''கொள்கைரீதியாக எதிர்க்க முடியவில்லையெனில் தமிழரில்லை என முத்திரை குத்துகிறார்கள்''

''கொள்கை ரீதியாக எதிர்க்க முடியவில்லை எனில் தமிழரில்லை என முத்திரை குத்துகிறார்கள்''

பட மூலாதாரம், Naam Thamizhar

`தெலுங்கன்' என நாம் தமிழர் கட்சியினர் தன் மீது முத்திரை குத்துகிறார்கள் என வைகோ குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தமிழர் உரிமை என்ற பெயரில், விமர்சனங்கள் எல்லை மீறுகிறதா? தமிழர்களை ஒருங்கிணைக்க இத்தகைய அணுகுமுறைதான் பலனளிக்குமா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

பிபிசி தமிழ் வாசகர்கள் ஆர்வமுடன் எழுதிய மறுமொழிகளை இங்கே தொகுத்துள்ளோம்.

''ஜாதி, மத, மொழி வேற்றுமையின்றி போராடினால்தான் தமிழக பிரச்சனைகளை தீர்க்க முடியும். இது பிரித்தாளும் சூழ்ச்சி. தமிழகம் இப்படி போனதற்கு ஒரே காரணம் இந்த ஒற்றுமையின்மைதான்.'' என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.

''தாய் தமது குழந்தைக்கு முதன்மையாக கொடுக்கும் மொழியை உள்வாங்கி தன் மொழியாக உயிரோடு கலந்து வாழ்கிறார்கள். திடீரென ஒருவன் வந்து உன் மொழி இது அல்ல நீ இந்த ஜாதியை சேர்ந்தவன் அதனால் உன் மொழி இது தான் என்று முத்திரை குத்துகிறான். வைகோ தமிழ் மொழிக்கு அதிக பாடுபட்டவர்'' என எழுதியுள்ளார் வெங்கட் சின்னா.

பேஸ்புக்கில் வி. இராம் பிரசாத் என்ற நேயர் வாதம் விவாதம் பகுதியின் மறுமொழியில் இப்படி எழுதியுள்ளார் "நாம் தமிழர் கட்சியினர் கொள்கை ரீதியாக பிறரை எதிர்க்க முடியவில்லை என்றால் அவர்களை தமிழர் இல்லை என்று முத்திரை குத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்''.

''ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும் மாநிலம், மொழி இவற்றில் நாம் வேறு பட்டாலும் இந்தியர் என்ற ஒற்றை சொல்லால் பெருமை கொள்வோம்'' என ட்விட்டரில் கூறியுள்ளார் அபுமீரா

'' தெலுங்கர்களை தெலுங்கர்கள் என்று சொல்வதில் தவறில்லை. ஆனால் அதனை தமது அரசியல் லாபத்திற்காக தமிழநாட்டிலே பிறந்து தமிழ் நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற தலைவர்களை மனதில் வைத்து உள்நோக்கத்துடன் கூறுவது மக்களை பிரித்தாளும் செயல்தான்."

ஒன்று மட்டும் உண்மை இந்த இருவராலும் நேரிடையாக தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் அரசியல் ரீதியாக கொண்டு வந்து விட முடியாது. ஏனென்றால் இந்த இருவருமே உணர்ச்சிவசபடுபவர்களாக மட்டும் அல்லாது உணர்ச்சிகளாலேயே அடிமை படுத்தப்பட்டவர்கள்'' என பேஸ்புக்கில் எழுதியுள்ளார் எம்.வேலு.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: