கர்நாடகாவை சேர்ந்தவருக்கு அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி - வலுக்கும் எதிர்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சென்னையில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இன்றி மூன்று பேரைக் கொண்ட நிர்வாகக் குழுவால் இயங்கிவந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வந்த பிறகு நீதிபதி சிர்புர்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவனும், ஆட்சிக்குழு சார்பில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஞானமூர்த்தியும் நியமிக்கப்பட்டனர்.

இந்தக் குழு மூன்று பேரைக் கொண்ட பட்டியலை இறுதிசெய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு சமீபத்தில் அனுப்பிவைத்தது. இந்தப் பட்டியலில் பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவராகப் பதவிவகித்த பேராசிரியர் தேவராஜ், சென்னை ஐஐடியின் கணிதத் துறை பேராசிரியர் பொன்னுசாமி, பெங்களூர் ஐஐஎஸ்சியைச் சேர்ந்த சூரப்பா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அந்தப் பட்டியலில் இருந்தவர்கள் மூன்று பேரும் பிறகு ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தைச் சந்தித்துப் பேசினர். இதற்குப் பிறகு புதிய துணைவேந்தராக எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வியாழக்கிழமை இரவில் அறிவித்தது.

ஆனால், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே பாட்டாளி மக்கள் கட்சி எம்.கே. சூரப்பாவை நியமிக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. "கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியரை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமித்தால், நிர்வாகத் திறன்கொண்ட கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும். கர்நாடகாவைச் சார்ந்தவரை நியமிப்பது கண்டிக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாது" என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

தற்போது இந்த நியமன ஆணை வெளியாகியிருக்கும் நிலையில், தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். "காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில், தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும் தருணத்தில்,கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த திரு எம்.கே. சூரப்பா என்பவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்திருக்கும் மாண்புமிகு தமிழக ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. மண்ணின் மைந்தர்களாக இருக்கும் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாம்" என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னதாக, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு புனே பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த சூரிய நாராயண சாஸ்திரியை நியமித்ததற்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர் இதற்கு முன்பாக சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தபோது முறைகேடுகளில் ஈடுபட்டார் என்றும் ஆர்,எஸ்.எஸ். சார்புடையவர் என்றும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குறைகூறின.

இந்தப் பின்னணியில்தான் கல்வி வளாகங்களை காவிமயமாக்க வேண்டாம் என மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சில் பேராசிரியராகப் பணியாற்றிய எம்.கே. சூரப்பா ரோபரில் உள்ள ஐஐடியின் இயக்குனராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர். இவர், 3 ஆண்டுகள் அண்ணா பல்கலையின் துணை வேந்தராக இருப்பார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: