"பிரபாகரனுடன் சீமான் புகைப்படமே எடுத்ததில்லை": வைகோ பாய்ச்சல்

தன்னைத் தெலுங்கன் என முத்திரை குத்த சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியினரும் முயற்சித்துவருவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் இது தொடர்பாக மோதலும் ஏற்பட்டது.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டிருக்கும் வைகோ, அந்தப் பயணத்தின் நடுவில் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூருக்கு சென்றார். கைரேகைச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி உயிர்நீத்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்திய வைகோ, பிறகு பேசும்போது "என்னைத் தெலுங்கன் என சிலர் பேசுகின்றனர். அப்பாவி இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். வெளியில் நிற்கும் கட்சிக்காரர்களை நான் எச்சரிக்கிறேன்" என்று பேசினார்.

இந்த நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த நாம் தமிழர் கட்சியினர் வைகோ தங்களைத்தான் குறிப்பிடுகிறார் என்று உணர்ந்து, அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, "வீர வணக்கம், வீர வணக்கம்" என்று கோஷங்களை எழுப்பினர்.

வைகோ பேசி முடித்துவிட்டு வெளியில்வந்தபோது, அங்கு கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அவரோடு மோதலிலும் ஈடுபட்டனர். இதனால், வைகோவுடனிருந்த ம.தி.மு.கவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

இதற்குப் பிறகு, வேறொரு இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சீமான் மீது நேரடியாகவே குற்றம்சாட்டினார்.

"ஆறேழு ஆண்டுகளாக நான் பொறுமையாக இருக்கிறேன். என்னைத் தமிழன் அல்ல என்றும் தெலுங்கன் என்று சீமான் கீழ்த்தரமாக பேசுவதோடு, ஈரோடு ராமசாமிப் பயல் என்றும் பேசினார். இந்த அண்ணாத்துரைனு ஒருத்தன், இந்த நாட்டை கெடுத்துவிட்டான் என்று துவக்க காலத்தில் பேசினார். பெரியாரைத் தாக்குவது, அவரைக் காலி செய்ய அல்ல, என்னை காலி செய்ய என்று சினிமாத் துறையில் உள்ளவர்கள் சொன்னார்கள். பெரியாரை ஒழித்துவிட்டால், பிறகு தெலுங்கன் என்று என்னை ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறார்" என்று கூறினார்.

மேலும் தன்னைப் பற்றிக் கணக்குவழக்கில்லாமல் மீம்ஸ்களை நாம் தமிழர் கட்சியினர் உருவாக்கிவருவதாகவும் குறிப்பாக ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்னை மிகவும் களங்கப்படுத்தி ஒரு மீம்ஸ் போட்டிருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

பிரபாகரன் உயிரோடு இல்லையென்று நினைத்துக்கொண்டு, புலிகளின் சின்னத்தை தன் கொடியாக்கிக்கொண்டார் என்றும், புலிகளோடு தான் வேட்டைக்குப் போனதாகவும் ஆமைக்கறி தின்றதாகவும் சீமான் பொய் சொல்வதாகக் கூறிய வைகோ, பிரபாகரன் மொத்தம் எட்டு நிமிடங்கள்தான் அவரைச் சந்தித்ததாகக் கூறினார். பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய வைகோ, புலிகளின் சீருடையை அணிய சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லையென்றும் ஆனால், தான் அந்தச் சீருடையை அணிந்து பிரபாகரனோடு ஒரு மாதம் இருந்திருப்பதாகவும் கூறினார். பிரபாகரனிடம் தான் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாகவும் கூறினார்.

மேலும் சீமான் உலக நாடுகள் முழுவதிலும் புலிகளின் பிரதிநிதி என்றுகூறி பணம் வசூலிப்பதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.

இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டிருந்தாலும் சமீப காலமாக தன்னையும் ஸ்டெர்லைட்டையும் தொடர்புபடுத்தி, ஸ்டெர்லைட் டீல் முடிந்துவிட்டது. இப்போது நியூட்ரினோவுக்கு கிளம்பிவிட்டான் நாயக்கப் பய" என மீம்ஸ்களை வெளியிடுவதைத் தன்னால் சகிக்க முடியவில்லையென்றும் வைகோ கூறினார்.

வைகோவின் இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து நாம் தமிழர் கட்சியினரும் ம.தி.மு.கவினரும் சமூக வலைதளங்களில் காரசாரமாக கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: