சல்மான் கான் வேட்டையாடிய கலைமான் பற்றி உங்களுக்கு தெரியுமா?

  • பரத் ஷர்மா
  • பிபிசி, இந்தி

அரிய வகை மானாக இந்தியாவில் காணப்படும் கலைமானை வேட்டையாடியதால் இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2 கலைமான்களை வேட்டையாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இந்த தீர்ப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை கலைமான்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விபரங்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

கலைமான்கள் வாழும் இடங்கள்

ஆங்கிலத்தில் கறுப்பு மான் என்ற பொருளில் அழைக்கப்படும் கலைமான்கள் பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், அமெரிக்கா, அர்ஜென்டினாவில் வாழ்கின்றன.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்ற இந்த வகை மான்கள், சில பகுதிகளில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.

இவை வாழ்ந்து வருகின்ற இடங்கள் தொடர்ந்து சுருங்கி வந்தாலும், இன்னும் சில இடங்கள் எஞ்சியுள்ளன.

வாழும் இடங்களில் ஏற்படும் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிகொள்கின்ற பண்பை இந்த மான்கள் பெற்றுள்ளன.

இருப்பினும், மக்கள்தொகை பெருக்கம், செல்ல விலங்குகள் அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த வகை மான்களின் பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடையும், எண்ணிக்கையும்

"விலங்குகளின் பட்டியல் 1ல் இடம்பெற்றுள்ள கலைமான்களை வேட்டையாடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது" என்று உதய்பூர் தலைமை வனப்பாதுகாவலர் ராகுல் பாட்நகர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த வகை மான்கள் பொதுவாக சமவெளி மற்றும் பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. இப்பகுதி மனிதர்கள் எளிதில் இனம் காண்பதால் இவை மிகவும் பாதிக்கப்படுகின்றன. எனவே, பாதுகாக்க கண்டிப்பான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஆண் கலைமான்கள் 34 முதல் 45 கிலோ எடையுடையதாக இருக்கும். தோள் வரை 74 முதல் 88 சென்டிமீட்டர் வரை உயரம் கொண்டவை.

31 முதல் 39 கிலோ வரை எடையுடைய பெண் கலைமான்கள், ஆண் கலைமான்களைவிட சற்று உயரம் குறைவானவை.

ஆண்களை போல வெள்ளை நிறமுடைய பெண் கலைமான்களும் உள்ளன.

அவற்றின் இரண்டு கண்களை சுற்றியும், வாய், வயிறு, பாதத்தின் உள்பகுதியிலும் வெள்ளை நிறம் காணப்படுவது இவற்றின் தனித்தன்மை.

ஆண் மற்றும் பெண் கலைமான்களின் வேறுபாடு கொம்பு மட்டுமே. ஆண் கலைமான்களுக்கு நீளமான கொம்புகள் உள்ளன. பெண் கலைமான்களுக்கு கொம்பு கிடையாது.

நிறம் மாறும் மான்

கலைமான்களின் நிறமும் மாறுபாடுவது மிகவும் முக்கியமானது.

பருவமழை முடிவில் ஆண் கலைமான்களின் நிறம் கறுப்பாக இருக்கும்.

குளிர் காலத்தில் இந்த நிறம் மெல்லிய கறுப்பாக மாறுகிறது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் பழுப்பு நிறமாக மாறுகிறது.

தென் இந்தியாவிலுள்ள இந்த வகை மான்கள் சில கறுப்பாக இருப்பதில்லை. ஆனால், பெண் மற்றும் குட்டி கலைமான்கள் விட கரும் நிறமுடையதாக ஆண் கலைமான்கள் உள்ளன.

புல்லை தின்று வாழும் கலைமான்கள் குறைவான மேய்ச்சல் நிலமுடைய மிதமான பாலைவனப் பகுதிகளில் அங்குள்ள மேய்ச்சல் நிலத்தை நம்பி வாழ்கின்றன.

பிரிட்டானியர் இந்தியாவை ஆண்டபோது, பல்லாயிரக்கணக்கில் கலைமான்கள் வாழ்ந்தன. இப்போது அவ்வாறில்லை என்று உதய்பூரை சோந்த வன விலங்கு நிபுணர் அராஃபா தெய்சின் பிபிசியிடம் தெரிவித்தார்.

அழிவின் விளிம்பில் உள்ளனவா?

அடர்ந்த காடுகளில் வாழும் விலங்கல்ல என்பதால், கலைமான்கள் வாழும் பகுதிகள் மிகவும் குறைவே.

சமவெளிகளில் வாழும் விலங்காக இருப்பதால், மக்கள் தொகை பெருக்கத்தால் அவைகளின் இடங்கள் குறைந்து போய்விட்டன.

200 ஆண்டுகளுக்கு முன்னர் கலைமான்கள் மொத்தம் 40 லட்சம் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 1947ம் ஆண்டு 80 ஆயிரமாக குறைந்திருந்தன.

1970களில் கலைமான்களின் இந்த எண்ணிக்கை 22 முதல் 24 ஆயிரமாக குறைந்தது. 2000ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வளர்ந்து 50 ஆயிரமாகிவிட்டன.

இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கலைமான்கள் காணப்படுகின்றன.

இந்தியாவுக்கு வெளியே 200 கலைமான்கள் நேபாளிலும், 8,600 அர்ஜென்டினாவிலும், 35 ஆயிரம் அமெரிக்காவிலும் வாழ்ந்து வருகின்றன.

துல்லியமான கணக்கெடுப்பு இல்லை என்பதால், கலைமான்களின் சரியான எண்ணிக்கையை குறிப்பிடுவது கடினமாகும்.

விவசாய நிலங்களில் குடியேறி வாழும் தன்மை கலைமான்களிடம் உள்ளன. சில இடங்களில் பயிர்களை நாசம் செய்யும் விலங்காவும் இது உள்ளது. இருப்பினும், நீல்காய் மான்களை போன்று மிகவும் ஆபத்தானவை அல்ல கலைமான்கள்.

முற்கால முக்கியத்துவம்

இந்திய கலாசாரத்தில் கலைமான்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

சிந்து சமவெளி நாகரிகத்தில் கலைமான்கள் உணவு ஆதாரமாக இருந்துள்ளன,

டோலாவிரா மற்றும் மெஹர்கர் போன்ற இடங்களில், இதனுடைய எலும்புகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

16 முதல் 19ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய மன்னர் காலத்தில், கலைமான்கள் பற்றிய சிறிய ஓவியங்கள் பல இருந்துள்ளன.

இந்தியாவிலும், நேபாளிலும் கலைமான்கள் புனிதமானவையாக பார்க்கப்படுவதால் அவற்றை யாரும் காயப்படுத்துவதில்லை. அவ்வாறு செய்வோர் கடுமையாக நடத்தப்படுகின்றனர்.

விஷ்நோய் போன்ற சமூகங்கள் கலைமான்களை ஏறக்குறைய வணங்குகின்றன. ஆந்திர பிரதேசம் கலைமான்களுக்கு மாநில விலங்கு என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

சமஸ்கிருதத்தில் கலைமான்கள் கருப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து புராணங்களில் கிருஷ்ணரின் தேரை கலைமான்கள் இழுத்துச் சென்றதாக குறிப்புகள் உள்ளன.

வாயு, சந்திரன் ஆகியோரின் வாகனமாகவும் கலைமான்கள் கருதப்படுகின்றன.

ராஜஸ்தானில் கலைமான்களின் பாதுகாவலராக கரானி மாதா கருதப்படுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: