இந்தியாவில் சைவ உணவு உண்பவர்களே பெரும்பான்மை என்பது கட்டுக்கதையா?

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி

இந்தியாவைப் பற்றிய பல கட்டுக்கதைகள் வெளிநாடுகளில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் அசைவம் உண்ணமாட்டார்கள் என்பது.

பட மூலாதாரம், AFP

கடந்த காலங்களில் பெரும் சிரத்தையின்றி மேற்கொள்ளப்பட்ட சில கணக்கெடுப்புகளில் சுமார் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான இந்தியர்கள் சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்கள் என்று கூறுகின்றன.

அரசு நடத்திய மூன்று முக்கிய கணக்கெடுப்புகளில் 23% முதல் 37% வரையிலான இந்தியர்கள் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள் என்கிறது. அதில் பெரும் வியப்பேதும் இல்லை.

'மிகைப்படுத்தல்'

அமெரிக்காவிலிருந்து இயங்கும் மானுடவியல் ஆய்வாளர் பாலமுரளி நடராஜன் மற்றும் இந்திய பொருளாதார நிபுணர் சுராஜ் ஜேகப் ஆகியோர் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று 'கலாசார மற்றும் அரசியல் அழுத்தங்களால்' சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை அடுக்குகிறது.

அசைவம் உண்பதை, குறிப்பாக மாட்டிறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது. சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது.

இந்த அனைத்துக் காரணிகளையும் வைத்துப் பார்க்கும்போது, இந்திய மக்களில் சைவம் மட்டுமே உண்பவர்களின் எண்ணிக்கை சுமார் 20% ஆகும். இந்த எண்ணிக்கை பொதுக் கூற்றுகளைவிடவும் கணிசமான அளவு குறைவு.

இந்திய மக்கள்தொகையில் சுமார் 80% இருக்கும் இந்துக்களில், பெரும்பாலானவர்கள் மாமிச உணவுகளை உண்பவர்கள். மேல் சாதியினர் என்று கூறப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களில்கூட மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே சைவம் மட்டும் உண்பவர்கள்.

பட மூலாதாரம், AFP

இந்திய அரசின் தரவுகளின்படி, சைவ உணவுகளை மட்டும் உண்ணும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வருமானமும், வாங்கும் திறனும் அதிகமாக உள்ளது. தலித்துகள் மற்றும் பழங்குடியினர் பெரும்பாலும் அசைவமும் உண்பவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் மாட்டிறைச்சி

காலம் காலமாக நிலவி வரும் பொது நம்பிக்கைகளுக்கு மாறாக இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது முனைவர் நடராஜன் மற்றும் முனைவர் ஜேகப் ஆகியோரின் ஆய்வு.

அரசின் தரவுகளின்படி இந்தியர்களில் 7% பேர் மாட்டிறைச்சி உண்பவர்கள். எனினும், 'கலாசார, அரசியல் மற்றும் இன அடையாளங்களுக்கு நடுவே சிக்கித்தவிக்கும் இந்தியாவில்' மாட்டிறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைத்துக் கட்டப்படுவதற்கான ஆதாரங்கள் உள்ளன.

சைவ உணவு முறையை பிரபலமாக்கும் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி, பெரும்பான்மையான இந்துக்கள் புனிதமாகக் கருதும் பசுக்களைக் காக்கவேண்டும் என்று கூறுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. மோதி ஆட்சிக்கு வந்தபின், பசுக்களை வாகனங்களில் கொண்டு சென்றவர்களையே பசுப் பாதுகாப்பு குழுவினர் கொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.

பட மூலாதாரம், AFP

உண்மையில் இந்தியாவில் கணிசமான அளவு தலித்துகள், பழங்குடியினர், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் வழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

நடராஜன் மற்றும் ஜேகப் ஆகியோரின் இந்தக் கணக்கெடுப்புகளின்படி 15% இந்தியர்களுக்கு மாட்டிறைச்சி உண்ணும் வழக்கம் உள்ளது. இது அரசின் புள்ளிவிவரங்கள் கூறும் எண்ணிக்கையைவிட 96% அதிகம்.

மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் சைவ உணவு மட்டுமே உண்ணும் டெல்லிதான் இந்தியாவின் 'பட்டர் சிக்கன்' தலைநகராக உள்ளது.

தென்னிந்திய சைவ உணவின் மையமாக கருதப்படும் சென்னையின் 6% மக்கள் மட்டுமே சைவம் உணவுக்காரர்கள்.

இவ்வளவு பரவலாக அசைவம் உண்ணும் இந்தியச் சமூகம் எவ்வாறு சைவம் மட்டுமே உண்ணும் சமூகமாக வெளியுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது?

"சில கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு முறை உணவுமுறையும் பழக்க வழக்கங்களும் ஒரே சமூக குழுக்களுக்குள்ளேயே மாறும் இந்தியாவில், அந்த குழுக்களுக்காக யார் பொது வெளியில் பேசுகிறார்களோ அவர்கள் சொல்வதே சமூகத்தின் பொது புத்திக்குள் நுழைகிறது," என்கின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட நடராஜன் மற்றும் ஜேகப்.

"அதிகாரத்தில் இருப்பவர்களின் உணவு எதுவோ அதுவே மக்களின் உணவாக்கப்படுகிறது," என்கிறார்கள் அவர்கள்.

பட மூலாதாரம், AFP

"அசைவ உணவுகளை குறிக்க 'நான்-வெஜிடேரியன்' (தாவரவகை அல்லாத உணவுகள்) என்று கூறப்படுவதே, சைவம் உண்பவர்களின் அதிகாரம் மூலம் சமூகப் படிநிலைகளை உருவாக்குவதுதான். பிற நாடுகளை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தியபோது 'நான்-வைட்ஸ்' (வெள்ளையினத்தவர் அல்லாதோர்) என்று வெள்ளையர்கள் அடையாளப்படுத்தியத்தைப் போன்றதே இந்த வகைப்படுத்தல்," என்பது அந்த ஆய்வாளர்களின் கருத்து.

குடிபெயர்தலும் உணவும்

மக்கள் ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு குடிபெயர்வதும் உணவுப் பழக்கங்கள் பற்றிய பிறரின் அபிப்பிராயங்களை உருவாக்குகின்றன.

தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மத்திய இந்தியா அல்லது வட இந்தியாவுக்கு குடிபெயரும்போது, குடிபெயர்பவர்கள் என்ன உணவை உண்கிறார்களோ, அதுவே அவர்களின் ஒட்டுமொத்த பிரதேசத்தின் உணவாக அவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் வசிப்பவர்களால் கருதப்படுகிறது.

இது நாட்டின் பிற பகுதிகளுக்கு குடிபெயரும் வட இந்தியர்களுக்கும் பொருந்தும். ஒரு சமூகத்தின் பன்முகத்தன்மையை புரிந்துகொள்ளாமல், குறிப்பிட்ட சிலரின் உணவுப்பழக்கங்களை மட்டுமே பார்த்துவிட்டு, அவர்கள் சார்ந்த சமூகத்தின் உணவுமுறையே அதுதான் என்று கருதும் வழக்கமும் இதற்கு ஒரு காரணம்.

'கட்டாயத்தில் பெண்கள்'

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே ஒப்பிட்டால், பெண்கள் அதிகம் சைவம் உண்பவர்களாக உள்ளனர். இதற்கு வீட்டுக்கு வெளியில் உணவு உண்ணும் வழக்கம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு குறைவாக இருப்பதே காரணம் என்கிறது அந்த ஆய்வு.

பட மூலாதாரம், AFP

ஆண்வழிச் சமூகம், அரசியல் ஆகியவையும் அதற்கு ஒரு காரணம். "சைவம் உண்ணும் பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்குத்தான் இருக்கிறது," என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.

அவர்கள் கணக்கெடுப்பு நடத்திய குடும்பங்களில் 65% வீடுகளில் கணவன், மனைவி ஆகிய இருவருமே அசைவம் உண்ணும் வழக்கம் இருந்தது. 20% வீடுகளில் இருவருமே சைவம் உண்பவர்களாக இருந்தனர். 12% வீடுகளில் கணவர் அசைவம் உண்பவராகவும், மனைவி சைவம் உண்பவராகவும் இருந்தனர். 3% வீடுகளில் மனைவி அசைவம் உண்பவராகவும் கணவர் சைவம் உண்பவராகவும் இருந்தனர்.

இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு வகை அசைவம் உண்பவர்கள் என்பது தெளிவு. எனினும், இந்தியா சைவம் உண்பவர்கள் அதிகம் உள்ள நாடாக ஏன் வெளிநாடுகளுக்கு காட்டப்படுகிறது?

பன்முகத்தன்மையும், பல பின்னல்களும் நிறைந்த இந்திய சமூகத்தில் ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தை வெளியுலகுக்கு காட்டுவதும், யார் எதை விரும்பி உண்கிறார்கள் என்பதை கண்காணிக்கவும் வேண்டுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :