தடியைக் கொண்டு புலியோடு சண்டையிட்ட வீரப்பெண்

தன்னுடைய ஆட்டை தாக்கிய புலியோடு குச்சியை கொண்டு சண்டையிட்ட இந்திய இளம் பெண்ணொருவர் உயிர் பிழைத்தது அதிஷ்டம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குச்சியால் புலியோடு சண்டையிட்ட வீரப்பெண்

பட மூலாதாரம், RUPALI MESHRAM

மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்த 23 வயதான ருபாலி மேஷ்ராம் ஆடு கத்துவதை கேட்டு வெளியே ஓடி வந்ததாக கூறினார்.

தமது ஆட்டை புலி தாக்குவதைக் கண்ட அவர், ஒரு தடியால் அந்தப் புலியோடு சண்டையிட்டுள்ளார். பிறகு அந்தப் புலி அவரையும் தாக்கியுள்ளது. அவரது தாய் ரூபாலியை வீட்டுக்குள் இழுத்துக் காப்பாற்றியுள்ளார். அப்போது அவரும் காயமடைந்துள்ளார்.

இந்தப் புலித் தாக்குதலில் மிகச் சிறிய காயங்கள் மட்டுமே பெற்ற இருவரும் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த ஆடு இறந்து விட்டது.

புலி தாக்குதல் நடைபெற்ற பின்னர், ரத்தம் வடிந்திருந்த முகத்தோடு ருபாலி மேஷ்ராம் சுயப்படம் (செல்ஃபி) எடுத்துள்ளார், கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போதுதான் வெளியே தெரிய வந்துள்ளது.

புலியோடு சண்டையிட்ட ருபாலி மேஷ்ராமின் துணிச்சலை சிகிச்சை அளித்த மருத்துவர் புகழ்ந்துள்ளார்.

பட மூலாதாரம், SANAY TIWARI

அந்த புலியால் கடிபடாமல் தப்பித்தது ருபாலி மேஷ்ராமின் அதிஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ருபாலி மேஷ்ராமின் தலை, மணிக்கட்டு, கால்கள் மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவை சிறிய காயங்களே. அவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

தலையில் ஏற்பட்டிருந்த காயத்தால் அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டு, கண்காணிப்பில் இருந்து வந்தார்.

"எனது மகள் இறந்துவிடுவார் என்று நான் எண்ணினேன்" என்று அவருடைய தாய் ஜிஜா பாய் பிபிசியிடம் தெரிவித்தார்.

தடியால் அடித்து புலியை விரட்ட முயன்று ரத்த காயம் பட்ட மகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் நடந்த 10 நாட்களுக்கு பிறகு பிபிசியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ருபாலி மேஷ்ராமின் காயம் அவ்வளவாக தெரியவில்லை.

பட மூலாதாரம், SANJAY TIWARI

தன்னுடைய மகளை பாதுகாப்பதற்காக வீட்டுக்குள் இழுக்க முற்பட்டபோது, அவருடைய தாயும் கண்ணுக்கு அருகில் புலியால் தாக்கப்பட்டார்.

புலியிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க வனக் காவலர் ஒருவரை அழைத்ததாக அவர்கள் கூறினர். ஆனால், 30 நிமிடங்களுக்கு பின்னர் அவர் வருவதற்கு முன்னரே புலி அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டது.

வன விலங்கு பூங்கா ஒன்று அருகில் இருப்பதால், இந்த கிராமத்திற்கு வன விலங்குகள் அடிக்கடி வருகின்றன.

"இப்படி புலி தாக்கிய உடனேயே, கிராமத்திற்கு திரும்பி வருவது பற்றிய கவலை இருந்தது. ஆனால், பயம் இல்லை" என்று ருபாலி மேஷ்ராம் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: