அதிமுக உண்ணாவிரதம்: "அரசியல் ஆதாயம் தேடும் நாடகம்"

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று அதிமுக உண்ணாவிரதம் இருந்தது. இதையடுத்து மாநிலத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவின் இந்தப் போராட்டம் அர்த்தமுள்ளதா? எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு போட்டியாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியா? என வாதம் விவாதம் பகுதியில் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

எடப்பாடி மற்றும் ஓ பன்னீர் செல்வம்

பட மூலாதாரம், ARUN SANKAR

அதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் இணையத்தில் வழங்கிய பதில்மொழிகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

''இது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர நடந்த உண்ணாவிரதம் இல்லை.மாறாக திமுக போன்ற எதிர் கட்சிகள் செய்யும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்த நடந்த உணவு உண்ணும் போராட்டம்'' என தெரிவித்துள்ளார் வி. இராம் பிரசாத் என்ற நேயர்.

''அரசியல் தான். அரசியலை தவிர வேற எதுவும் இதில் இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் போராட்ட முறை இது இல்லை.திராவிட கழக அரசுகளால் தமிழகம் இழந்ததது தான் அதிகம். பதவிக்காக மெளனவிரதம் கடைபிடித்து வருவதில் திமுகவுக்கு அதிமுக சளைத்தது அல்ல'' என எழுதியுள்ளார் துரை முத்துசெல்வம்.

''மத்திய அரசுக்கு ஆதரவாக இத்தனை நாள் மவுனவிரதம் இருந்தார்கள் இன்று மட்டும் மத்திய அரசுக்கு (நாடகம்) எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!!!'' என குறிப்பிட்டுள்ளார் புலிவலம் பாஷா.

''எதுவாக இருப்பினும் போராட்டம் கானலாய் இல்லாமல் காவிரி நீரை உறிஞ்சி தரும் போராக மாறட்டும்! மாற்றம் பிறக்கட்டும்...'' என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.

''இவர்கள் என்ன செய்தாலும் அதில் ஒரு சிறிய அளவு கூட அழுத்தம் இருக்காது. ஏன் என்றால் வலிமை கிடையாது. எல்லோரும் செய்வதால் செய்கிற இவர்களின் போராட்டம் வரலாற்றில் ஒரு சரித்திரத்தையும் பதிக்க போவதில்லை. அனைத்திலும் வெளிப்படையாக தெரிகிறது பி.ஜே.பி இவர்களுக்கும் துணயாக இருந்திருக்கிறது என்று''. என எழுதியுள்ளார் அருண்.

தேஜு இப்படி குறிப்பிடுகிறார் '' தொட்டிலை ஆட்டிக்கொண்டு, பிள்ளையை கிள்ளிவிடும் பாணி தான். எல்லாம் நாடகம், திமுக அதிமுக இவர்கள் அழியும் வரை விமோசனமில்லை''.

ஆளுங்கட்சியின் போராட்டம் காலங்கடந்த ஒரு கண் துடைப்பு நாடகம். உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஜெயலலிதாவைப்போல உண்ணாவிரதத்தை எப்போதோ கடைபிடித்திருக்க வேண்டும் என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன் என்னும் நேயர்.

அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளவே இந்த நாடக நடிப்பு என்கிறார் ஜெ.முஹம்மது லால்பேட்டை என்னும் நேயர். மேலும், விவசாயமும் விவசாயும் இல்லை என்றால் விளைநிலம் விலைக்கு போய்விடும். அது போனால் என்ன என நாம் இருந்தால் நாளை நாமே நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை உணராமல் அரசியல் ஆதாயத்திற்காக ஓடினால் ஓடும் தூரம் இருக்கும் ஆனால் குடிக்க தண்ணீர் இருக்காது என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: