மானுக்குப் பாலூட்டும் பிஷ்னோய் இனப் பெண்கள் - சல்மானை தண்டிக்கப் போராடியவர்கள்

  • நாராயண் பாரேட்
  • பிபிசிக்காக

கலைமான் வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு தண்டனை பெற்றுத் தரப் போராடிய பிஷ்னோய் சமூகத்தினர் மரங்களை பாதுகாக்க வேண்டும், எல்லா உயிர்களிடமும் பரிவு காட்ட வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தை கொண்டவர்கள். ராஜஸ்தானில் தார் பாலைவனப் பகுதியில் இவர்கள் வாழ்கின்றனர்.

பட மூலாதாரம், AFP/Getty Images

பிஷ்னோய் சமுதாய மக்கள் வன விலங்குகளையும், மரங்களையும் பாதுகாக்க தங்கள் வாழ்வை பணயம் வைக்கத் தயாராக உள்ளனர். அதனால்தான், மான் வேட்டையாடிய வெள்ளித்திரை நடிகர் சல்மான் வெளிச்சத்திற்கு வந்தார். அவருக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக அவர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்.

வனவிலங்குகளையும், மரங்களையும் பாதுகாப்பது அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளில் முக்கியமான ஒன்று.

பிஷ்னோய் சமுதாய மக்கள், பாலைவனத்தில் மட்டுமல்ல. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என பல இடங்களில் வசிக்கின்றனர்.

பிஷ்னோய் சமுதாயத்தின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் ராஜஸ்தானின் கேஜ்ட்லி கிராமத்தில் ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகிறது.

பிஷ்னோய் சமூகம்

பட மூலாதாரம், iStock

ஜோத்பூர் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஜஸ்வந்த் சிங் பிஷ்னோய் கூறுகிறார், "எங்கள் சமூகத்தை நிறுவிய ஜம்பேஷ்வர் ஜி, உயிர்களின் மீது கருணை காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். உயிர்கள் அனைத்திடமும் அன்பு காட்டவேண்டும் என்று ஜீவகாருண்யப் பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார். உயிர்கள் என்பது விலங்குகள் மற்றும் மரங்கள், தாவரங்கள் என அனைத்தையும் அடக்கியது. இதை தவறாமல் கடைபிடிப்பவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள்."

மன்னராட்சி காலத்திலும் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பிஷ்னோய்கள்.

பிஷ்னோய் சமுதாயத்தின் சுற்றுச் சூழல் ஆர்வலரான ஹனுமான் பிஷ்னோய் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சம்பவத்தைப் பற்றி கூறுகிறார். "1787இல் ஜோத்பூர் பிராந்தியத்தில் மரங்களை வெட்டுவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டபோது, பிஷ்னோய் சமுதாய மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ராஜா அபய் சிங்கின் ஆட்சியின்கீழ் ஜோத்பூர் இருந்தது".

ஜோத்பூர் முன்னாள் எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் பிஷ்னோய் கூறுகிறார், "அந்த நேரத்தில் எழுப்பப்பட்ட முழக்கம் இது, 'எங்களை வெட்டினாலும் பரவாயில்லை, மரத்தை வெட்டக்கூடாது'".

மரத்தைக் காக்க உயிர்த் தியாகம்

ஜஸ்வந்த் பிஷ்னோய் மேலும் கூறுகிறார், "அரசரின் பணியாட்கள் மரங்களை வெட்டுவதற்கு வந்தபோது, ஜோத்பூரின் கேஜ்ட்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடுமையான எதிர்த்தனர்."

பட மூலாதாரம், AFP/Getty Images

"அந்த நேரத்தில் பிஷ்னோய் சமுதாயத்தின் அம்ருதா தேவி, அரசரின் ஆட்களை தடுத்து நிறுத்த முயன்றார். மரத்திற்கு பதிலாக அரசரின் பணியாட்கள் அம்ருதா தேவியை வெட்டிக் கொன்றார்கள்."

"இந்த போராட்டத்தில், பிஷ்னோய் சமுதாயத்தில் 363 பேர் மரங்களை காப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர், அதில் 111 பெண்களும் அடங்குவார்கள்."

"இந்த உயிர் தியாகங்களை நினைவுகூரும் வகையில் கேஜ்ட்லியில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுகிறது. தங்கள் முன்னோர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர் பிஷ்னோய் மக்கள்."

"தங்கள் சமூகத்தினரின் தியாகத்தை நினைவுகூர்வதற்காக மட்டுமல்ல, புதிய தலைமுறையினர் வனவிலங்குகளையும் மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுப்பதற்காகவும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது."

பிஷ்னோய் சமுதாயத்தின் குரு

குரு ஜம்பேஷ்வர் 1451 இல் பிறந்தார். பிகானீர் மாவட்டத்தில் குரு ஜம்பேஷ்வர் பிறந்த சமர்தல் என்ற இடம் பிஷ்னோய் சமுதாயத்தின் புனிதத் தலம் ஆகும்.

பட மூலாதாரம், Youtube

அந்த பகுதியில் மகாம் என்ற இடத்தில் குரு ஜம்பேஷ்வரின் சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கும் விழா நடைபெறுகிறது.

மார்வாட் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கண்காணிப்பாளர் முன்ஷி ஹர்தயாள், பிஷ்னோய் சமூகம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

"பிஷ்னோய் சமுதாயத்தை நிறுவிய ஜம்போ ஜி பன்வார் ஒரு ராஜபுத்திரர். 1487ஆம் ஆண்டில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டபோது அவர் மக்களுக்கு மகத்தான சேவையாற்றினார்."

"அந்த சமயத்தில், ஜாட் சமுதாயத்தை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அவரால் ஈர்க்கப்பட்டு பிஷ்னோய் மதத்தை ஏற்றுக்கொண்டனர்."

'இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரம் ஜம்போஜி என்று பிஷ்னோய் சமுதாயத்தினர் நம்புகின்றனர் என்று முன்ஷி ஹர்தயால் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிஷ்னோய் மக்கள் தங்களது ஆன்மீக குருவான ஜம்பேஷ்வர் என்ற ஜாம்போஜியின் 29 கொள்கைகளை கடைப்பிடித்து வாழ்கின்றனர். பிஷ் என்றால் இருபது என்றும் 'னோய்' எனும் சொல்லிற்கு ஒன்பது என்றும் பொருள். அதாவது 29 கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த சமூகத்தினர் வாழ்கின்றனர்.

"ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பிஷ்னோய் இன மக்கள், இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் சில இடங்களில் மட்டுமே இறந்தவர்கள் எரியூட்டப்படுகிறார்கள்."

பட மூலாதாரம், iStock

பாலைவனத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்கும் பிஷ்னோய் சமுதாய மக்கள் மான் வேட்டையாடும் சல்மானுக்கு எதிராக போராடினார்கள்.

மானுக்குப் பாலூட்டும் தாய்மார்கள்

பிஷ்னோய் இன பெண்களிடம் ஒரு அபூர்வமான பழக்கம் உள்ளது. அங்கு தாய்மார்கள் மானுக்கு பாலூட்டுவது இயல்பாக பார்க்கக்கூடிய காட்சி என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

தாய் மான் ஒன்று இறந்துவிட்டால், அனாதையாகும் மான் குட்டிகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மூன்று மாதங்களுக்கு பிறகே குட்டிகளை காட்டில் விடுவார்கள்.

"பிஷ்னோய் மக்களுக்கும் கானகத்திற்குமான உறவு பிரிக்க முடியாத பந்தம்" என்று கூறுகிறார் முன்னாள் எம்.பி. பிஷ்னோய்.

அதனால்தான் திரை நட்சத்திரங்களின் ஒளியால் பாதிக்கப்படாமல், தங்கள் இனத்தின் கொள்கைகளை கடைபிடித்தார்கள் இந்த பாலைவன மக்கள். பாலைவனத்தில் கானல்நீர் மாயத்தோற்றமாக இருக்கலாம். ஆனால் உறுதியையும், நம்பிக்கையையும் கானல்நீராக்காமல், தைரியத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் போராடினார்கள் பிஷ்னோய் சமூகத்தினர்.

பட மூலாதாரம், iStock

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பே இவர்களின் வாழ்வாதாரம் என்றாலும், காலப்போக்கில் பிஷ்னோய் சமூகத்தினரும் வியாபாரம், வேலை என பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிஷ்னோய் சமுதாயத்தை சேர்ந்த ஹனுமான் பிஷ்னோய் கூறுகிறார், "எங்கள் குரு இயற்கையை மதிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். நாங்கள் சக உயிரினங்களை மதிக்கிறோம்."

"ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி மதிப்பு மிக்கதோ, அதேபோல் இயற்கையும் மதிப்பு மிக்கது. அதற்கு பாதுகாப்பு கொடுப்பது அவசியம்."

ஹனுமான் பிஷ்னோய் கூறுகிறார், "ஜம்போஜியின் வாழ்க்கை மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட வேறுபல சாதிகளை சேர்ந்த மக்களும் பிஷ்னோய் சமூகத்தை ஏற்றுக்கொண்டு எங்கள் இனத்தவராக மாறிவிட்டார்கள்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: