இந்தி பிரசார சபா பெயர்ப் பதாகை கிழிப்பு, பாஜக கொடி எரிப்பு - பலர் கைது

திருச்சியில் உள்ள இந்தி பிரசார சபாவை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து இப் போராட்டத்தில் பங்கேற்ற சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் இந்தி பிரசார சபை முற்றுகை: சிறுமிகள், பெண்கள் உள்பட 100க்கு மேலானோர் கைது

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகத்துக்கு அதன் உரிமையை வழங்காமல் இழுத்தடிக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பைக் கண்டித்தும், தப்படித்துக் கொண்டும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டும் இந்த அமைப்பினர் பேரணியாக வந்தனர். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தி பிரசார சபா அருகே வந்தபோது, போராட்டக்காரர்கள் பாஜக கொடிகளில் கறுப்பு மை பூசி எரித்தனர். மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தினர்.

மற்றொரு பிரிவினர் ரயில் நிலைய பெயர்ப் பலகை போல தாங்கள் தயார் செய்து கொண்டு வந்திருந்த பதாகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை கறுப்பு மை கொண்டு அழித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமிகள், பெண்கள் உட்பட நூறுக்கும் அதிகமானோரை வலுக்கட்டாயமாக காவல்துறையினரை கைது செய்தனர்.

மற்றொரு பிரிவினர் திருச்சி தென்னுர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏறி இந்தி பிரசார சபாவுடைய பெயர்பலகையில் கறுப்பு மையை வீசியெறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்தி பிரசார சபா நுழைவு வாயிலின் மேலேறி அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பதாகையை கிழித்து எரிந்தனர்.

பெயர் பதாகையை கிழித்த அந்த இளைஞரை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

போராட்டக்காரர்களை காவல் துறையினர் தாக்கியதால் இருதரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: