தினகரன் ஆதரவோடு திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருச்சியில் டெல்டா பகுதி விவசாயிகள் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

தினகரன் ஆதரவோடு திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட டெல்டா விவசாயிகள்

இதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆதரவு தெரிவித்ததோடு முற்றுகை போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

அவர் மட்டுமின்றி அவரது அமைப்பை சேர்ந்த டெல்டா பகுதி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

தனியார் விடுதியில் இருந்து தனது வாகனத்தில் புறப்பட்ட தினகரன் போராட்டம் நடந்த இடத்துக்கு வந்ததும் அவரது ஆதரவாளர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களையும், முழக்கங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து விமான நிலையத்தை முற்றுகையிட அவர்கள் பேரணியாக வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த தடுப்பரண்கள் பல வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் விமான நிலைய நுழைவு வாயில் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனாலும், தொடர்ந்து முன்னேறிய விவசாயிகளும், அமமுக தொண்டர்களும் தடுப்பரண்களை தாண்டி உள்ளே நுழைய முற்பட்டனர்.

இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே பத்து நிமிடங்களுக்கு மேல் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே டி.டி.வி. தினகரனும் நுழைவு வாயிலை நோக்கி முன்னேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்தப் போராட்டத்தால் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் சுமார் ஆறு கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் திருவெறும்பூரில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் உடைக்கப்பட்டது போல இங்கும் உடைக்கப்படுமோ என்ற சந்தேகத்தில் விமான நிலையப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்களை கைது செய்ய வந்த வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்கள் நிறுத்தியும், மாற்று பாதையில் திருப்பியும் விடப்பட்டன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: