துணைவேந்தர் பதவிக்கு தமிழகத்தில் தகுதியானவர்கள் இல்லையா?

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

'தமிழக கல்வி நிறுவனங்களில் பிற மாநிலத்தவர்களை திணிக்கும் முயற்சி என்ற வாதம் நியாயமானதா? வழக்கமான நியமன நடைமுறை அரசியல் ஆக்கப்படுகிறதா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

ஷாஹூல்ஹமீத் அப்துல்ஹூதா, "மாநில சுயாட்சி என்பது என்ன?? சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஆளுநரோ அல்லது மாநில அரசு, தமிழகத்தை சார்ந்த எவரையேனும் தகுதியே இருந்தாலும் பணி அமர்த்த முடியுமா?? ஆளுநருக்கு துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் இருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த தகுதியான ஒருவரை நியமிக்கலாமே," என்கிறார்.

"பக்கத்து வீட்டுக்காரரை கூட்டி வந்து இனி இந்தக்குடும்பத்தின் தலைவர் இவர்தான் என்று சொல்வது போலுள்ளது. கவர்னரின் செயல் தமிழ் நாட்டை அவமதிப்பதாகும்," என்று கூறியுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

அப்பொறுப்புக்கு தகுதிவாய்ந்தவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள் என்கிறார் ஸ்ரீ ரஞ்சினி ஆறுமுகம்.

"தமிழகத்தின் முதன்மையான மூன்று பல்கலைக் கழகங்களிலும் நியமிக்கப்பட தகுதியான ஒரு தமிழரைக் கூட கையாலாகாத மத்திய அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே இதன் உண்மை நிலவரம்," என்பது கார்த்திகேயன் எனும் ட்விட்டர் நேயரின் கருத்து.

"இன்றைய அரசியல் சூழல் எல்லாவற்றையும் செய்ய வைக்கிறது. வலிமையான ஓர் அரசு இல்லை என்பதை மத்திய அரசு பயன்படுத்தி அனைத்தையும் சாதிக்க நினைக்கிறது. அவர்கள் நினைப்பதை நடத்தும் சூழல்தான் இன்று உள்ளது. தமிழகத்தில் நல்ல திறமையானவர்கள் உள்ளார்கள். மத்திய அரசின் அதிகாரப் போக்கு அழிவில் முடியும்," என்கிறார் அருண்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்