நாளிதழ்களில் இன்று: ''காவிரி விவகாரத்தில் அமைதியாக இருங்கள்''- தமிழகத்துக்கு அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம்
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி:"அமைதியாக இருங்கள்! தமிழகத்துக்கு அறிவுரை அளித்த உச்சநீதிமன்றம்"
பட மூலாதாரம், Getty Images
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் நடந்த போராட்டம் ஒன்றில் போலீஸ் பிடியில் இளைஞர் ஒருவர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வேறொரு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் உமாபதியிடம் தலைமை நீதிபதி தீபக் மீஸ்ரா, ஏன் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுகின்றன என்று கேள்வி எழுப்பியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டங்களை உடனே நிறுத்துமாறும், அமைதி காக்கும்படி அவர்களை வலியுறுத்துமாறும் தலைமை நீதிபதி வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் நலன் பாதுகாப்படும் என்று அவர் குறிப்பிட்டதாக விவரிக்கிறது அச்செய்தி.
தினமணி : மாநில உரிமைகளுக்காக போராடும் தமிழகமும், ஆந்திராவும்
பட மூலாதாரம், Getty Images
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் விளையாட்டு விளையாடுவதாக, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தாங்கள் கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில், தமிழகமும் ஆந்திராவும் மாநில உரிமைகளுக்காகவே போராடி வருகின்றன என சந்திரபாபு நாயுடு தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
காவிரி விவகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சயைனயை தீர்த்து வைக்காமல், அதை மத்திய அரசு தீவிரமாக வளர்த்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார் என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.
தினமலர் வெளியிட்டுள்ள கார்டூன்
பட மூலாதாரம், DINAMALAR
தி இந்து தமிழ்: கிண்டி சிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக கிண்டி சிறுவர் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
அதில் ஒரு பகுதியாக, வன உயிரினங்களின் இருப்பிடங்களை குளிர்ச்சியாக வைக்க, தென்னை மற்றும் பன ஓலைகளைக் கொண்டு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விலங்குகளுக்கு நீர்சத்து நிறைந்த உணவுகளான தர்பூசணி, ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், வெள்ளரி போன்ற பழம் மற்றும் காய் வகைகள் வழங்கப்படுவதாக விவரிக்கிறது அச்செய்தி
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்