'ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்த தமிழக ஆளுநர்'

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (ஆங்கிலம்) - 'ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்த தமிழக ஆளுநர்'

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் மதிப்பாய்வு சந்திப்புகளை தமிழக ஆளுநர் நடத்தி வருகிறார் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அரசு மீது நம்பிக்கை இருந்தால், இவ்வாறான சந்திப்புகளுக்கான அவசியம் இல்லை.

அதிமுகவின் அவல ஆட்சியை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னிடம் வெளிப்படையாக கூறியதாக ஸ்டாலின் தெரிவித்தார் என மேலும் விவரிக்கிறது இச்செய்தி.

தி இந்து தமிழ் - திரைத்துறை பிரச்சனை: விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், VISHAL/TWITTER

திரையுலகினரின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு, அரசு சார்பில் விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி அளித்துள்ளதாக ’தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திரையரங்க கட்டணத்தை கணினி மயமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக புதுப்படங்கள் வெளியாவதை தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள், க்யூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரிடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் இப்பிரச்சினையில் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், திரைத்துறையினரின் பிரச்சனைகள் குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து இன்னும் 2 நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கடம்பூர் ராஜூ உறுதியளித்தார் என்று விஷால் கூறியதாக விவரிக்கிறிது இச்செய்தி.

சல்மான் கான் பெற்ற சிறை தண்டனை குறித்து தினமலர் வெளியிட்டுள்ள கார்டூன்

பட மூலாதாரம், DINAMALAR

தினத்தந்தி - 'காவிரி போராட்டத்துக்கு மத்தியில் நடைபெற்ற திருமணம்'

போராட்டக்களத்தின் மத்தியில் இளம் ஜோடியின் திருமணத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார் என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை எதிர்த்து போராட்டம் நடத்திய மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர், புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், அக்கட்சியை சேர்ந்த பாரதி தாசன்- ஸ்ரீமதி ஆகியோரை அழைத்து வந்தார்.

பட மூலாதாரம், Thol.Thirumavalavan/FACEBOOK

திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் திருமணத்தை நடத்தி வைப்பதாக திருமாவளவன் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், அவர் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அதற்கு மத்தியில் இவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததாக தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: