காதலில் தோற்ற பெண்கள் மீண்டும் காதலித்தால் ஏற்கிறதா சமூகம்? #BBCShe

  • திவ்யா ஆர்யா
  • பிபிசி

"இப்போது பெண்களை பற்றிதான் ஒரே பேச்சாக உள்ளது. யாரும் எங்களுடைய உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை".

"பெண்கள் தினத்தில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. யாரும் 'ஆண்கள் தினம்' பற்றி குறிப்பிடுவதில்லை".

"பெண்கள் அவர்களுடைய உரிமைகள் எல்லாம் பெற்றிருக்கின்றனர். இப்போது நாங்கள் பொருட்களைபோல நடத்தப்படுகின்றோம்".

குஜராத் மாநிலத்தின் ராஜ்காட்டில் பிபிசிஷி பணித்திட்டத்தின்போது பெண்களிடம் விவாதங்கள் நடத்திய பின்னர், ஆண்களிடம் பேச வேண்டுமென நினைத்தேன்.

ஆண்களை சந்தித்தபோது, பல புகார்களை தெரிவித்தார்கள். அவர்களின் உணர்வுகளை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

ஆண்கள் பற்றிய விவாதம் நடைபெறாமல் இல்லை. அவர்கள் சாதிக்கிறபோது, பெண்களைப் பாராட்டுவதைபோல அவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். என்ன நடந்தாலும், எதுவும் ஆண்களிடம் இருந்து எடுக்கப்பட்டுவிடவில்லைதானே என்று நான் பதிலளித்தேன்.

பாராட்டுவது பரவாயில்லை என்பது உடனடி மறுமொழியாக இருந்தது. ஆனால், விமர்சனம் மிகவும் அதிகமாக உள்ளது. சில ஆண்களால், எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆண்கள் கூறினார்கள்.

இப்போது ஆண்களின் வாழ்க்கை கடினமாகிவிட்டது. பெண்களிடம் பேசுவதற்கு முன்னால், அவர்கள் தவறாக நினைத்துவிட கூடாதே என்று நினைத்துகொண்டு ஆண்கள் மிகவும் கவனமாக பேச வேண்டியுள்ளது என்று அவர்கள் முறையிட்டனர்.

புகார் சரியானதுதான். ஆனால், சில ஆண்களின் பேச்சை கேட்டு தாங்கள் கவலைப்படுவது எவ்வளவு என்பதையும் அதே கல்லூரியின் பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

"ஆண்கள் பெண்களை கேலி செய்கின்றனர். பெண்கள் ஏற்காவிட்டாலும் ஆண்கள் கண்டுகொள்வதில்லை. தங்களை கதாநாயகர்களாக ஆண்கள் எண்ணுகிறர்கள். அதனை பெண்கள் விரும்புவதாகவும் நினைக்கிறார்கள். அவ்வாறு எல்லாம் ஒருபோதும் இல்லை" என்று பெண்கள் தெரிவித்தனர்.

சுமார் 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட ராஜ்காட் சிறியதொரு நகரம்தான். சாலையில் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து செல்லவதை பார்ப்பது மிகவும் அரிது.

அவர்கள் ஒன்றாக கல்வி கற்கிறார்கள். ஆனால் கல்லூரியிலும் ஆண்கள், பெண்கள் என தனித்தனி குழுக்காகவே அவர்கள் வலம் வருகிறார்கள்.

அங்கு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் இங்கு மிகவும் பிரபலம்.

ஆனால், ஃபேஸ்புக்கில் பெண்கள் தங்களின் பக்கங்களை "தனிப்பட்ட" பக்கம் என்றே வைத்துள்ளனர்.

மிகுந்த ஆலோசனைக்குப் பின்னர்தான் ஆண்களின் 'நட்பு வேண்டுகோளை' பெண்கள் ஏற்றுக்கொள்வதாக ஒரு பெண் எங்களிடம் தெரிவித்தார். ஆனால், பல நேரங்களில் ஏமாற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதனை ஆண்களிடம் சொன்னபோது, பெண்கள் "முடியாது" என்று சொல்வதையும், "ஆம்" என்று எடுத்துக்கொள்ளும் பண்புடைய சில ஆண்களால்தான் இவ்வாறு நடக்கிறது என்று கூறினர்.

இதற்கு பாலிவுட் திரைப்படங்களை ஒருவர் குற்றஞ்சாட்டினார்.

"ஒருவர் ஒரு பெண்ணை எப்போதும் தொடர வேண்டும். அவர் இந்த ஆணை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தொடர்ந்து பின்பற்றி செல்ல வேண்டும். இறுதியில், அந்த பெண் சம்மதிப்பார். காதலில் விழுவார். பின்னர் அந்த ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள். குழந்தைகள் பிறக்கும். மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வார்கள் என்று பல ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்களில் காட்டப்படுகிறது" என்று அவர் கூறினார்.

அவரது கருத்தை ஆமோதிப்பதைப் போல அனைவரும் தலையசைத்தனர். இது உண்மை என்று ஆண்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று கேட்டேன்.

"ஆம். ஒரு சமயத்தில் நானும் இதுதான் உண்மை என்று நினைத்தேன். பல பெண்கள் என்னை மறுத்த பின்னர்தான், எதார்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. கட்டாயப்படுத்தப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், இதனை புரிந்து கொள்வது ஏன் மிகவும் கடினமாக உள்ளது?

ஒரு கணம் எல்லோரும் அமைதியானார்கள்.

பின்னர், ஒருவர் எழுந்து, "உண்மையில் பெண்களை மனிதர்களாகப் பார்க்காமல் "பொருள்களாக" ஆண்கள் பார்க்கின்றனர்" என்று கிசுகிசுக்கும் குரலில் கூறினார்.

"இரண்டு ஆண்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, முன்னால் ஒரு பெண் கடந்து சென்றால், அவரைப் பற்றி இந்த ஆண்கள் என்ன சொல்வார்கள்... உணர்வார்கள்... என்று உங்களுக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.

மிகவும் விவரமாக அந்த நபர் பதிலளித்திருப்பார். ஆனால், அவருடன் இருந்த நண்பர் அமைதியாக இருப்பதற்கு சைகைக்காட்டியவுடன், "அது அப்படியே இருக்கட்டும். என்னிடம் இதற்குமேல் கேட்காதீர்கள்" என்று பேச்சை நிறுத்திக்கொண்டார்.

அவர்கள் சொல்லாததை நான் புரிந்து கொண்டேன் என்பது அவர்களுக்கு தெரியும்.

அவர்களின் உலகை அறிந்து கொள்ள அவர்கள் என்னை அனுமதித்தார்கள். ஆனால், அமைதியாக இருந்ததன் மூலம், ஆண்கள் அவ்வாறு எண்ணுவதை சொல்வதற்கு சங்கடம் அடைவதைக் கூறவும் விரும்பியுள்ளனர்.

வெளிப்படையாக ஒருவரைப் பற்றி சொல்லுவதற்கு கைகளை உயர்த்தி, வெளிப்படையாக பேசி, ஒரு பெண்ணின் முன்னால் தவறை ஏற்றுக்கொண்டதை புகழத்தான் வேண்டும்.

அவர்கள் தவறை உணர்ந்திருந்தார்கள். ஒரு தரப்பு இன்னொரு தரப்பை புரிந்து கொண்டிருந்ததாக தோன்றியது.

முடிவில், அந்த ஆண்களில் ஒருவர் எழுந்து, "நாங்கள் பாகுபாட்டை விரும்பவில்லை. ஆண் ஒரு பெண்ணை காதலித்துவிட்டுப் பிரிந்த பின்னர் இன்னொரு பெண்ணை காதலிப்பது பரவாயில்லை என்ற எண்ணம் உள்ளது. ஆனால், காதல் முறிவுக்கு பின்னர் ஒரு பெண் இன்னோர் ஆணை காதலித்தால், அவர் மோசமாக குணம் படைத்தவராக பார்க்கப்படுகிறார்" என்று கூறினார்.

இதே போன்ற கருத்தை நாக்பூரிலுள்ள ஒரு பெண்ணும் தெரிவித்திருந்தார்.

பல பெண்களோடு நட்பு கொண்டிருக்கும் ஆண் "பாலியல் கவர்ச்சிமிக்கவர்" என்று அழைக்கப்படுகிறார். பல ஆண்கனோடு நட்புறவு கொண்டிருக்கும் பெண் "விலைமகள்" எனப்படுகிறார் என்று அந்த பெண் தெரிவித்திருந்தார்.

முடிவில், ஆண்களுக்கு முன்னால் விவாதங்களை வைக்க வேண்டாம் என்ற எண்ணம் எழுந்தது. பெண்களின் உரிமைகள் பற்றி அவர்களிடம் பேசுவதற்கு தேவை இல்லைதானே.

பொதுவான சிந்தனை ஒன்று உருவாகி வருகிறது. இந்த நகரங்களில் அடிக்கடி இதனை பெரியளவில் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால், ஆண், பெண் இரு தரப்பும் ஒன்றை ஒன்று புரிந்துகொள்வதற்கான நல்ல முயற்சிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

பூப்படைதல் விழா தேவையா? கேள்வியெழுப்பும் பெண்கள்

காணொளிக் குறிப்பு,

பூப்படைதல் விழா: என்று மாறும் இந்த சமூகம்? கேள்வியெழுப்பும் பெண்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: