நாளிதழ்களில் இன்று: அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் - கமல் ஹாசன்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி - "அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன்"

பட மூலாதாரம், Getty Images

எங்களின் போராட்டம் மக்களின் எதார்த்த வாழ்க்கையை பாதிக்காது என்றும், அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் என்றும் கமல்ஹாசன் கூறினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

"மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுவது தான் போராட்டம். ஆனால் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் வாழ்க்கையே நாசமாக போகிவிடுமே என்று இடைஞ்சலை பற்றி கவலைப்படாமல் அராஜகம் விளைவிக்கக்கூடாது. அரசியல் சாசனத்தின்படி நம் கருத்துகளை தெளிவாக சொல்லியும், அழுத்தம் கொடுக்க வசதிகள் இருக்கின்றன. அவைகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வெறும் வீண் அரசியல் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. வாய்ச்சவுடால் அரசியல் போதாது. என்னுடைய போராட்டம் மக்களின் எதார்த்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதற்கு காரணம் யாரோ அவர்களை பாதிக்கும் போராட்டமாக இருக்கும். ஒத்துழையாமை இயக்கம் போல கூட இருக்கலாம்" என்று அவர் கூறினார் என்கிறது அந்த செய்தி.

பட மூலாதாரம், Getty Images

"மேலும், அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள். அதேபோல், உங்களுடைய நண்பர் ரஜினிகாந்தையும் எதிர்ப்பதற்கான சூழல் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு,

ஏற்பட்டால் செய்யவேண்டியது தான். கொள்கை ரீதியாகவும், செயல் முறைகளை பார்த்தும் நான் எடுத்த முடிவு. அது வரும்போது பார்க்கலாம். கெட்டது தான் நடக்கும் என்று ஏன் யூகிக்க வேண்டும்? அப்படி ஏற்படாமல் இருந்தால் நல்லது. ஏற்பட்டால் நின்று செயல்படாமல் இருந்துவிட முடியுமா?" என்று பதிலளித்தார் என்கிறது அந்த செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) - 'உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஸ்டெர்லைட் மனு'

தொடர்ந்து போராட்டம் நடப்பதால் ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்புக் கோரி வேதாந்தா நிறுவனம் உயர்நீதி மன்றம் மதுரை கிளையை அணுகி உள்ளதாக கூறுகிறது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ். மனுதாரரான அந்நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் சத்யப்ரியா, தனது மனுவில்,'பொய் பிரசாரங்களும், ஆதாரமற்ற வதந்திகளும் தங்கள் நிறுவனத்திற்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு தேவை' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

ஸ்டெர்லைட் தொடர்புடைய செய்திகளை படிக்க:

தினமணி: போலி செய்தி - 'தவறான புரிதல்'

"கடந்த திங்கள்கிழமை மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைசர் ஸ்மிருதி இரானியின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் ஆத்திரத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது. பொய் செய்தியை அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ பரப்பும் பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர் அங்கீகாரம் பறிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் பிரதமர் நரேந்திர மோதி நேரடையாகத் தலையிட்டு அந்த அறிவிப்பைத் திரும்பப்பெற உத்தரவிட்டு இருக்கிறார். பிரதமருக்கு நன்றி" என்கிறது தினமணி தலையங்கம்,.

மேலும் அந்த தலையங்கம், "இத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டது என்று முற்றுப்புள்ளி வைத்துவிடக் கூடாது. அமைச்சர் எடுத்த முடிவு தவறானது என்பதில் எள்ளவும் ஐயமில்லை. ஆனால், எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சனை அச்சு, காட்சி ஊடகங்களையும், பத்திரிகையாளர்களையும் தாண்டி, உலகளாவிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் உணர வேண்டும். அரசும் எதிர்க்கட்சிகளும், ஊடகவியலாளர்களும், நிர்வாகத்தினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமூக ஊடகங்களில் பொய்ச் செய்தி பரப்புவோரைத் தடுப்பதற்கு வழி காண்பதை விட்டுவிட்டு, செய்தி ஒளிபரப்பு அமைச்சர் , பத்திரிகையாளர்களின் செயல்பாடுகளில் தலையிடுவது, பிரச்சனை குறித்த அவரது அறியாமையைத் தான் வெளிப்படுத்துகிறது" என்று விவரிக்கிறது அந்த தலையங்கம்.

தி இந்து (தமிழ்) - 'காக்னிசன்ட் ரூ.420 கோடி செலுத்த உத்தரவு'

பட மூலாதாரம், Getty Images

வருமானவரி ஏய்ப்புத் தொகையான ரூ.2,800 கோடியில் 15 சதவீதத்தை உடனே செலுத்துமாறு காக்னிசன்ட் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது தி இந்து (தமிழ்) செய்தி.

"காக்னிசன்ட் நிறுவனத்துக்கு எதிராக வருமானவரித் துறை தொடர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வருமானவரித் துறை கோரும் வரிஏய்ப்புத் தொகையான ரூ.2,800 கோடியில் 15 சதவீதத்தை (அதாவது, ரூ.420 கோடி) காக்னிசன்ட் நிறுவனம் உடனடியாக செலுத்த வேண்டும். மீதித் தொகையை வங்கி உத்தரவாதமாக அளிக்க வேண்டும்.

இந்த நிபந்தனையை முறையாகப் பின்பற்றும் பட்சத்தில், மும்பையில் முடக்கப்பட்ட ஜேபி மார்கன் சேஸ் வங்கிக் கணக்கு விடுவிக்கப்படும். ஆனால், இப்பிரச்சினை தீரும் வரை ஸ்டேட் வங்கி, எச்டிஎப்சி, டாய்ஷே, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட மற்ற வங்கிகளில் முதலீடாக உள்ள ரூ.2,650 கோடியை உத்தரவாதத் தொகையாக முடக்கி வைக்க வேண்டும்." என்று விவரிக்கிறது அந்த நாளிதழ்.

கூடங்குளத்தில் 3 - வது அணு உலை 2023-ல் செயல்படத் தொடங்கும்

பட மூலாதாரம், தி இந்து

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'தமிழகத்தை சேர்ந்த 22 கல்விநிறுவனங்கள்`

தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன என்று விவரிக்கிறது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி. தமிழ்நாட்டை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் தான் அதிக அளவில் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்று விளக்கும் அந்த செய்தி, இதற்கு அடுத்ததாக மஹாராஷ்ட்ரா இருக்கிறது என்கிறது. மஹாராஷ்ட்ராவை சேர்ந்த 11 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: