நாளிதழல்களில் இன்று: ’கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்’

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி - 'கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்'

பட மூலாதாரம், Getty Images

கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார் என்று குறுக்கு விசாரணையின் போது அரசு மருத்துவர் பாலாஜி தெரிவித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அரசு மருத்துவர்கள் பாலாஜி, முத்துசெல்வன், கலா, டிட்டோ, தர்மராஜன் மற்றும் அக்குபங்சர் மருத்துவர் சங்கர் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.

குறுக்கு விசாரணை முடிவடைந்து வெளியே வந்த மருத்துவர் சங்கர், சம்பந்தமில்லாத பல கேள்விகளை தன்னிடம் குறுக்கு விசாரணையின் போது சசிகலா தரப்பு வக்கீல் கேட்டதாக கூறினார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

மருத்துவர் சங்கர் ஏற்கனவே ஆணையத்தில் அளித்த சாட்சியம் பொய் என்பதை நிரூபிக்க கண்ணியத்துடன் பல கேள்விகளை கேட்டேன். எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் அவர் ஏற்கனவே அளித்த சாட்சியத்தில் சில விஷயங்கள் பொய்யானது என்பதை பதிவு செய்து அதற்கு ஆணையத்தில் வருத்தம் தெரிவித்தார் என்று வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாக விளக்கு அந்த செய்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற அடிப்படையிலேயே ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது. அரசு மருத்துவர் முன்னிலையில் கைரேகை பெறப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே மருத்துவர் பாலாஜி முன்னிலையில் கைரேகை பெறப்பட்டது. இதற்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை.

இருந்தபோதிலும் ஜெயலலிதா கைரேகைக்கு சான்றொப்பமிட்ட தினத்தன்று அமைச்சர் விஜயபாஸ்கரிடமும், மறுநாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்ததாக மருத்துவர் பாலாஜி குறுக்கு விசாரணையின் போது தெரிவித்தார் என்று அவர் கூறியதாக விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) - 'அரசியல்வாதிகளுக்கு ஏன் வயது உச்சவரம்பு இல்லை?'

அரசியல்வாதிகளுக்கு ஏன் வயது உச்சவரம்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாய்மொழியாக கேள்வி எழுப்பியதாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ்.

தினமணி: 'ஒட்டுமொத்த நாடும் விரைவில் பாஜகவை நிராகரிக்கும்: சந்திரபாபு நாயுடு'

பட மூலாதாரம், Getty Images

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் விரைவில் பாஜகவை நிராகரிப்பார்கள் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ். பாஜகவை ஆந்திர மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விரைவில் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் பா.ஜ.க வை நிராகரிப்பார்கள். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று ஏற்கெனவே மாநிலங்களைவில் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும்வரை எங்களது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அந்த அறிக்கையில் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து (தமிழ்) - 'சந்தையூர் சுவர் இடிப்பு`

மதுரை அருகே சந்தையூரில் உள்ள சர்ச்சைக்குரிய சுவர் நேற்று இடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 66 நாட்களாக மலையடிவாரத்தில் குடியேறி நடத்தி வந்த போராட்டத்தை ஒரு தரப்பினர் விலக்கிக் கொண்டனர். சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற 2 பேர் உட்பட 70 பேரை போலீஸார் கைது செய்தனர் என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், தி இந்து

அந்த நாளிதழ் செய்தி, "மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சந்தையூர். இவ்வூர் ராஜகாளியம்மன் கோயிலைச் சுற்றி ஒரு சமூகத்தைச் சேர்ந்த இருபிரிவினர் வசிக்கின்றனர். கோயிலை சுற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு சுவர் எழுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த சுவரை கடந்து தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என ஒரு தரப்பினர் கட்டுப்பாடு விதிப்பதாக மற்றொரு தரப்பினர் 3 மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தனர். எனவே, அந்த தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் நீதிமன்றத்திலும் முறையிட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர உரிய தீர்வு காணுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஆட்சியர் கொ.வீரராகவராவ் 2 முறை சந்தையூர் சென்று பேச்சு நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

இதையடுத்து சுவரை உடனே இடிக்க வலியுறுத்தி கடந்த ஜன. 30-ம் தேதி சந்தையூர் அருகே உள்ள மலையடிவாரத்தில் ஒரு பிரிவினர் குடியேறி போராட்டத்தைத் தொடங்கினர். சுவரை இடிக்கும்வரை ஊர் திரும்பமாட்டோம் என அறிவித்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற பழனிமுருகன் என்பவர் மரணமடைந்தார். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

கடந்த 66 நாட்களாக இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த அவர்கள் ஏற்பாடு செய்துவந்த நிலையில், நேற்று முன்தினம் ஆட்சியர் சந்தையூர் சென்று மக்களை சந்தித்தார். இருதரப்பினரையும் அழைத்து பேசி சமரச தீர்வு ஒன்றை ஏற்படுத்தி அதை உத்தரவாக பிறப்பித்து, இருதரப்பினரிடமும் வழங்கினார்." என்று விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை

பட மூலாதாரம், தி இந்து

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை- அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்'

ஐ.ஐ.டி-யைவிட சிறந்த கல்வி நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகத்தை மாற்ற விரும்புகிறேன் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர் எம்.கே. சூரப்பா கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

"அவர் மீது சுமத்தப்படும் முறைகேடு குற்றச்சாட்டுகள் மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை வளர்த்தெடுப்பதில் மொழி ஒரு தடையாக இருக்கும் என்று பரவலாக பேசப்படுவது குறித்து அவரிடம் கேட்டதற்கு, 'என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அண்ணா பல்கலைக்கழகத்தை வளர்த்தெடுப்பதில் மொழி ஒரு தடையாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை. தமிழகத்தை சேர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மைசூர் வந்திருக்கிறார். அறுபதுகளில் மாநிலங்கள் கடந்து கல்வியாளர்கள் பல்கலைக்கழகத்துக்கு தலைமை வகித்து இருக்கிறார்கள்' " என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: