தாயின் கண்முன் இளைஞரைத் தாக்கும் போக்குவரத்து போலீஸ்; வைரலாகும் வீடியோ

சென்னை தியாகராய நகரில் தாய் மற்றும் சகோதரியின் கண் முன்பாக இளைஞர் ஒருவர் போக்குவரத்துப் போலீசாரால் தாக்கப்படும் காட்சி வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைத் தளங்களில் தீவிரமாக பரவிவருகிறது.

தாய் முன்பாக இளைஞர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

பட மூலாதாரம், FACEBOOK/ CHENNAI TRAFFIC POLICE

சென்னை தியாகராய நகரில் திங்கட்கிழமையன்று மாலையில் தன் தாயார் மற்றும் சகோதரியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே இப்படி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிக்கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் அவருடைய மகன் பிரகாஷ் மற்றும் சகோதரி ஆகியோர் திங்கட்கிழமையன்று தியாகராயநகர் பகுதிக்கு பொருட்களை வாங்குவதற்காக வந்தனர். தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது தலைக்கவசம் அணியாமலும் ஒரே இரு சக்கர வாகனத்தில் விதிமுறைகளுக்கு மாறாக மூவர் பயணம் செய்ததாலும் பிரகாஷ் ஓட்டி வந்த வாகனத்தை போத்தீஸ் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதில் பிரகாஷிற்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரகாஷை காவல்துறையினர் சட்டையின் காலரைப் பிடித்து இழுத்துச்செல்ல முற்பட்டபோது, பிரகாஷ் காவல்துறை அதிகாரி ஒருவரின் சட்டையைப் பிடித்துள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK/CHENNAI TRAFFIC POLICE

இதற்குப் பிறகு அங்கு மேலும் சில போக்குவரத்து காவலர்கள் குவிந்தனர். அதே நேரத்தில், தன் மகன் விட்டுவிடும்படி பிரகாஷின் தாய் கோரும்நிலையில், அவரைத் தள்ளிவிட்டுவிட்டு பிரகாஷை மின் கம்பம் ஒன்றோடு சேர்த்துப் பிடித்து காவல்துறையினர் தாக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், பிரகாஷ் மீது ஆபாசமாகப் பேசுதல், பொது ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து தியாகராய நகரின் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சுதாகரிடம் பிபிசி தொடர்புகொண்டு கேட்டபோது, "அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வழக்கை பாண்டி பஜார் காவல் நிலையத்தின் சட்டம் - ஒழுங்கு பிரிவு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையில் இருப்பதால் வேறு ஏதும் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விதி மீறலுக்காக அபராதம் செலுத்த வேண்டுமெனக் போலீசார் கூறியபோது, அந்த இளைஞர் காவல்துறை உதவி ஆய்வாளர் சுரேஷ் என்பவரை முகத்தில் குத்தியதாகவும் அவர் வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுக்க முற்பட்டபோது, அதனைப் பிடுங்கி தரையில் போட்டு உடைத்ததாகவும் இதனால் அவர் கைதுசெய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: