அதிமுக, திமுக, பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்: வேல்முருகன்

வேல்முருகன்

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஞாயிற்றுக் கிழமையன்று போராட்டம் நடத்தியது. இதில் 5 இடங்களில் சுங்கச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழின் நேரலையில் பேசினார் அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன். அந்தப் பேட்டியிலிருந்து:

கே. ஐந்து சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டிக்கின்றன. இப்படித்தான் இருக்க வேண்டுமென திட்டமிடப்பட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டதா?

ப. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது. மூன்று மாதம் அவகாசம் கேட்பதும் மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என மத்திய அரசே கூறுவதும் சரியானதாக இல்லை.

இது மட்டுமல்ல, தமிழ்நாடு பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் இருக்கிறது. வேறு மாநிலங்களில் விரட்டியடிக்கப்படும் மீத்தேன் திட்டம், அணு உலை, மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாழாக்கும் நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், பல மாநிலங்களில் வேண்டாமென்று சொல்லப்பட்ட ஸ்டெர்லைட் என எல்லோரும் புறந்தள்ளிய திட்டங்கள் அனைத்தும் இங்கேதான் கொண்டுவரப்படுகின்றன. தமிழ்நாடு விரும்பாத நீட் தேர்வு இங்கே திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் 2,500 மருத்துவ உயர்கல்வி இடங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இப்படி தமிழர்கள் அடிவாங்காத இடமே இல்லை.

கே. இந்த விவகாரங்களுக்கெல்லாம் சட்ட ரீதியாக தீர்வு காண முடியுமே.. இப்படி அடித்து நொறுக்குவதுதான் வழியா?

ப. சட்டமே எங்களை அநீதியுடன்தான் அணுகுகிறது. அதனால்தான் இம்மாதிரி போராட்டங்களை நடத்துகிறோம். இந்தப் போராட்டங்களில் எங்களை எதிர்கொள்கிறவர்கள் ஜனநாயக ரீதியாக எதிர்க்காமல் அவர்கள் தடி கொண்டு தாக்குகிறார்கள். நாங்கள் சுங்கச் சாவடிகளில் அமைதியான முறையில் துண்டறிக்கைகளைத்தான் கொடுத்தோம். "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு நாங்கள் ஏன் வரி அளிக்க வேண்டும். நாங்கள் வாங்கும் வாகனங்களுக்கு ஆயுட்கால வரி செலுத்திய பிறகு, ஏன் சுங்க வரி செலுத்த வேண்டும்?" என்று துண்டறிக்கை கொடுத்தோம்.

சாலை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதருவதற்குத்தான் அரசு. அதற்குத்தான் வரி கட்டுகிறோம். இதையெல்லாம் தனியாரிடம் கொடுத்துவிடலாம் என்றால், எதற்காக அரசு? எதற்கு மக்கள் வரிகட்ட வேண்டும்? தவிர, சுங்கச் சாவடிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளைக்கு அளவே இல்லை. அதில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணம், யார் பணம்? இந்திய அரசின் பணம். அதில் ஏன் மக்களிடம் கொள்ளையடிக்கிறீர்கள்?

கே. சுங்கச் சாலைகள் பல தனியாரால் கட்டப்பட்டவை.

ப. தனியாரால் கட்டப்பட்டாலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனைப் பெற்றுத்தானே கட்டினார்கள்? அந்தக் கடனைக்கூட அவர்கள் முழுவதுமாக திருப்பிச் செலுத்துவதில்லை. தவிர, ஆண்டுகள் செல்லச்செல்ல கட்டணத்தைக் குறைக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு வருடமும் சுங்கக் கட்டணத்தை உயர்த்திகொண்டே செல்வது என்ன நியாயம்? ஒரு சாலைக்கு எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள், எவ்வளவு வசூலிக்கப்பட்டிருக்கிறது, இன்னும் எவ்வளவு நாள் வசூலிக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் வெளிப்படையாக எழுதிவைக்க வேண்டும். எந்தச் சுங்கச் சாவடியிலும் அம்மாதிரி அறிவிப்புகள் இல்லை.

ஆம்புலன்ஸ் கிடையாது, குடிநீர் கிடையாது, செவிலியர்கள் கிடையாது, லாரி ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் இருக்க வேண்டும். ஆனால், இல்லை. இலவச டெலிபோன் கிடையாது. வண்டி ஏதாவது விபத்தில் சிக்கினால், நான் தனியார் இழுவை வண்டியை அமர்த்தி, எடுத்துச்செல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு எதற்கு நான் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்? இது வெறும் வேல் முருகனின் கேள்விமட்டுமல்ல. இந்த சாலையைப் பயன்படுத்தும் மக்களின் கேள்வி. ராப்பகலாக, குண்டர்களை வைத்துக்கொண்டு, தடியை வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கிறார்கள். இதை எதிர்க்கும் வகையில் ஒரு துண்டறிக்கை கொடுத்தோம். அந்த நேரத்தில், துண்டறிக்கை கொடுக்கக்கூடாது என அந்த குண்டர்கள் சொல்கிறார்கள். மற்றொரு பக்கம், காவல்துறை நாங்கள் அந்தப் பக்கமே போகக்கூடாது என்று தடுத்தது.

கே. வீடியோக்களில் பார்த்தால், உங்கள் தொண்டர்கள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள்..

ப. அது ஒரு வீடியோவில் மட்டும் இடம்பெற்ற காட்சி. ஓமலூரில் காவல்துறையினர் எங்கள் தொண்டர்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் ஏதும் இல்லையே என டோல் கேட்டில் கேள்வி கேட்டால், அங்கிருப்பவர்கள் தாக்குகிறார்கள். இந்த உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது?

கே. அரசின் அனுமதி பெற்று நடத்தப்படும் வாகன சுங்கச் சாவடிகளை நொறுக்குவதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள். நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது அரசை...

சுங்கம் செலுத்தாத சாலைகள் வேண்டும்

ப. மத்திய அரசே மக்கள் மீது வன்முறையைச் செலுத்துகிறது. பொதுவாக எல்லா நாடுகளிலும் சுங்கம் செலுத்தி செல்லும் சாலை ஒன்று இருந்தால், சுங்கம் செலுத்தாமல் செல்லும் வகையில் மற்றொரு சாலை இருக்கும். ஆனால், இந்தியாவில் மட்டும்தான் மக்கள் பயன்படுத்திவந்த சாதாரண சாலைகளைப் பறித்து, அங்கு சுங்கச் சாவடிகளை அமைத்து சுங்கம் வசூலிக்கிறீர்கள். நான் சுங்கச் சாலையில் செல்ல விரும்பவில்லை. சாதாரண சாலையில் செல்ல விரும்புகிறேன். அதற்கு அனுமதிக்க வேண்டியதுதானே? அதைப் பறித்தது வன்முறை இல்லையா?

நான் வன்முறையை நியாயப்படுத்தவில்லை. தாக்குதல் நடந்தது உளுந்தூர்பேட்டையிலும் இன்னொரு இடத்திலும்தான். அங்குகூட கேள்விகேட்ட எங்கள் தொண்டர்கள் மீது அவர்கள்தான் முதலில் கைவைத்தார்கள். பிறகுதான் தற்காப்பிற்காக நாங்கள் திருப்பித் தாக்கினோம்.

நாங்கள் 45 டோல்கேட்களில் போராட்டம் நடத்தினோம். அங்கெல்லாம் தாக்குதல் நடந்ததா? மத்திய அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கினோமா? துண்டறிக்கை கொடுப்பவர்கள் மீதெல்லாம் குண்டர் சட்டத்தின் மீது வழக்கு தொடுக்கிறார்கள். அது வன்முறை இல்லையா? தமிழக வாழ்வுரிமைக் கட்சி எந்த இடத்திலும் திட்டமிட்டு வன்முறையில் இறங்கவில்லை. நாங்கள் தற்காத்துக்கொள்ளத்தான் அப்படிச் செய்தோமே தவிர, வன்முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் அல்ல.

நாங்கள் அந்தப் போராட்டத்திற்கு எந்த ஆயுதங்களையும் எடுத்துச்செல்லவில்லை. ஒரு சாதாரண கொடிக் கம்பைத்தான் எடுத்துச் சென்றோம். அவர்கள் எங்களைத் தாக்கியபோது, கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. நாங்கள் ஒருவர் மீதுகூட தாக்குதல் நடத்தவில்லை. எங்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்கள் ஆட்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? நான் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை. அப்படி வீடியோ காட்சிகளும் இல்லை. இருந்தபோதும் என் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களைப் பாருங்கள், இந்த சம்பவத்திற்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறதென.. இதனை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

கே. இந்த போராட்டத்தில் வன்முறையை நீங்கள் ஏற்படுத்தவில்லையென்கிறீர்கள். அப்படியானால், இதனை எப்படி நடத்த நினைத்திருந்தீர்கள்?

ப. மற்ற இடங்களில் எப்படி நடந்ததோ, அதைப்போலத்தான் நடத்த நினைத்திருந்தேன். சுங்கச் சாவடிகள் நடத்தப்படுவதன் கேடுகளை விளக்கி பிரச்சாரம் செய்ய விரும்பினோம். அருகருகில் உள்ள ஊர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லக்கூட கடுமையாக சுங்கவரி செலுத்த வேண்டியிருக்கிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்றால் கிட்டத்தட்ட மூன்றாயிரம் ரூபாய் வரை சுங்கக் கட்டனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

ஏன் சுங்கவரி இல்லாமல் சாலைகள் அமைக்க முடியாதா? இத்தனை ஆண்டுகளாக சாலைகள் இல்லாமலா இருந்தோம்? இதையெல்லாம் சொல்லி, ஒரு துண்டறிக்கை கொடுத்து மத்திய அரசிடம் ஜனநாயக எதிர்ப்பை பதிவுசெய்ய வேண்டுமென நினைத்தோம். ஆனால், காவல்துறையினர் எங்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகுதான் வன்முறை ஆரம்பித்தது. போராட்டம் நடத்திய ஒரு மணி நேரத்திற்கு சுங்கம் இல்லாமல் வாகனங்களை அனுமதிக்க முடியாதா? பிறகு இந்தப் போராட்டத்திற்கு என்ன மரியாதை இருக்கிறது?

2 கோடி மரங்கள் வெட்டப்பட்டன

கடந்த 7 ஆண்டுகளாக இந்தச் சுங்கச் சாவடி முறைகேடுகளை எதிர்த்துப் போராடிவருகிறோம். இந்த நெடுஞ்சாலைகளை அமைக்க 2 கோடி மரங்களை வெட்டியிருக்கிறார்கள். மீண்டும் 2 கோடி மரங்களை நட்டார்களா? மரம் நட வேண்டும் என்ற விதிமுறை என்ன ஆனது? அடிப்படையான மருத்துவ வசதிகள்கூட இங்கே கிடையாது. இந்தச் சுங்கச் சாவடிகளை எடுத்து நடத்துபவர்களும் தமிழர்கள் அல்ல.

காவிரிக்கு முன்பே சுங்கப் போராட்டம் அறிவித்தேன்

கே. இப்போது தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனையை முன்வைத்து பல போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே மக்களின் கவனம் போராட்டங்கள் மீது குவிந்திருக்கும் நிலையில், அவற்றை உங்கள் பக்கம் திருப்பவே இப்படிச் செய்தீர்களா?

ப. காவிரி போராட்டமெல்லாம் துவங்குவதற்கு முன்பாகவே இந்தப் போராட்டத்தை நான் அறிவித்துவிட்டேன். காவிரி போராட்டத்திலும் கலந்துகொண்டோம். தொலைபேசி கோபுரங்களின் மீது ஏறிப் போராடினோம். வன்முறையெல்லாம் கர்நாடகத்தில் மட்டும்தான் நடக்குமா? தமிழ்நாட்டில் நடக்காதா?

கே. இங்கு வன்முறையைத் தூண்டினால், அது கர்நாடகத்திலும் எதிரொலிக்கும். பொறுப்பு மிக்க அரசியல் தலைவராக இப்படி நீங்கள் சொல்லலாமா?

ப. அப்படியல்ல. ஒரு கன்னடராவது இங்கு தாக்கப்பட்டிருக்கிறார்களா? கர்நாடகத்தின் ஒரு நிறுவனமாவது இங்கே அடிக்கப்பட்டிருக்கிறதா? ஆனால், அங்கு மக்கள் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். நான் வன்முறையைத் தூண்டவில்லை, விரும்பவில்லை. எங்கு வன்முறை எங்கள் மீது தூண்டப்பட்டதோ, அங்கு நாங்கள் திருப்பித் தாக்கினோம். தற்காப்பிற்குத் தாக்க அரசியல் சட்டத்திலேயே இடமிருக்கிறது.

காங்கிரஸ், அதிமுக, திமுக, பாஜக அல்லாத....

கே. காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை, மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கும் ஆண்ட கட்சிகளுக்கும் இந்த விவகாரத்தை எதிர்கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பிற கட்சிகள் இந்தப் போராட்டங்களை எப்படி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள்?

ப. என்னைப் பொறுத்தவரை, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளை தவிர்த்து, பிற கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும். தற்போது ஆட்சி செய்தகொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு மத்திய அரசுடன் எவ்விதத்திலும் இணக்கமாகச் செல்லக்கூடாது. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வரி தர மாட்டோம் என ஒரு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும். கெயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம், போராட்டம் நடந்தால் போலீஸ் பாதுகாப்பு தரமாட்டோம் என்று சொல்லுங்கள். மெரீனாவில் உள்ள காவல்துறையை வாபஸ் பெறுங்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல வன்முறையில்லாமல் நாங்கள் போராடிக்கொள்கிறோம்.

கே. தமிழகம் ஏன் எப்போதுமே போராட்டக்களமாக இருக்கிறது? சிறிய விஷயங்களுக்கெல்லாம் போராட ஆரம்பித்துவிடுகிறோமா? எல்லா மாநிலங்களுக்கும்தானே பிரச்சனைகள் இருக்கின்றன?

ப. ஈழப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், கச்சத்தீவை ஒட்டிய பகுதியில் மீன் பிடிக்க போராட்டம், கதிராமங்கலம் பிரச்சனை இதெல்லாம் சின்ன விஷயமா? நீட் தேர்வு திணிக்கப்பட்டது சாதாரண விஷயமா? மருத்துவ உயர்கல்வி இடங்களில் இட ஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கிறது இது சாதாரண விஷயமா? இவற்றுக்காக போராடாமல் இருக்க முடியுமா?

கே. நீங்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் எதிர்கொள்ள சட்ட ரீதியான வழிமுறைகளும் நீதிமன்றங்களும் இருக்கின்றன..

ப. நீதிமன்றங்களை நாடும்போது நீதி மறுக்கப்படுகிறது. காவிரி வழக்கை எடுத்துக்கொண்டால்கூட, தமிழகத்தில் இருக்கும் நிலத்தடி நீரை கணக்கில் கொண்ட நீதிமன்றம் கர்நாடகத்தில் உள்ள நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவில்லை. இதற்கு முன்பாக காவிரி தொடர்பாக பல உத்தரவுகளை நீதிமன்றம் வெளியிட்டிருக்கிறது. அவையெல்லாம் பின்பற்றப்படாதபோது நீதிமன்றம் என்ன செய்தது? உச்ச நீதிமன்ற நீதிபதியே, நீதிபரிபாலனை முறையில் மத்திய அரசு தலையிட முயல்வதாக குற்றம்சாட்டுகிறார்.

இந்தக் காரணங்களால்தான் தமிழகத்தில் பிரிவினைக் கோரிக்கைகள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் அதிகம் உள்ளது. இந்திய அரசியல் சாஸனத்தின் மீது உறுதியேற்றவர்கள் எப்படி நீதிமன்ற உத்தரவை மீறுகிறார்கள். அதை மத்திய அரசு கேட்க வேண்டாமா? நாங்கள் விரும்பி போராடவில்லை. விரும்பி வன்முறையில் இறங்கவில்லை. விரும்பி சிறை செல்லவில்லை. ஆனால், காவல்துறையும் ராணுவமும் ஒடுக்கு முறையில் இறங்கினால் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதைத்தான் இறுதியாக சொல்ல விரும்புகிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: