூர் வழியாக ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயிலை அவர்கள் மறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு காவல்துறையினர் அவர்களைக கைது செய்தனர்.

மதுரையிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் மறிக்கப்பட்டது. மதுரையிலிருந்து வந்துகொண்டிருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் வைகை ஆற்றுப்பாலத்தில் மறிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ரயில் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

படக்குறிப்பு,

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ரங்கநாதன் தெருவில் கடைகள் வழக்கம்போல திறந்திருந்தன

"ஆனால், இந்தப் போராட்டங்களால் எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை" என பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இவ்வளவு உணர்வுள்ளவர்கள் ஏன் தங்கள் எம்.பி பதவிகளை ராஜினாமா செய்யவில்லையென்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: