காவிரிக்காக ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள் - குண்டுகட்டாக அப்புறப்படுத்தப்பட்ட ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை கடற்கரைச் சாலையில் போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் மறியலிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டத்திற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் அழைப்புவிடுத்திருந்தன. இந்த நிலையில், சென்னையில் சிம்ஸனுக்கு அருகில் மு.க. ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் துவங்கியதும், அண்ணா சாலையின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் சிம்ஸன் பகுதியில் ஒன்றாகக் குவிந்தனர்.

பிறகு, திடீரென ஆயிரக்கணக்கானவர்கள் பின்தொடர மெரீனா கடற்கரையை நோக்கி மு.க. ஸ்டாலின் ஊர்வலமாகப் புறப்பட்டார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் கடற்கரைச் சாலையைச் சென்றடையாதபடி, காவல்துறையினர் தடுப்புகளை வைத்து மறைத்திருந்தனர்.

ஆனால் ஊர்வலத்தினர் இந்த தடுப்புகளை உடைத்து கடற்கரைச்சாலையைச் சென்றடைந்து உழைப்பாளர் சிலைக்கு முன்பாகக் குவிந்தனர். இதனால், சாலையின் இரு பக்கங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் கைதாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்தார். இதற்கிடையில் சில தொண்டர்கள் மெரினாவுக்குள் நுழையவும் முயன்றனர்.

இதனால், மு.க. ஸ்டாலினை குண்டுக்கட்டாகத் தூக்கி காவல்துறையினர் கைதுசெய்தனர். திருநாவுக்கரசரும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் கைதுசெய்து ஏற்றப்பட்ட வாகனம் நகர முடியாதபடி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அந்த வாகனத்தை மறித்து நின்றனர். பிறகு மெதுமெதுவாக வாகனம் முன்னேறிச் சென்றது. கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

இந்த மறியல் போராட்டங்களால் அண்ணா சாலை, கடற்கரைச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

தி.மு.க. விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. உணவகங்களும்கூட இயங்கவில்லை. அரசுப் பேருந்துகளை ஆளும்கட்சியின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இயக்கினர். காசிமேடு பகுதியில் பேருந்துகள் சில கல்வீசித் தாக்கப்பட்டன.

இந்தப் போராட்டங்களால் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகளும் கர்நாடகத்திலிருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இந்தப் போராட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் வன்முறையைத் தூண்ட மு.க. ஸ்டாலின் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று நடப்பதாக இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், நாளை காலையில் நடக்குமென்று மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

மேலும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை விரைவில் நடத்தவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

திருச்சி

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.ன். நேரு தலைமையில் 1000 க்கும் மேற்பட்டோர் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு தபால் நிலையத்தை நோக்கி முன்னேறி சென்று முற்றுகையிட்டனர்.

இதனிடையே கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென காந்தி சிலையை சுற்றி சாலைமறியலில் ஈடுபட்டனர். விவசாயி விஸ்வநாதன் உட்பட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டி ஏந்தி சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விசிக வினர் பேருந்துகளை மறித்தும், பேருந்துகள் மீது ஏறியும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் மோடியின் படத்தை செருப்பால் அடித்து, தேசிய கொடியை எரிக்க முயன்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் திருச்சியில் 90% கடைகள் இன்று திறக்கப்படவில்லை. பெரும்பாலான தொலைதூர பேருந்துகள் இயங்கவில்லை. மக்கள் கூட்டமும் பெருமளவு இல்லாததால் வெறிச்சோடியது.

சேலம்

சேலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ரயிலை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். ரயில்மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் தலைமையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரயில்நிலையம் முன்பு கூடியிருந்தனர். பெங்களூரு - எர்னாகுளம் பயணிகள் ரயில் வருவதை அறிந்த போராட்டக்காரர்கள் திடீரென்று ரயில்நிலையத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசாரை மீறி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துவிட்டு உள்ளே சென்றனர்.

முதலாவது பிளாட்பாரத்தில் ரயில்வருவதை அறிந்த போராட்டக்காரர்கள் ரயிலை நோக்கி சென்றனர். போராட்டக்காரர்கள் வருவதை கண்ட ரயில் பைலட் ரயிலை வழியிலேயே நிறுத்தினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ரயில்மீது கற்களை வீசினர். இதனால் பதட்டம் நிலவியது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர். இந்த போராட்டம் காரணமாக பெங்களூரு - காரைக்கால் ரயில் சுமார் 40 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் கழுத்தில் சுறுக்கு மாட்டியும் மோடி முகமூடி அணிந்தும் மனித நேய ஜனநாயக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: