சல்மான் கானுக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை முடிவு

சல்மான்

பட மூலாதாரம், Getty Images

கலைமான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமின் கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இதன் மீதான தீர்ப்பு நாளை (சனிக்கிழமை) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு மானை வேட்டையாடிய வழக்கை விசாரித்து வந்த ஜோத்பூர் நீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமையன்று 201 பக்க தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பில், அழிந்து வரும் மான் இனமான கலைமானை கொல்வதால் இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. வேட்டையாடுதல் என்பது தற்போது முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. வன பாதுகாப்பு சட்டத்தை சல்மான் கான் மீறியுள்ளதால் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

20 ஆண்டு கால வழக்கு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மானான 'கலைமானை' வேட்டையாடியதாக சல்மான் கானுடன் மேலும் 4 நடிகர் நடிகைகள் மீது 1998ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலைமான் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு மான் இனமாகும்.

'ஹம் சாத் ஹெய்ன் ஹெய்ன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோத்பூர் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக என்று கூறப்படுகிறது.

சல்மான் கானுடன் நடிகர் சயிஃப் அலி கான் மற்றும் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோருடைய பெயர்களும் இருந்தன.

சல்மான் கானை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், மற்ற நால்வரையும் விடுவித்துள்ளது.

சல்மான் கானும் சர்ச்சைகளும்

2015-ஆம் ஆண்டில், நடைபாதைவாசி ஒருவர் மீது காரை ஓட்டி அவரைக் கொன்றுவிட்டு தப்பியோடியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற சல்மான், பின்னர் மேல் முறையீட்டில் விடுதலை ஆனார்.

2016ஆம் ஆண்டு, இதே போன்ற மான் வேட்டையாடிய வழக்கில் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டைனையை எதிர்த்து சல்மான் தாக்கல் செய்த வழக்கில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

பட மூலாதாரம், SAT SINGH/BBC

2016ல், தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் போல் உணருவதாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார் சல்மான். அதே நேர்காணலில் சல்மான கான் தனக்கு உள்ள சிகரெட், மது, காபி ஆகிய கெட்ட பழக்கங்களை தன்னால் விட முடியும் ஆனால் பெண் துணையை மட்டும் விடுவது கடினம் எனத் தெரிவித்தது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மானை வேட்டையாடச் செல்லும் போது உரிமம் இல்லாத துப்பாக்கியைப் பயன்படுத்தினார் என்ற வழக்கிலிருந்தும் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: