'மம்மி' பாணியில் இறந்த தாயின் சடலத்தை 3 ஆண்டுகள் பாதுகாத்த மகன்

பழங்கால பெண் மம்மி (கோப்புப் படம்) படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பழங்கால பெண் மம்மி (கோப்புப் படம்)

கொல்கத்தாவைச் சேர்ந்த, பினா மஜும்தார் ஏப்ரல் 2015இல் இறந்தபோது அவருக்கு வயது 87.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலை அவரது மகன் சுபப்ரதா எப்போது எரித்தார், இறுதிச் சடங்கு எப்போது நடைபெற்றது என்பது யாருக்கும் தெரியாது.

அண்டை வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் இருந்தாலும் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

கடந்த புதனன்று நள்ளிரவுக்குப் பின் காவல் துறைக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் கொல்கத்தாவின் பெஹாலா பகுதியிலுள்ள சுபப்ரதாவின் வீட்டில் மேற்கொண்ட ஆய்வில்தான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

"அந்தக் கட்டடத்தை நாங்கள் சோதனை செய்தபோது ஒரு பெண்ணின் உடல் ஒரு பெரிய குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். அந்த உடல் கெட்டுப்போகாமல் இருக்க பல வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன," என்கிறார் பிபிசியிடம் பேசிய தென்மேற்கு கொல்கத்தாவின் காவல் இணை ஆணையர் நிலஞ்சன் பிஸ்வாஸ்.

தற்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ள சுபப்ரதா, தனது தாயின் உடலைப் பாதுகாப்பதன் மூலம் அவரை உயிர்ப்பிக்க விரும்பியதாகக் கூறியுள்ளார்.

பினாவின் உடல் பாதுகாக்கப்படும் முன்பு அவரது குடல்கள் மற்றும் கல்லீரல் ஆகியன வெளியே எடுக்கப்பட்டன. அந்த உடல் பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஜாடிகளையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதே முறைதான் இறந்த உடல்களை பாதுகாத்து 'மம்மி' ஆக்குவதற்காக பழங்கால எகிப்தில் பின்பற்றப்பட்டது.

தோல் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் வல்லுநரான சுபப்ரதா, தான் பயின்ற தொழில்நுட்பம் மூலமே அவரது தாயின் உடலையும் பதப்படுத்தி, பாதுகாத்து வைத்திருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

"உடல் முறையாகப் பாதுகாக்கப்பட்டால் அவரது தாய் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று அவர் நம்பினார். இறந்த உடல்களை பாதுகாப்பது, மறுபிறப்பு உள்ளிட்டவற்றை விளக்கும் சில நூல்களையும் கைப்பற்றியுள்ளோம்," என்று நிலஞ்சன் பிஸ்வாஸ் தெரிவித்தார்.

சுபப்ரதாவின் தந்தையும் அதே வீட்டில்தான் வசித்து வருகிறார். 90 வயதாகும் தன் தந்தையையும் உடலைப் பாதுகாத்து வைத்தால் தாய் மீண்டும் உயிர் பெறுவார் என்று அவர் நம்பவைத்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பணம் பெறும் நோக்கம் இல்லாமலும் இல்லை. சுபப்ரதாவின் பெற்றோர் இருவருமே இந்திய உணவுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இறந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பினாவின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. ஏடிஎம் அட்டை மூலம் அந்தப் பணத்தை சுபப்ரதா எடுத்து வந்துள்ளதாக நிலஞ்சன் பிஸ்வாஸ் கூறுகிறார்.

ஒருவர் ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் அவர் உயிருடன் இருப்பதற்கு ஆதாரமாக சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியத்தைத் தொடர்ந்து வாங்க போலியான ஆவணங்களை சுபப்ரதா அரசிடம் சமர்பித்தாரா, அவரது தாயின் உடலில் கைரேகை கொண்டு மோசடி செய்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

தற்போது வங்கிக்கு, பினா மஜும்தார் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த் தே எனும் மென்பொருள் பொறியாளர் இறந்த தனது சகோதரியின் உடலுடன் ஆறு மாதங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கு 'ராபின்சன் ஸ்ட்ரீட் வழக்கு' என்று பரவலாக அறியப்பட்டது.

பார்த் தே அவரது சகோதரியின் உடலை முறையாகப் பாதுகாக்காததால் அது எலும்புக்கூடாகிப் போனது. பார்த் தே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், கடந்த ஆண்டு அவர் எதிர்பாராவிதமாகத் தற்கொலை செய்துகொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்